வெள்ளி, 31 டிசம்பர், 2021

நீ நான் தாமிரபரணி நாவல்


என்.கணேசன் எழுதிய முதல் நாவல் நீ நான் தாமிரபரணி. இந்த நாவல் அச்சு நூலாக வெளிவந்தது ஏப்ரல் 2015ல். ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த நாவல் இப்போதும் விற்பனையில் உள்ளது. விலை ரூ.280/-
 


நூல்குறிப்பு:

காதல், பாசம், குடும்பம், நட்பு ஆகிய உன்னதங்களுடன் மர்மங்களும் பிரதானமாகப் பின்னி இழையோடும் இந்தக் கதைக்களம் தமிழ் நாவல் உலகுக்கு மிகவும் புதுமையானது.

ஒரு நாவல் புகழின் உச்சாணிக்கொம்பில் இருக்கும் காலத்தில் திடீரென்று அந்த நாவலாசிரியர் மர்மமான முறையில் காணாமல் போய் விடுகிறார். அவர் பற்றி துப்பறிய முனைபவர்கள் அச்சுறுத்தப்பட்டு தடுக்கப்படுகிறார்கள். மீறிய ஒருவர் பொய் வழக்கில் சிறை சென்ற பிறகு பின் வாங்குகிறார். அவர் 25 வருடங்கள் கழிந்த பின், பெரிய பத்திரிக்கையாளராகி, அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பைத் தன்னிடம் பணி புரியும் திறமையான இளைஞனிடம் ஒப்படைக்கிறார். ரகசியம் அந்த நாவலிலேயே மறைந்து இருக்கிறதென்று கண்டுபிடிக்கும் அவனுக்கும் பலத்த எதிர்ப்பு மறைமுகமாகப் பல வழிகளில் வருகிறது. அதையும் மீறி, ரகசியத்தில் அவனும் ஒரு அங்கம் என்பதை அறியாமல், பல திருப்பங்களுடன் அவன் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் பாணியும் நிகழ்வுகளும் மிக விறுவிறுப்பும் சுவாரசியமுமானவை. 



வாசகர்களுக்காக “நீ நான் தாமிரபரணி”யின் இரண்டு அத்தியாயங்கள் இங்கே இலவசமாகத் தரப்பட்டுள்ளது.




நீ நான் தாமிரபரணி
                             
என்.கணேசன்

1


-------------------------------------------------------------

  The danger does not lie in failing to reach absolute perfection.  It lies in giving up the chase.
                                                                        -Charles Moore        
---------------------------------------------------------------------------------------------------

      அருண் உள்ளே நுழைந்த போது அம்பலவாணன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.  அறையின் சுவரில் தங்கத் தகட்டின் மீது எழுதப் பட்டிருந்த "சத்யமேவ ஜயதே" என்ற வடமொழி வாக்கியத்தில் அவர் கவனம் லயித்திருந்தது.  சத்தியம் எல்லா சமயங்களிலும் ஜெயிக்குமோ?...  இந்த உலகம் சத்தியத்தை ஜெயிக்க விடுமா?

      "சார்" அருண் அழைக்க அவர் கவனம் கலைந்தது.

      "உட்கார்" என்ற அம்பலவாணன் தன் பத்திரிக்கையின் பெரும் பலமாகத் திகழும் அருணைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்.

     அந்தப் புன்முறுவலுக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உண்டு.  மிக மிகக் கஷ்டமான வேலையை அவனிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று அர்த்தம்.  அருண் உடனே உற்சாகமானான்.  "சொல்லுங்கள் சார்".

     அந்த உற்சாகம் தான் அவனது தனித் தன்மை.  எதுவும் என்னால் முடியாததல்ல, எதையும் சாதிப்பேன் என்ற தன்னம்பிக்கையோடு ஏற்படும் உற்சாகமது.  அவன் அவரது "உண்மை" பத்திரிக்கையில் சேர்ந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த உற்சாகம் குறைந்து அவர் பார்த்ததில்லை.  அவன் வேலைக்காக வந்த போது அவன் விளையாடுகிறான் என்று தான் அவர் நினைத்தார்.  

பிரபல தொழில் மேதையும், கோடீசுவரருமான ராஜராஜனின் ஒரே மகன் அவரது பத்திரிக்கைக்காக ரிப்போர்ட்டர் வேலைக்கு வருவது நம்ப முடியாத ஒன்றாகப் பட்டது.  அதை வாய் விட்டு அவனிடம் சொல்லவும் செய்தார்.  அவன் முகம் இறுகி ஒரே வார்த்தையில் சொன்னான். "அப்பா பிசினசுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை சார்".  அன்றிலிருந்து இன்று வரை அவன் தன் தந்தையைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை.

    ஒரு முறை ராஜராஜனை ஒரு பொது நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்த போது அம்பலவாணன் அவரிடம் சொன்னார்.  "சார்! உங்க மகன் உங்களை மாதிரியே நல்ல சூட்டிகை.  ஒரு காரியத்தை அவனிடம் கொடுத்தால் அதை வெற்றிகரமாக முடிக்காமல் திரும்பி வருகிற பழக்கம் இல்லை."

    லேசாகத் தலையசைத்து விட்டு தன் மறு பக்கத்தில் அமர்ந்திருந்த மந்திரி ஒருவரிடம் பேச ஆரம்பித்த ராஜராஜன் நிகழ்ச்சி முடிகிற வரை அம்பலவாணன் பக்கம் திரும்பவேயில்லை.

    தந்தைக்கும் மகனுக்கும் இடையே சுமுகமான உறவில்லை என்பது மட்டும் அம்பலவாணனுக்குப் புரிந்தது.  எது எப்படியாக இருந்தாலும் அருணைப் போன்ற ஒரு திறமைசாலி கிடைத்தது தன் பாக்கியம் என்றே அம்பலவாணன் நினைத்தார்.

    "சார்! என்ன கனவா?" என்று கேட்ட அருண் சிரித்தான்.  அவன் சிரித்த போது மிக அழகாக இருந்தான். அசப்பில் அவன் தன் தந்தையைப் போலவே இருந்தாலும் அவர் சிரிப்பது அபூர்வமென்றால், அவன் சதா புன்னகையோடே இருப்பான். அந்த அலுவலகத்திற்கு வரும் இளம் பெண்கள் அவன் கண்ணில் பட வேண்டும் என்று படாத பாடு படுவதை அம்பலவாணன் பல முறை பார்த்திருக்கிறார். 

    "கனவல்ல, அருண்" என்று சமாளித்த அம்பலவாணன் தான் அவனை அழைத்த விஷயத்தை எங்கிருந்து ஆரம்பித்து அவனிடம் எப்படி சொல்வது என்று யோசித்து விட்டு பின் ஆரம்பித்தார்.

    "சுமார் 25 வருஷங்களுக்கு முன் மூன்று நாள் நான் ஜெயிலில் இருந்தேன் தெரியுமா அருண்"

    அருண் முகத்தில் திகைப்பு தெரிந்தது.

    "காரணம் என்ன தெரியுமா? இந்தப் புத்தகம் தான்" என்று சொன்ன அம்பலவாணன் ஒரு தடிமனான நாவலை எடுத்து மேசை மீது வைத்தார்.  "நீ நான் தாமிரபரணி" என்று கொட்டை எழுத்தில் பெரியதாக நாவலின் பெயரும், கீழே சிறிதாக "சேதுபதி" என்று ஆசிரியர் பெயரும் தெரிந்தது.

    அந்த நாவல் மிகப் பிரபலமானது. அது இலக்கிய வகையைச் சார்ந்தது என்றும் சேதுபதியின் மாஸ்டர்பீசென்றும் பலர் சொல்ல அருண் கேள்விப் பட்டிருக்கிறான்.  ஆனால் படித்ததில்லை.  முப்பதாவது பதிப்பு தற்போது வெளியாகி வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. அந்த நாவலாசிரியர் சேதுபதி திடீரென ஒரு நாள் தலைமறைவாகி விட்டார் என்றும் அந்த சூழ்நிலை பற்றி இன்னமும் பல கேள்விக்குறிகள் இருக்கின்றன என்றும் அவன் அறிவான். ஒரு பிரபல டைரக்டர் அதைத் திரைப்படமாக்க வேண்டும் என்பதே தன் நீண்ட நாள் லட்சியம் என்று சொல்லி இருந்ததைக் கூட அவன் படித்திருக்கிறான்.  ஆனால் அந்த நாவல் எப்படி அம்பலவாணனை சிறையில் அடைத்தது என்று புரியாமல் அருண் சொன்னான். "எப்படி சார்?"

    "இந்த நாவலைச் சுற்றி நிறைய மர்மம் இருந்தது அருண்.  இன்னமும் இருக்கு. அதைக் கண்டு பிடிக்க நான் முயற்சி செய்தேன். அது தான் என்னை ஜெயில் வரை கூட்டிட்டு போய் விட்டது"

    "சார், புதிர் போடாமல் முழுவதும் சொல்லுங்க" என்று மிக ஆர்வத்துடன் அவன் கேட்க அவர் ஆரம்பித்தார்.

    "இந்த நாவல் வெளியாகும் வரை சேதுபதியை யாருக்குமே தெரியாது.  வெளியான பிறகோ அவரைத் தெரியாதவர்களே கிடையாது என்று ஆகி விட்டது அருண்.  எங்கே பார்த்தாலும் அந்த நாவலைப் பற்றியே பேச்சு. அந்த சேதுபதி எழுதிய முதலும் கடைசியுமான ஒரே நாவல் இது தான்.  இதை நீ படிச்சிருக்கியா?"

    இல்லை என்று அருண் தலையசைத்தான்.

    "இதை நான் பல தடவை படிச்சிருக்கேன் அருண்.  ஒரு அழகான காதல் காவியம் இது.  இது சேதுபதியை புகழின் உச்சாணிக் கொம்பிற்கே கொண்டு போய் விட்டது.  நம் பத்திரிக்கை உட்பட பல பத்திரிக்கைகள் அவரைத் தங்கள் பத்திரிக்கைகளில் எழுதச் சொல்லி வற்புறுத்தினார்கள்.  அவர் ஏனோ பெரிய ஆர்வம் காட்டவில்லை.  பல பரிசுகள், விருதுகள் கிடைத்த பின்னால் ஒரு நாள் திடீர் என்று சேதுபதி காணாமல் போய் விட்டார்...."

    "முழு விவரங்கள் தெரியா விட்டாலும் அது பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன் சார்"

    "அந்த நாளை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது அருண். சேதுபதியைப் பாராட்டி பத்திரிக்கையாளர்கள் விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தோம் அருண்.  நான் தான் விழா பொறுப்பாளன்.  அது ஒரு பெரிய விழா. ஆயிரக் கணக்கில் ஆட்கள் வந்திருந்தார்கள்.  விழா ஆரம்பித்ததில் இருந்தே சேதுபதி ஒரு மாதிரியாக நிலை கொள்ளாமல் இருந்தார்.  எதோ ஒன்று அவரை நிறையவே பாதித்த மாதிரி இருந்தது அருண். அதை என்னால் உணர முடிந்தது.  அந்த நேரத்தில் தான் அவருக்கு ஒரு போன் கால் வந்தது.  நாங்கள் விழா ஏற்பாடு செய்திருந்த அரங்கத்தில் ஆபிஸ் ரூமில் போன் கால் வந்ததை ஒரு வேலையாள் வந்து சொன்னான்.  அவரைத் தொந்திரவு செய்ய விரும்பாமல் நான் தான் முதலில் போய் போனில் பேசினேன்.  போனில் பேசிய ஆள் அது ஒரு எமர்ஜென்சி கால் என்றும் சேதுபதியிடம் தான் பேச வேண்டும் என்றும் சொன்னான்.  அங்கிருந்து கேட்ட சத்தங்களை வைத்து அந்த கால் ஒரு ஆஸ்பத்திரியில் இருந்து தான் வருகிறது என்று யூகித்தேன்.  அவரிடம் போய் சொன்னேன்..."

    மேசை மீதிருந்த டம்ளரில் தண்ணீரை நிரப்பி குடித்து விட்டு அம்பலவாணன் மறுபடி தொடர்ந்தார்.

    "அவர் பேசுவதற்கு முந்தைய ஆள் அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்தார். பேசி விட்டு உடனே வருவதாய் சொல்லி விட்டுப் போனார்.  போய் பேசினார்.  ஏதோ ஒன்று என்னையும் அவரைப் பின் தொடர வைத்தது அருண்.  அவர் போனை எடுத்து 'ஹலோ' என்று ஒரே வார்த்தை தான் சொன்னார்.  அந்தப் பக்கத்தில் இருந்து பேசியதை ஒரு வார்த்தை கூட பதில் சொல்லாமல் கேட்டார்.  பிரமை பிடித்தவர் போல ரிசீவரை வைத்தவர் திரும்பவும் மேடையேறவில்லை. அவர் அங்கிருந்து போய் விட்டார்.  நான் எத்தனையோ சொல்லியும் அவர் காதில் என் வார்த்தைகள் விழுந்த மாதிரி தெரியவில்லை.  நடைப் பிணமாய் அந்த அரங்கத்தை விட்டுப் போனவர் ஒரு காரியம் செய்தார். பேனாவைத் தூக்கி வீசினார்.  அது தான் நான்  அவரைக் கடைசியாகப் பார்த்தது. அன்றைய நாளுக்குப் பின் யாருமே இன்று வரை அவரைப் பார்த்ததாகத் தகவல் இல்லை அருண்".



2

------------------------------------------------------------------------------------------------------------------
ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்;
மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்.                                             கண்ணதாசன்
------------------------------------------------------------------------------------------------------------------

     மிக ஆர்வத்துடன் தன் பேச்சைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருக்கும் அருணைக் கூர்ந்து பார்த்தார் அம்பலவாணன்.  அவனிடம் அவர் கண்ட இதே ஆர்வம், உள்ளே ஒரு அக்னி அவரிடமும் அந்தக் காலத்தில் நிறையவே இருந்தது.  ஆனால்....

     ஒரு பெருமூச்சு விட்டபடி அம்பலவாணன் தொடர்ந்தார். "சேதுபதி திடீரென்று காணாமல் போனது எல்லோரையும் ஒரு கலக்கு கலக்கியது. அவரை அன்றிரவு ரயில்வே ஸ்டேஷனில் பார்த்ததாக, பஸ் ஸ்டேண்டில் பார்த்ததாக பல விதமான வதந்திகள் தொடர்ந்து வந்தாலும் எந்த ஒரு தகவலும் உபயோகமாய் இருக்கவில்லை. சுமார் பத்து நாட்கள் எல்லா பத்திரிக்கைகளிலும் சேதுபதி செய்தி தான் தலைப்புச் செய்தியாக இருந்தது.  பிறகு ஒரு பிரபல நடிகை ஒரு அரசியல் பிரமுகரைக் கல்யாணம் செய்து கொண்டது தலைப்புச் செய்தியாக வந்தது.  மக்கள் கவனம் சுலபமாகத் திசை திரும்பியது.  சேதுபதி விஷயம் பின்னால் தள்ளப்பட்டது.  மெள்ள மெள்ள பலரும் அவரை மறந்து போனார்கள்.  என்னால் மட்டும் அவரை மறக்க முடியவில்லை அருண்"

     அம்பலவாணன் தொடர்ந்த போது அவர் வேறு உலகில் இருப்பது போல் அருணிற்குத் தோன்றியது.  அவர் குரலில் புதிய உணர்ச்சிப் பிரவாகம் இருந்தது.  "ஒரு நல்ல கலைஞன் ஒரு அற்புதமான படைப்பு ஒன்று படைத்து விட்டு அதோடு திருப்திப் பட்டுக் கொண்டு இருந்து விட முடியாது, அருண்.  கலையின் தன்மை அவனை அப்படி இருக்க விடாது.  ஆனாலும் சேதுபதி விஷயத்தில் அது நடந்து இருக்கிறது.  அவர் அந்த நாவல் தவிர வேறு எதையும் எழுதாததும், திடீரென்று ஒரு நாள் பேனாவைத் தூக்கி எறிந்து விட்டுத் தலை மறைவானதும் எனக்கு ஜீரணிக்க முடியாததாகவே இருந்தது.  நான் சேதுபதி பற்றி விசாரித்து துப்பு துலக்க ஆரம்பித்தேன்"

    "அப்போது நான் ஒரு பிரபல பத்திரிக்கையில் துணை ஆசிரியராக இருந்தேன்.  எனக்கு நிறைய பத்திரிக்கை நண்பர்களும் இருந்தார்கள்.  என் தேடலில் அவர்களும் ஆரம்பத்தில் இருந்தார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பின் வாங்கினார்கள்.  சேதுபதி விஷயத்தில் தலையிடாமல் இருப்பது தான் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பு என்று பெரிய பெரிய இடங்களில் இருந்து மிரட்டல் வந்ததென்றார்கள்.  என்னையும் இதிலிருந்து பின் வாங்கச் சொன்னார்கள். எனக்கும் ஒரு மந்திரியிடமிருந்து மறைமுக மிரட்டல் வந்தது.  ஆனால் நான் பின் வாங்கவில்லை. அந்த சமயம் என் பத்திரிக்கை ஆசிரியரும் எனக்கு ஆதரவாக இருந்தார்"  

    "பத்திரிக்கையில் சேதுபதி பற்றி துப்பு தருபவர்களுக்கு ஒரு நல்ல தொகை தருவதாக விளம்பரம் செய்தோம்.  பல பேர் ஏதேதோ தகவலுடன் வந்தார்கள்.  ஆனால் எதுவுமே உருப்படியாக இருக்கவில்லை.  ஒரு நாள் எனக்கு ஒரு போன் கால் வந்தது. யாரோ ஒரு கிராமத்தான் போன் செய்தான்.  சேதுபதி பற்றியும், அந்த நாவல் எழுதப் பட்ட சூழ்நிலை பற்றியும் தனக்கு எல்லாமே தெரியும் என்றும், அந்த தகவல்கள் எல்லாம் அந்த நாவலை விட சுவாரசியமானவை என்றும் சொன்னான்.  அவன் சொன்னதில் உண்மை இருப்பதாக என் உள்ளுணர்வு சொல்லியது.  நேரில் வரச் சொன்னேன்.  மறுநாள் வருவதாகச் சொன்னான்"

    அருண் நாற்காலியின் நுனியில் உட்கார்ந்திருந்தான்.  எல்லாமே சுவாரசியமாக இருந்தது.

   "மறுநாள் அவன் வருவதற்கு முன் போலீஸ் வந்தது. என்னைக் கைது செய்தது.  பேட்டி எடுக்கப் போன இடத்தில் ஒரு பெரிய மனிதர் வீட்டில் ஏதோ திருடி விட்டேனாம்.  வைர மோதிரமோ எதுவோ சொன்னார்கள்.  மூன்று நாள் லாக்கப்பில் இருந்தேன்.  நான் கைதான செய்தி எங்கள் பத்திரிக்கை உட்பட எந்தப் பத்திரிக்கையிலும் வவில்லை அருண்.  என்னை பார்க்க எங்கள் பத்திரிக்கை ஆசிரியர் மூன்றாவது நாள் வந்தார்.  எல்லாவற்றையும் விட்டுவிடுவது தான் நல்லதென்றார்.  நினைத்ததை விடப் பெரிய தலைகள் எல்லாம் சம்பந்தப் பட்டிருப்பது போல இருக்கிறதென்றும் மேலும் தொடர்ந்தால் பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்துவது கூடக் கஷ்டமாக இருக்கும் என்றும் அபிப்பிராயப் பட்டார். நான் விட்டு விட்டேன், அருண்.  அவர்களும் கேஸ் எதுவும் இல்லாமல் என்னை ரிலீஸ் செய்து விட்டார்கள்"

   அவன் கண்கள் தன்னைக் குற்றம் சாட்டுவதைக் கண்ட அம்பலவாணன் தன் பார்வையைக் குற்ற உணர்வுடன் அவன் முகத்தில் இருந்து விலக்கினார்.  அவர் கண்கள் அறை சுவரில் இருந்த "சத்யமேவ ஜெயதே"வில் ஒரு கணம் தங்கியது.  கரகரத்த குரலில் அவர் தொடர்ந்தார்.  "எனக்கு மூன்று பெண்கள், நோயாளி அம்மா, சதா அழுது புலம்பும் மனைவி இருந்த சூழ்நிலை அது அருண்.  பணத்தோடும் அதிகாரத்தோடும் போராடித் தாக்குப் பிடிக்கும் நிலையில் நானிருக்கவில்லை.  எனக்கு ஆதரவாய் யாரும் அன்று இருக்கவில்லை.  அன்றிலிருந்து மனதில் ஒரு நெருஞ்சி முள்!"

   அருண் மனம் இளகியது.  வறுமை எத்தனை விஷயங்களை வாழ்க்கையில் தீர்மானிக்கிறது என்பதை அவனால் உணர முடிந்தது.

   "அப்படியென்ன ரகசியத்தை நீங்கள் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று அவர்கள் உங்களைத் தடுத்து நிறுத்தினார்கள்" என்று யோசித்தபடி அருண் கேட்டான்.

   "தெரியலை அருண்! ஒரு வேளை அன்று போனில் பேசியவன் நேரில் வந்திருந்தால் எல்லாமே தெரிந்திருக்கலாம்.  ஆனால் அவன் வருவதற்கு முன்னாலேயே எல்லாம் நின்று போய் விட்டது.  ஒரு வேளை அவன் வந்தானா என்று கூட எனக்குத் தெரியாது.  வந்து என் கைது விஷயம் தெரிந்து பின் வாங்கி போயிருக்கலாம்.  எனக்குத் தெரியலை.  ஆனால் போனில் பேசிய போது அவன் சேதுபதிக்கு இணையாய் அந்த நாவலுக்கும் முக்கியத்துவம் கொடுத்த மாதிரி எனக்குப் பட்டது.  அந்த நாவலும் சேதுபதியும் அதன் பின் ஒரு புதிராகவே தங்கி விட்டனர், அருண். ஏழு வருஷத்துக்கு முன் நான் இந்த "உண்மை" பத்திரிக்கை ஆரம்பித்த நாளில் இருந்து என் மனதில் ஒரே ஒரு ஆசை.  அன்றைக்குத் தோற்ற விஷயத்தில் ஒரு நாள் ஜெயிக்கணும்.  அந்த சேதுபதி பைல் மறுபடி திறக்கணும். அந்த உண்மைகள் வெளி வரணும்"

   "சார் 25 வருஷங்கள் முடிந்து விட்ட இந்த சந்தர்ப்பத்தில் எத்தனையோ நடந்திருக்கலாம்.  அந்த சேதுபதி இறந்து போய் இருக்கலாம்.  உண்மைகள் தெரிஞ்சவங்க பலரும் இறந்து போயிருக்கலாம்....."

   "நீ சொல்வது உண்மை அருண். என்னை மறைமுகமாய் மிரட்டிய மந்திரி கூட ஐந்து வருஷம் முன்னால் இறந்துட்டார். சேதுபதி உட்பட பலரும் இன்றைக்கு இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் அந்த நாவல் சாகவில்லை அருண்.  அது பற்றி தெரிந்த சிலராவது இன்னும் எங்கோ ஒரு மூலையில் இருக்கலாம். நீ கண்டு பிடித்து நம் பத்திரிக்கையில் எல்லா உண்மைகளும் வெளிவர முயற்சி செய்வாயா அருண்"

   அருண் உறுதியாகச் சொன்னான். "இன்னும் சிறிது நாளில் எல்லா உண்மைகளும் அடங்கிய பைல் உங்கள் மேசையில் இருக்கும் சார்"

   அம்பலவாணன் முகம் பிரகாசித்தது.  இவன் போல் பத்து பேர் உடன் இருந்தால் இந்த உலகையே ஜெயிக்கலாம் என்று தோன்றியது.

   "நீ முதலில் இந்த நாவலைப் படி. இதில் உனக்கு நிறைய தகவல்கள் கிடைக்கலாம்" என்று சொல்லி அந்த நாவலை அவன் கையில் கொடுத்தவர் அவன் அறையை விட்டு வெளியேறிய பின்னும் அந்தக் கதவையே பார்த்தபடி இருந்தார்.

   லேசாக மனம் உறுத்தியது.  அவனிடம் அவர் தனக்கு பின்பு தெரிய வந்த ஒரு சில விஷயங்களை சொல்லாமல் விட்டு விட்டார். சொல்கின்ற துணிவு அவரிடம் இருக்கவில்லை.  ஒரு வேளை அவன் மறுத்து விடுவானோ என்ற பயம் மனதின் ஒரு மூலையில் இருந்து பயமுறுத்தியது தான் காரணம்.  ஒரு காலத்தில் இருந்த அந்த நேர்மை இன்று தன்னிடம் இல்லை என்று மனசாட்சி குற்றம் சாட்டியது.  அந்த அறையில் கடிகார சத்தம் மட்டும் கேட்க நிறைய நேரம் அவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.

ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV



(அல்லது)


இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 


நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

                                                 

 

இந்த நூல் அமேசான் கிண்டிலிலும் வெளியாகியுள்ளது. அமேசான் கிண்டில் வாசகர்களும், மின்னூல் ஆகப் படிக்க விரும்புபவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

லிங்க் : https://www.amazon.in/dp/B09PHS8YMQ


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

புத்தம் சரணம் கச்சாமி நாவல்



 

அமானுஷ்யன் நாவலின் இரண்டாம் பாகமாகவும், தனிநாவலாகவும் படிக்கப்படக்கூடிய, என்.கணேசனின் இந்த நாவலும் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியான மகத்தான நாவல். 2016 ஜூனில் வெளியான இந்த நாவலின் முதல் பதிப்பு முற்றிலும் விற்றுத் தீர்ந்து விட்ட நிலையில் மறுபதிப்பு என்.கணேசன் புக்ஸால் செப்டம்பர் 2022 ல் வெளியாகியுள்ளது. 608 பக்கங்கள் உள்ள இந்த நாவல் சஸ்பென்ஸ், த்ரில்லர் மட்டுமல்லாமல் தத்துவம், மன அமைதியையும் மிக ஆழமாய் உணர்த்தக்கூடியது.  விலை ரூ.700/- 


அமேசானில் வாங்க லிங்க் https://www.amazon.in/dp/8195612830?ref=myi_title_dp


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அனைத்து நூல்களின் விவரங்கள் அறிய  -

என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


வெளிநாட்டு மற்றும் மின்னூல் படிக்கும் வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று அமேசான் கிண்டிலில், எழுத்தாளர் வெளியிட்டிருக்கிறார்.  

லிங்க் : https://www.amazon.in/dp/B09NMHSGR3

நூல் குறிப்பு

திபெத்தில் இரகசியமாக வளர்ந்து வரும் புத்தரின் அவதாரமான சிறுவன் மைத்ரேயன் எதிரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட உள்ள நிலையில் தலாய் லாமா அவனைக் காப்பாற்ற இந்தியாவில் உள்ள அமானுஷ்யன் உதவியை நாடுகிறார். சீன உளவுத்துறை ஒருபுறம், சைத்தானின் அவதாரமான மாராவின் கோஷ்டி மறுபுறம் பின் தொடர அவர்களிடமிருந்து மைத்ரேயனைத் தந்திரமாய் காப்பாற்றி இந்தியா அழைத்து வரும் அமானுஷ்யன் ஒரு கட்டத்தில் மைத்ரேயனோடு சேர்த்து தன் மகனையும்  எதிரிகளிடம் இழக்கும் சூழல் உருவாகிறது. முடிவில் யார் எப்படி வெல்கிறார்கள் என்பதைப் பல திகைக்க வைக்கும் திருப்பங்களுடன் விறுவிறுப்பாகச் சொல்கிறது இந்த நாவல். 

பரபரப்பும் விறுவிறுப்பும் மட்டுமல்லாமல் இந்த நாவலில் எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் கலையும் பின்னிப் பிணைந்திருக்கிறது.


வாசகர்களுக்காக புத்தம் சரணம் கச்சாமி நாவலின் முதலிரண்டு அத்தியாயங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.


புத்தம் சரணம் கச்சாமி!

என்.கணேசன்

                               1                                    

ட்சுக்லகாங்க் திருக்கோயில், தர்மசாலா, ஹிமாசலப்பிரதேசம்.

பெருமழை பெய்து அப்போது தான் ஓய்ந்திருந்தது. ஆனால் எந்த நிமிடமும் மழை மீண்டும் பெய்ய ஆரம்பிக்கலாம். ஜுலையில் ஆரம்பித்து செப்டம்பர் இரண்டாம் வார இறுதி வரைக்கும் இப்பகுதியில் மழைக்காலம் தான். இந்த தொடர் மழை, தலாய் லாமாவின் உதவியாளனாக பணிபுரியும் சோடென்னுக்கு சிறிதும் பிடித்தமானதல்ல. சொல்லப் போனால் சகிக்க முடியாதது. ஜூன் மாதம் முடிவு வரை சீதோஷ்ண நிலை மிக ரம்மியமாக இருக்கும். இங்கு நிறைய ஆட்கள் வருவார்கள். அதனால் பொழுதும் நன்றாகப் போகும். மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலோ அதில் பாதி ஆட்கள் கூட வர மாட்டார்கள்.

இப்போது கூட ட்சுக்லகாங்க் கோயிலில் புத்தர் சிலை முன் தலாய் லாமாவுடன் பிரார்த்தனைக்குக் கூடியிருந்தவர்கள் 20 பேர் தான். அதிலும் 7 பேர் கோயிலைச் சேர்ந்த புத்த பிக்குகள். மீதி 13 பேரில் 5 பேர் வெளிநாட்டுப் பயணிகள். அமெரிக்கர்களாகவோ, ஐரோப்பியர்களாகவோ இருக்கலாம். 2 பேர் உள்ளூர்வாசிகள். 6 பேர் ஜப்பான் மற்றும் கொரியாவில் இருந்து வந்திருந்த புத்த பிக்குகள்....

திடீரென்று 21 வது ஆள் திருக்கோயிலுக்குள் நுழைந்தார். நாலரை அடி உயரம் தான் இருக்கும். பழுத்த கிழவர். புத்தபிக்கு. திபெத்தியர். அவன் நாட்டைச் சேர்ந்தவர். பொதுவாக எல்லோருக்கும் வெளிநாடுகளில் இருக்கும் போது தங்கள் நாட்டவரைக் கண்டால் மிக மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் சோடென் அதற்கு விதிவிலக்கானவன். அவனுக்கு அவனுடைய நாட்டு மக்களைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பாகவே இருந்தது. கிட்டத்தட்ட எல்லோரும் தரித்திரவாசிகள். இப்போது வந்திருந்த கிழ புத்த பிக்குவின் சிவப்பாடைகளிலும் இரண்டு கிழிசல்கள் தைக்கப்பட்டிருந்தது அவன் கண்களுக்குத் தென்பட்டது. ‘கிழியாத உடை கூடப் போட்டுக் கொள்ள முடியாத ஆட்கள் எதற்காக யாத்திரைக்குக் கிளம்ப வேண்டும்? தங்கள் தரித்திரத்தை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவா?’ என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டான். அவர் அவனைப் பார்த்து புன்னகைத்தார். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். ’பண உதவி ஏதாவது கேட்டாலும் கேட்கலாம்’. புன்னகை செய்வதே ஆபத்து!

கிழ பிக்கு புத்தர் விக்கிரகத்தைப் பார்த்து ஒரு நிமிடம் கண்களை மூடி நின்று விட்டு, பிரார்த்தனை செய்து கொண்டிருப்பவர்கள் பின்னால் தானும் உட்கார்ந்து கொண்டார். அந்த நேரத்தில் அவன் கைபேசியில் (மொபைல் போனில்) ஒரு குறுந்தகவல் வந்தது - ”வந்திருக்கிற புதிய ஆளைக் கவனி”.

சோடென் சுறுசுறுப்பானான். கிழ பிக்குவை கூர்மையாய் கவனித்தான். ’தரித்திரத்தைத் தவிர இந்த ஆளிடம் வேறெதோ விஷயமும் இருக்கும் போல் தெரிகிறதே!’ கிழவருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும். மற்றவர்கள் எல்லாரும் செய்து கொண்டிருக்கும் பிரார்த்தனையில் கிழ பிக்கு ஈடுபாடு காண்பிக்கவில்லை. சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்து சோடென்னையும் அவர் சுவாரசியத்துடன் பார்த்தார். சோடென் தன்னை அந்த ஆள் கூர்ந்து பார்ப்பதை ரசிக்கவில்லை. அவர் இவனைப் பார்க்கும் போது இவன் அவரைக் கவனிப்பது கஷ்டமான காரியம் என்பதால் அவரிடம் இருந்து பார்வையைத் திருப்பி வெளியே வேடிக்கை பார்த்தான். ஒரு நிமிடம் கழித்து மெள்ள பார்வையைத் திருப்பிய போதும் கிழ பிக்கு இவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

’என்னைப் பார்க்க வந்தீரா, புத்தரைப் பார்க்க வந்தீரா முட்டாள் பிக்குவே. புத்தரைப் பார்த்து வணங்கி போகிற காலத்திற்கு புண்ணியம் சேர்த்துக் கொண்டு போக வேண்டியது தானே’ என்று சோடென் மனதில் கறுவினான். அவன் அவரைப் பார்க்கையில் அவர் அவனைப் பார்த்து புன்னகை செய்தார். ஒரு புன்னகையே இவ்வளவு எரிச்சலைக் கிளப்ப முடியும் என்பதை அவன் அன்று தான் உணர்ந்தான்...

பிரார்த்தனை கால் மணி நேரத்தில் முடிந்தது. கூடியிருந்தவர்கள் தலாய் லாமாவுடன் சிறிது பேசினார்கள். ஆசிகள் வாங்கினார்கள். கிழ பிக்குவும் எழுந்து நின்று கொண்டார்.

தலாய் லாமாவின் இருப்பிடம் திருக்கோயிலுக்கு நேர் எதிரே உள்ள மாளிகை தான். அவர் தன்னிடம் பேசி ஆசி வாங்கினவர்களைப் பார்த்து புன்னகையுடன் கையசைத்து விட்டு இருபக்கங்களிலும் இரு பிக்குகளுடன் தன் மாளிகைக்குக் கிளம்பினார். அப்போது தான் அவர் அந்த கிழ பிக்குவைக் கவனித்தார். ஒரு கணம் அப்படியே சிலை போல நின்று விட்ட தலாய் லாமா பின் அந்தக் கிழ பிக்குவைப் பார்த்து பெரிதாகப் புன்னகைத்தார்.

“ஆசானே இது என்ன ஆச்சர்யம்” என்று வியப்புடன் கூறிய தலாய் லாமா அந்த கிழவரை ஆரத்தழுவிக் கொண்டார். தன்னருகே இருந்த பிக்குகளிடமும், அருகே வந்த சோடென்னிடமும் புன்னகையுடன் அறிமுகம் செய்தார். “இவர் எனக்கு ஆசிரியராக இருந்தவர்....”

அருகே இருந்த பிக்குகள் தலைதாழ்த்தி அந்த கிழ பிக்குவை வணங்க சோடென் வேண்டா வெறுப்பாக தானும் வணக்கம் தெரிவித்தான். மறு வணக்கம் செலுத்திய கிழ பிக்கு சோடென்னைப் பார்த்து மட்டும் ரகசியமாய் கண்ணடித்தார். நெருங்கிய நண்பர்களுக்குள் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டு கண்ணடிப்பார்களே அது போல. சோடென்னுக்குச் சே என்றாகி விட்டது. ‘என்ன விவஸ்தை இல்லாத கிழவர் இவர்’. அவன் உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

தலாய் லாமா அதைக் கவனிக்கவில்லை. அவர் தன் ஆசானிடம் யார் யாரைப் பற்றியோ திபெத்திய மொழியில் குசலம் விசாரித்துக் கொண்டே அவரைக் கூட்டிக் கொண்டு தன் மாளிகைக்கு நடக்க ஆரம்பித்தார். பின்னால் தொடர்ந்து போகும் போது சோடென்னுக்குக் கிழ பிக்குவைக் கவனிப்பது சுலபமாக இருந்தது. நிச்சயமாக தலாய் லாமாவை விட வயதில் மூத்தவராக இருக்கக் கூடிய கிழ பிக்குவின் நடையில் வயதின் தாக்கம் தெரியவில்லை. மற்றபடி கவனிக்க வேண்டிய வேறெந்த விஷயமும் இந்த ஆளிடம் இருப்பதாகத் தெரியவில்லை-சேட்டையைத் தவிர.

தலாய் லாமா தன் ஆசானை நேராகத் தன் தனியறைக்கு அழைத்துச் செல்ல கூட வந்த பிக்குகள் தங்கள் இடங்களுக்குப் போனார்கள். சோடென் இங்கு வேலைக்குச் சேர்ந்து முடிந்த இந்த பதினோராண்டு காலத்தில் தலாய் லாமா தன் தனியறைக்கு எந்த விருந்தினரையும் அழைத்துச் சென்றதில்லை. எத்தனை பெரிய ஆளானாலும் வரவேற்பறையோடு சரி. இப்போது குறுந்தகவல் அர்த்தமுள்ளதாகியது. என்னவோ இருக்கிறது!

சோடென் வேகமாய் தனதறைக்குப் போனான். அறைக்கதவையும் ஜன்னலையும் சாத்தி விட்டு தன் மேஜையின் கீழ் இருந்த ரகசிய பட்டனை அழுத்தினான். தலாய் லாமாவின் சோபாவின் அடியில் ரகசியமாய் பதிக்கப்பட்டிருந்த நூதனமான கருவி அங்கு பேசப்படுவதைப் பதிவு செய்து அவன் அறையில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பித்தது. தலாய் லாமாவின் குரல் பரபரப்புடன் கேட்டது.

“ஆசானே. நீங்களே வந்திருக்கிறீர்கள்.... ஏதாவது முக்கிய விஷயமா?”


தலாய் லாமா தன் பிள்ளைப் பருவ ஆசிரியரைப் பார்த்து பரபரப்புடன் கேட்ட கேள்விக்கு கிழ பிக்கு புன்னகையுடன் பதில் சொன்னார்.

“என்னை மறந்து விட்டு யாரும் நிம்மதியாய் இருக்கக் கூடாது என்ற கொள்கையுடன் வாழ்கிறவன் நான் டென்சின்”

தலாய் லாமா பேரன்புடன் தன் ஆசானைப் பார்த்து வாய் விட்டு சிரித்தார். இன்னமும் அவரை பெயர் சொல்லிக் கூப்பிடும் உரிமை படைத்த ஒரே மனிதர் இந்த ஆசிரியர் தான். அவர் மட்டுமல்ல திபெத்திய புத்தமதத்தின் முக்கிய நான்கு பிரிவின் தற்போதைய தலைமை லாமாக்களும் இந்த ஆசிரியரிடம் படித்தவர்கள் தான். திபெத்திய புத்தமத புனித நூல்களை கரைத்துக் குடித்தவராக கருதப்படும் இவரிடம் படித்த திபெத்திய பிக்குகளும், அறிஞர்களும் ஏராளம். அதனாலேயே இவரை ஆசான் என்று பலர் அழைக்க பின் அந்தப் பெயரே இவருக்கு சாசுவதமாகியது.

ஆசானுக்கு 93 வயதாகிறது. தலாய் லாமா இவரை இது வரையில் சோகமாக ஒரு முறை கூட பார்த்ததில்லை. உலகில் மாறாத விஷயங்களில் ஆசானின் புன்னகையும் ஒன்று என்று தலாய் லாமா நினைத்துக் கொண்டார்.

ஆசான் சுவாரசியமானவர். பார்க்கிறவர்களுக்கு அவரிடம் நிறைய முரண்பாடுகள் தெரியும். புனிதநூல்களைக் கரைத்துக் குடித்த அவர் சம்பிரதாயமான ஆசிரியர் பாத்திரத்திற்குப் பொருந்த மாட்டார். சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமானால் அவர் தன் மாணவர்களுடன் தெரு விளையாட்டுகளில் கலந்து கொள்வதும் உண்டு. திபெத்திய புத்தமதத்தின் இன்னொரு பிரிவின் தலைமை லாமாவான பஞ்சென் லாமா தன்னை இந்த ஆசான் நிறையவே தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவதாக ஒரு முறை தலாய் லாமாவிடம் சொல்லி இருக்கிறார். ”...நான் வணங்கும் ஒரு ஆள் சின்னப் பையன்கள் கூட சேர்ந்து தெருவில் விளையாடுவது நிஜமாகவே என்னால் சகிக்க முடியவில்லை....”

அது போன்ற எத்தனையோ விசித்திர குணாதிசயங்கள் ஆசானின் மீதிருக்கும் மரியாதையை சிறிது குறைத்தாலும் அதற்குப் பதிலாக அன்பையும் நெருக்கத்தையும் எல்லோரிடமும் அதிகப்படுத்தி இருந்தது. அவரைப் பார்க்கும் போதோ அவர் பற்றிப் பேசும் போதோ எல்லோரிடமும் ஒரு சின்ன சிரிப்பு தெரியும்.


அப்படிப்பட்ட ஆசானின் இன்னொரு முகம் பலர் அறியாதது. ரகசியங்களைக் காப்பதிலும், சில விஷயங்களில் மிக உறுதியாக இருக்க முடிவதிலும் அவருக்கு நிகர் அவரே. தோற்றத்திற்கு எதிர்மாறாக மிக ஆழமானவர்.

ஆசானின் முகத்தில் சிரிப்பு போய் சிந்தனையின் ஆழம் தெரிய ஆரம்பித்தது. ஏதோ மிக முக்கியமான காரியமாய் அவர் வந்திருக்கிறார் எனபது தலாய் லாமாவுக்குப் புரிந்தது. ஆசானை தன் இருக்கைக்கு எதிர் இருக்கையில் அன்புடன் அமர வைத்து விட்டு தலாய் லாமா சொன்னார்.

“சொல்லுங்கள் ஆசானே. என்ன விஷயம்?”

ஆசான் குரல் தாழ்ந்தது. “மைத்ரேய புத்தர்...”



சோடென் மின்சாரக் கம்பியை வெறும் கையால் பிடித்தவன் போல் அதிர்ந்தான். உளவாளியாக அவன் ஆன புதிதில் சீன உளவுத்துறை இந்த வார்த்தை தலாய் லாமா யாருடனாவது பேசும் போது வருகிறதா என்று கவனிக்கச் சொன்னார்கள். அப்போதெல்லாம் தினம் கேட்பார்கள். ஆனால் அப்போதெல்லாம் அந்த வார்த்தையை தலாய் லாமா சொன்னதில்லை. யாரும் தலாய் லாமாவிடமும் சொன்னதில்லை. அன்றில் இருந்து நேற்று வரை சீன உளவுத் துறைக்கு அவன் அனுப்பிய விஷயங்கள் எத்தனையோ இருந்தன. சில சில்லறை விஷயஙகள். சில பெரிய விவகார விஷயஙகள். ஆனால் அவற்றில் மைத்ரேய புத்தர் சம்பந்தமாக எதுவும் இருந்ததில்லை. மைத்ரேய புத்தர் என்கிற சொல் எதைக் குறிக்கிறது என்றோ, சீனா எதற்கு அதில் இவ்வளவு அக்கறை காட்டுகிறது என்றோ சோடென் அறியான்.

இன்று முதல் முறையாக கேள்விப்படுகிறான் என்பதால் சோடென்னின் இதயத்துடிப்புகள் வேகம் பிடித்தன. பரபரப்புடன் சோடென் காதுகளைக் கூர்மையாக்கினான்.



2



மைத்ரேய புத்தர் பெயரை தலாய் லாமாவும் எதிர்பார்த்திருக்கவில்லை. தானாக அவர் குரலும் தாழ்ந்தது. கவலையுடன் கேட்டார். “அந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்று?”

ஆசான் புன்னகையுடன் சொன்னார். “டென்சின், இப்போது அது குழந்தை இல்லை. பத்து வயது சிறுவன். அவர் நன்றாகவே இருக்கிறார்”

தலாய் லாமா ஆர்வமாகக் கேட்டார். “மைத்ரேயனை சமீபத்தில் பார்த்தீர்களா..?.”

“போன மாதம் பார்த்தேன்.... அதுவும் தூரத்திலிருந்து...” ஆசான் குரலில் லேசாக மனத்தாங்கல் இருந்தது.

தலாய் லாமா மைத்ரேய புத்தரைப் பற்றியே யோசித்தபடி ஆசானைப் பார்த்தார்.

ஆசான் தாழ்ந்த குரலிலேயே தொடர்ந்தார். “இது வரை மூன்றே முறை தான் அவரைப் பார்த்திருக்கிறேன். மூன்று வயதில், ஏழு வயதில், போன மாதம்..... மூன்று முறையும் தூரத்தில் நின்று கொண்டு இரண்டு நிமிடங்களுக்குள் யாருக்கும் சந்தேகம் ஏற்படுத்தாமல் பார்த்தேன். அதை விட அதிகமாயோ நெருக்கத்திலோ பார்த்தால் கூட சீன ஒற்றர்களுக்கு சந்தேகம் வந்து, கண்டுபிடித்து, மைத்ரேயனைக் கொன்று விடும் அபாயம் இருக்கிறது.... மைத்ரேயன் என்று சந்தேகப்பட்டு சீனா இது வரை மூன்று குழந்தைகளைக் கொன்றிருக்கிறது...”

தலாய் லாமா மனம் இறந்த குழந்தைகளுக்காக உருகியது. என்ன கொடுமை இது!... மைத்ரேய புத்தரும் நலமாக இருக்கிறார் என்றால் இப்போது அவர் விஷயமாக ஏன் ஆசான் வந்திருக்கிறார் என்ற கேள்வி மனதில் எழ ஆசான் அவர் கேட்காமலேயே காரணம் சொன்னார்.

“அவர் சம்பந்தமாக மௌன லாமா ஒரு எச்சரிக்கை அனுப்பி இருக்கிறார்”

அந்தப் பெயரைக் கேட்டதும் தலாய் லாமா இதயத் துடிப்புகள் ஒரு கணம் நின்று தொடர்ந்தன. ஆசான் ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினார். தலாய் லாமா அதைப் படித்துப் பார்த்தார். கவலையின் ரேகைகள் அவர் முகத்தில் படர்ந்தன. தலாய் லாமா ஆயாசத்துடன் எழுந்தார். வெளியே மறுபடியும் பலத்த மழை ஆரம்பித்த சத்தம் கேட்டது. ஜன்னல் அருகே சென்று பெய்யும் பேய் மழையை ஆழ்ந்த சிந்தனையுடன் பார்த்தார்.

மௌன லாமா என்ற திபெத்திய புத்த துறவி தன் பதினாறாம் வயதில் மௌன விரதம் பூண்டவர். அதற்குப் பின் அவர் வாய் திறந்து பேசியதில்லை. திபெத்தின் ஒரு பழங்கால புத்த மடாலயத்தில் வசிக்கும் அவருக்கு தற்போது வயது என்ன என்று பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. நூறிலிருந்து நூற்றி இருபது வரை பல எண்களை வயதாகச் சொல்கின்றனர். பெரும்பாலும் தியான நிலையில் இருக்கும் அவர் ஒரு நாளுக்கு ஒரு முறை தான் உணவு உண்பார். சில நாட்களில் ஆழ்நிலை தியானங்களில் மூழ்கிப் போனால் அந்த உணவும் வைத்த இடத்திலேயே இருக்கும். தியான நிலையில் இல்லாத போது புனித நூல்களைப் படித்துக் கொண்டும், மடாலய வேலைகள் ஏதாவது செய்து கொண்டும் இருப்பார்.

அவர் திடீர் என்று எச்சரிக்கைகளை மற்றவர்களுக்கு எழுதிக்காட்டுவதுண்டு. அவை அப்படியே பலிக்கும் என்பது மற்றவர்களின் அனுபவம். ஒரு முறை பல மைல் தொலைவில் உள்ள ஒரு மடாலயத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஒரு பிக்குவிடம் இரண்டு நாட்கள் போக வேண்டாம் என்று மௌன லாமா எச்சரித்தார். இரண்டாவது நாள் அந்த மடாலயம் நிலச்சரிவில் நாசமாகிய செய்தி வந்து சேர்ந்தது. இன்னொரு முறை புகழ் பெற்ற பழைய புனித நூல்களைப் பாதுகாத்து வரும் இன்னொரு மடாலயத்தினரை அந்தப் த்தகங்களை வேறு ஒரு அறைக்கு மாற்றச் சொன்னார். அப்படியே வர்கள் செய்தனர். அன்று இரவே நூல்கள் முன்பிருந்த அறை தீக்கிரையாகியது. இப்படி எத்தனையோ நிகழ்வுகள்.

அப்படி ஒரு எச்சரிக்கை 1959 ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி தலாய் லாமாவுக்கு மௌன லாமாவால் அனுப்பப்பட்டது. உடனடியாக அதை ஏற்க தலாய் லாமாவால் முடியவில்லை. சீன அரசாங்கத்தை எதிர்த்து அவர் தலைமையில் திபெத்தியர்கள் போராடிக் கொண்டிருந்த காலம் அது. தன் தாய்நாடான திபெத்தை அந்த இக்கட்டான நிலையில் விட்டு வெளியேற அவர் விரும்பவில்லை. ஆனால் அவருடன் இருந்த அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்யாமல் உடனே வெளியேற தலாய் லாமாவை அறிவுறுத்தினார்கள். கடைசியில் அடுத்த நாள் மார்ச் 17 ஆம் தேதி இரவு லாசா அரண்மனையில் இருந்து தலாய் லாமா சாதாரண சிப்பாய் வேடமிட்டு ரகசிய வழியில் வெளியேறினார். மறு நாள் காலை லாசா அரண்மணையை சீன ராணுவம் சுற்றி வளைத்தது.

31 நாட்கள் பயணம் செய்து 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி இந்தியாவை அடைந்த தலாய் லாமாவுக்கு இப்போதும் அந்த நாட்கள் பசுமையாக நினைவில் உள்ளன. அன்று அவர் அந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து அங்கேயே இருந்திருந்தால் அவர் உயிரை இழந்திருக்கலாம் அல்லது இன்றும் சீன சிறையில் அடைபட்டுக் கிடந்திருக்கலாம்.

சொந்த வாழ்க்கையிலேயே அனுபவம் பெற்றிருந்த அவர் இன்று இந்த எச்சரிக்கையை எப்படி அலட்சியம் செய்ய முடியும்!

தலாய் லாமா ஜன்னலருகேயே மழையைப் பார்த்துக் கொண்டே ஆழ்ந்த சிந்தனையில் நிற்பதைக் கண்ட ஆசான் தானும் எழுந்து ஜன்னல் அருகே சென்றார்.

’மௌன லாமா ஒரு எச்சரிக்கை அனுப்பி இருக்கிறார்’ என்று ஆசான் சொன்னதற்குப் பின் அவர்கள் பேசியது எதுவும் சோடென்னுக்குக் கேட்கவில்லை. மழையின் சத்தம், அவர்கள் அந்த சோபாவிலிருந்து தூர இருந்தது, தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டது எல்லாமாகச் சேர்ந்து அர்த்தமில்லாத முணுமுணுப்புகளாக மட்டுமே கேட்டது. சோடென் பொறுத்து பொறுத்துப் பார்த்தான். அவர்கள் பழையபடி இருக்கைகளுக்குத் திரும்புவதாக இல்லை.

அவன் பொறுமையிழந்தான். அவனை உளவிற்காக ஆயத்தப்படுத்தியவன் ஆரம்பத்திலேயே சொன்னான். “ஒரு நல்ல ஒற்றனுக்குத் தேவையான முதல் முக்கிய மூன்று தகுதிகள் – பொறுமை, பொறுமை, பொறுமை”. அதுவே அவன் பொறுமையைச் சோதித்தது. ’இதற்கு ஒரு நல்ல ஒற்றனுக்குத் தேவையான முதல் தகுதி பொறுமை என்றே சொல்லி விட்டுப் போகலாமே’ என்று நினைத்தான். போகப் போக பொறுமை எவ்வளவு முக்கியம் என்று புரிந்தாலும் அவனிடம் அது வந்து சேரவில்லை.

மற்ற உளவாளிகள் எல்லாம் எப்படி இருப்பார்கள் என்று அடிக்கடி அவன் யோசித்துப் பார்ப்பதுண்டு. ஆனால் அதை நேரில் கண்டு கொள்ளும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் நேரில் பார்த்த ஒரே உளவாளி அவனை ஆயத்தப்படுத்திய பீஜிங் ஆசாமி தான். அவனையும் அவன் இது வரை ஐந்தாறு முறை தான் நேரில் சந்தித்திருக்கிறான். இங்கேயே கூட வேறு உளவாளிகள் இருக்கிறார்கள் என்பதை அவன் அறிவான். அவர்களில் அவனுக்கு அடிக்கடி குறுந்தகவல் அனுப்பும் ஆளும் ஒருவன். ஆனால் அவனும் யார், எப்படி இருப்பான் என்பது சோடென்னுக்குத் தெரியாது. தர்மசாலாவிலேயே இருக்கும் அந்த நபர் ஏதாவது பிக்குவாகவோ, பாதுகாப்பு காவலாளிகளில் ஒருவனாகவோ இருக்கக்கூடும்....

சற்று முன் கூட அவன் தான் “வந்திருக்கும் புதிய ஆளைக் கவனி” என்று குறுந்தகவல் அனுப்பியிருந்தவன். அவனுக்கு இந்த ஆசான் கிழவனை முன்பே தெரியுமா, இல்லை இந்த கிழவன் ஏதாவது சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் நடந்து கொண்டானா என்று சோடென்னால் யூகிக்க முடியவில்லை. இந்த சேட்டைக் கிழவன் எதாவது செய்திருப்பான். முதல் முறை பார்க்கையிலேயே ஒரு புதிய ஆளைப் பார்த்து கண்ணடிக்கும் கிழவன் என்ன தான் செய்ய மாட்டான்....

நிமிடங்கள் வேகமாகக் கழிந்தன. காத்திருந்தே சோடென்னுக்கு அலுப்பு தட்டியது. திரும்பவும் அவர்கள் இருக்கைகளுக்குத் திரும்பியது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிந்த பின்பு தான். இப்போது தலாய் லாமாவின் குரல் தெளிவாகக் கேட்டது.

”இந்த ஆளை நம்மால் நேரடியாகத் தேட முடியாதா?”


ஆசான் சொன்னார். ”முடிந்த வரை விசாரித்து விட்டோம். கண்டுபிடிக்க முடியவில்லை.”

தலாய் லாமா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். பின் சொன்னார். “நான் பேசிப் பார்க்கிறேன் ஆசானே!”

“சாதகமான பதில் வந்தால் உடனே தெரிவி டென்சின். உன் பதில் கிடைக்கும் வரை நான் சொன்ன இடத்தில் தான் இருப்பேன்.”

‘ஒருவேளை பதில் பாதகமாக இருந்தால்?’ என்று கேட்க நினைத்த தலாய் லாமா வார்த்தைகளை விழுங்கிக் கொண்டார். ’அப்படி ஒரு பாதக நிலையே வரக்கூடாது. கருணையே உருவான போதிசத்துவர் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி விட மாட்டார்.’

தலாய் லாமா கேட்டார். “என்ன சாப்பிடுகிறீர்கள் ஆசானே?”

“ஒன்றும் வேண்டாம் டென்சின்..... நான் கிளம்புகிறேன்”

”இந்த மழையிலா?”

“மழை, வெயில் - இதெல்லாம் நம் வேலையை பாதிக்க விட்டால் எத்தனையை முடிக்க முடியும் டென்சின்.... நான் சீக்கிரம் போயாக வேண்டும்?”

“அவ்வளவு அவசரமாய் போய் என்ன செய்யப் போகிறீர்கள்?”

“மூன்று நாள் விரதம் இருக்கப் போகிறேன் டென்சின்”



ஆசானின் விரதம் தலாய் லாமா நன்றாக அறிந்த ஒன்று. தண்ணீர் கூட குடிக்காமல் முழுப் பட்டினி இருப்பார். ஆசானின் விளையாட்டிற்கு எதிர்மாறான குணாதிசயங்களில் இதுவும் ஒன்று. விரத நாட்களில் முழு நேரமும் இறைவனின் தியானத்திலும், இறைவழிபாட்டிலும் தான் அவர் கழிப்பார்.

“உங்கள் இந்த வயதில் இந்த விரதமெல்லாம் வேண்டுமா ஆசானே. போதிசத்துவர் இதை உங்களிடம் எதிர்பார்க்கிறார் என்று நினைக்கிறீர்களா?”

“அவர் என்னிடம் எதிர்பார்க்கவில்லை டென்சின்... நான் தான் அவரிடம் எதிர்பார்க்கிறேன்.... நீ பேசப்போகும் போது உன்னுடன் என் பிரார்த்தனை கூட வரும்...”

ஆசான் கிளம்பி விட்டார். அவரைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை அறிந்த தலாய் லாமா தானும் எழுந்தார். அவர் மடியில் இருந்த சிறு தாள் கீழே விழுந்தது. குனிந்து அதை எடுத்த தலாய் லாமா சற்று முன் ஆசான் அதைத் தந்த போது தோன்றியதை இப்போது வாய் விட்டுச் சொன்னார்.

“வித்தியாசமான பெயர்”

ஆசான் புன்னகைத்தார். “பெயர் மட்டுமல்ல ஆளும் அப்படித்தான்”

அறையை விட்டு வெளியேறுவதற்கு முன் ஆசான் கடைசியாக எச்சரித்தார். “நம்மிடம் காலம் அதிகமில்லை டென்சின்”

“உடனடியாகப் பேசுகிறேன் ஆசானே”

ஆசான் அறையை விட்டு வெளியே வந்தார். சோடென் தன் அறையில் இருந்த ரகசிய ஒலிபரப்புக்கருவியை நிறுத்தி விட்டு அவசர அவசரமாக வெளியே வந்தான். இருவரும் வரவேற்பறையில் சந்தித்துக் கொண்டார்கள். சோடென் அவரிடம் பேச்சுக் கொடுத்து அவர் போகும் இடம் எங்கே என்று அறிய விரும்பினான். அதனால் பிடிக்கா விட்டாலும் அவரிடம் திபெத்திய மொழியில் பேசினான்.

“வணக்கம் பெரியவரே. கிளம்பி விட்டீர்களா?”

“ஆமாம்” என்ற ஆசான் அவனைப் பார்த்துக் கண்ணடித்தார். சோடென்னுக்கு அவர் கழுத்தை நெறிக்க வேண்டும் போல இருந்தது. ஆசான் அவனைக் கேட்டார். “உன் பெயர் என்ன இளைஞனே?”

“சோடென்”

”சோடென் என்றால் பக்தியானவன் என்று அர்த்தம். நீ பக்தி மிகுந்தவனா?”

’பிரார்த்தனை நேரத்தில் நீயும் வேடிக்கை பார்த்தாய், நானும் வேடிக்கை பார்த்தேன். என்னைப் பார்த்து பக்தி மிகுந்தவனா என்று கேட்கிறாயே கிழவா” என்று மனதில் கொதித்த சோடென் அதற்குப் பதில் சொல்லாமல் அவரிடம் கேட்டான். “இந்த மழையில் எப்படிப் போவீர்கள்?”

ஆசான் புன்னகையுடன் “இப்படித்தான்” என்று சொல்லி கண்ணடித்து விட்டு ஒரே ஓட்டமாக தெருவை அடைந்தார். மழையில் நனைந்தபடி தெருவில் வேகமாகச் செல்லும் ஆசானைத் திகைப்புடன் பார்த்து நின்றான் சோடென். மனதில் அந்தக் கிழ பிக்குவை சபித்துக் கொண்டே தனதறைக்குத் திரும்பிய சோடென் பதிவு செய்திருந்த சம்பாஷணையை தன் மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தான்.