புதன், 26 ஜனவரி, 2022

இல்லுமினாட்டி

 

என்.கணேசனின் “இல்லுமினாட்டி” நாவல் அவரது இருவேறு உலகம் நாவலின் இரண்டாம் பாகமாகும். இந்த நாவலின் இன்னொரு முக்கிய அம்சம் அமானுஷ்யன் கதாபாத்திரமாக இதிலும் வருகிறான். (இதற்கு முன் அமானுஷ்யன், புத்தம் சரணம் கச்சாமி நாவலில் வந்துள்ளான்).  இல்லுமினாட்டி நாவல் ஜனவரி 2020ல் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. மிகவும் பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த இந்த நூலின் முதல் இரண்டு அத்தியாயங்கள் வாசகர்களுக்காக இலவசமாய் இங்கே -


இல்லுமினாட்டி 

 என்.கணேசன்


1

 

வன் பெயர் என்னவென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அளவுக்கு அதிகமாய் போதை மருந்தை உட்கொண்டு ம்யூனிக் நகரத்  தெரு ஒன்றில் விழுந்து கிடந்த அவனை அந்த அரசு மருத்துவமனையில் இன்று காலை தான் போலீசார் சேர்த்திருந்தார்கள். அவனை அடையாளம் காட்டக்கூடிய ஆவணம் எதுவும் அவனிடம் இருக்கவில்லை. ஆறடி உயரமும், ஒடிசலான உடல்வாகும் கொண்டிருந்த அவன் முகவாய்க்கட்டையில் ஒரு ஆழமான கீறல் இருந்ததுஅந்த மருத்துவமனையின் மருத்துவர் குழு அவன் ஆசியாவைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும், அவன் வயது முப்பதுக்குள் இருக்கும் என்று கணித்திருந்தது. நீண்ட கால போதைப் பழக்கத்தினால் முன்பே கெட்டிருந்த அவன் உடல்நிலை கடைசியாக உட்கொண்ட அதிக போதை மருந்தால், மருத்துவமனையில் சேர்த்த போதே, அபாயக்கட்டத்தில் தான் இருந்தது.

அவனைப் பரிசோதித்த தலைமை மருத்துவர் அவனைச் சேர்த்த போலீசாரிடம் காலையிலேயே சொல்லியிருந்தார். “இவன் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. இவன் குடும்பத்தைக் கண்டுபிடிக்க முடிந்தால் தெரிவித்து விடுங்கள்….”

இவன் இந்த நகரத்தைச் சேர்ந்தவன் போலத் தெரியவில்லை. எங்கிருந்தோ இங்கு வந்திருக்கலாம்…..  இவன் புகைப்படத்தைப் பத்திரிக்கைகளுக்கும் டிவி சேனல்களுக்கும் அனுப்பி இவன் இங்கிருப்பதைத் தெரிவிக்கிறோம்என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னபடியே இப்போது மாலை நாலரை மணிச் செய்தியில் அவன் படம் டிவியில் காட்டப்படுவதை தலைமை மருத்துவர் பார்த்தார். மருத்துவமனையின் விலாசத்தையும், தொலைபேசி எண்களையும் கூடவே தெரிவித்திருந்தார்கள். இதைப் பார்த்து விட்டு யாராவது இங்கு வரலாம். அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்தபடியே தலைமை மருத்துவர் கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்.

அவரது அறை இரண்டாவது மாடியில் இருந்ததால் தெரு முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. தெருக்கோடியில் ஒரு பெரிய கட்டிடத்தின் முன்பு ஒரு கருப்புக்கார் அப்போது தான் வந்து நின்றது. ஆஜானுபாகுவாக ஒருவன் இறங்கியதும், அவனைத் தொடர்ந்து கண்கள் கருப்புத்துணியால் கட்டப்பட்ட ஒரு இளைஞன் இறங்கினான். அவனைத் தொடர்ந்து இன்னொரு ஆஜானுபாகுவான ஆள் இறங்கினான். அவர் கூர்ந்து பார்ப்பதற்கு முன்பே அவர்கள் மூவரும் அந்தக் கட்டிடத்திற்குள் போய் விட்டார்கள்.

தலைமை மருத்துவருக்கு அந்தத் தெருக்கோடிக் கட்டிடமே ஏதோ ரகசியங்களும், ஆபத்தும் நிறைந்த இடமாகத் தோன்றியது. இன்று பிற்பகல் சுமார் மூன்று மணி அளவில் மிக விலை உயர்ந்த கார்கள் வரிசை வரிசையாக அங்கு வந்து சேர்ந்ததை அவர் கவனிக்க நேர்ந்தது. கார்களில் இருந்து இறங்கி உள்ளே சென்ற அனைவரும் செல்வந்தர்களாகவும், அதிகாரங்கள் படைத்தவர்களாகவும் தோன்றியிருந்தார்கள்….. இப்போது கண்களைக் கட்டி யாரையோ அழைத்துக் கொண்டு போகிறார்கள். அங்கு என்ன நடக்கிறது, நடத்துபவர்கள் யார் என்பதெல்லாம் தெரியவில்லை….

 

அவர் சிந்தனைகளைக் கலைத்தபடி நர்ஸ் ஒருத்தி அந்த அனாமதேய போதை மனிதனின் ஸ்கேன் ரிப்போர்ட்களை அவர் மேசையில் வைத்து விட்டுப் போனாள். தலைமை மருத்துவர் ஒருவித சலிப்புடன் வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் அந்தப் பெயர் தெரியாத போதை மனிதன் சாகப்போகிறான் என்றாலும் அவனுடைய எல்லா ரிப்போர்ட்களையும் ஃபைல் செய்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் அவை தேவைப்படலாம். உறவினர்கள் யாராவது வழக்கு போடும் வாய்ப்பும் இருக்கிறது. இறந்தும் அந்த மனிதன் பிரச்னையாகலாம்…..

அவர் அவனுடைய எல்லா ஸ்கேன் ரிப்போர்ட்களையும் பிரித்துப் பார்த்தார். அவன் பெயர் தெரியாததால் அந்த எல்லா ரிப்போர்ட்களிலும் பெயர் மிஸ்டர் எக்ஸ் என்றே இருந்தது. தலைமை மருத்துவர் முகத்தில் சின்னதாய் புன்னகை அரும்பியது. அவர் அந்த ரிப்போர்ட்களைப் படிக்க ஆரம்பித்தார். அந்த பரிசோதனைக் குறிப்புகள் எல்லாமே அவர் முன்பே எண்ணியிருந்தபடி மிக மோசமாகவே இருந்தன. அந்த ஆள் மரணத்தை நெருங்கி விட்டான். இனி அதிகபட்சம் ஓரிரு மணி நேரங்கள் தான் அவன் உயிரோடிருக்கும் வாய்ப்பிருக்கிறது…. அவன் இறந்த பின்னும் யாரும் உறவினர்கள் வரா விட்டால் அவன் பிணத்தை என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டும். அதில் நிறைய சட்டச்சிக்கல்கள் இருக்கின்றன. எல்லாம் விதிமுறைகளின்படி தான் கவனமாகச் செய்தாக வேண்டும்…..

தலைமை மருத்துவர் அந்தப் போதை மனிதனின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட்களை எல்லாம் தொகுத்து ஒரு சுருக்கமான அறிக்கை ஒன்றைத் தயார் செய்ய ஆரம்பித்தார். அவன் இறந்தவுடன் அவனைக் காலையில் சேர்த்து விட்டுப் போன போலீஸ்காரர்களுக்குப் போன் செய்து வரவழைத்து அவர்களிடம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துப் பேச வேண்டும்….

திடீரென்று எங்கிருந்தோ கிதார் இசை லேசாகக் கேட்க ஆரம்பித்தது. அந்தக் கிதார் இசை இனிமையாக இருந்த அதே நேரத்தில் சற்று அமானுஷ்யமாகவும் இருந்தது போல அவர் உணர்ந்தார். சில நிமிடங்களில் நர்ஸ் ஒருத்தி வேகமாக அவர் அறைக்குள் வந்து சொன்னாள். “டாக்டர் அந்தப் போதை மனிதன் எக்ஸ் கிட்டத்தட்ட இறந்து விட்டான் போல இருந்தது. அவனுடைய இதயத்துடிப்பு எல்லாம் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் திடீர் என்று இப்போது அவனுக்கு ஜன்னி வந்தது போல் உடம்பெல்லாம் நடுங்குகிறது…..”

சிலருக்கு மரணத்திற்கு முன்பு அப்படி ஆவது உண்டு என்பதால் தலைமை மருத்துவர் ஆச்சரியப்படவில்லை. அவன் அருகில் யார் இருக்கிறார்கள் என்று அவளிடம் விசாரித்தார். அவள் உதவி மருத்துவர் ஒருவரின் பெயரைச் சொன்னவுடன் அவர் திருப்தியடைந்தார். இப்போது அந்தக் கிதார் இசை தான் அவரைக் குழப்பியது.

எங்கிருந்து இந்த கிதார் இசை கேட்கிறது?” என்று அவர் நர்ஸைக் கேட்டார். அவள் கண்களை மூடிக் கவனமாக அந்த இசை வரும் இடத்தை யூகிக்க முயன்றாள். முயற்சி செய்தும் அவளுக்கு முடிவாகச் சொல்ல முடியவில்லை. பக்கத்தில் தான் யாரோ வாசிப்பது போல அவளுக்குத் தோன்றியது. ஆனால் அந்தபக்கத்தைஉறுதியாக அவளால் சுட்டிக் காட்ட முடியவில்லை…. “சரியாகத் தெரியவில்லைஎன்று தயக்கத்துடன் சொல்லி விட்டுப் பிறகு அதற்கு அதிக முக்கியத்துவம் எதுவும் தராமல் அவள் போய் விட்டாள்.

தலைமை மருத்துவர் எழுந்து போய் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். வெளியே பார்வைக்குப் படுவது போல் யாரும் கிதார் வாசித்துக் கொண்டிருக்கவில்லை. ஏனோ அவர் தெருக்கோடியில் இருந்த அந்தப் பெரிய கட்டிடத்தைப் பார்த்தார். அங்கும் கட்டிடத்திற்கு வெளியே யாரும் தெரியவில்லை. கண்களை மூடி அவரும் கிதார் இசை வரும் இடத்தை அறிய முயன்றார். இந்த மருத்துவமனைக்குள்ளேயே தான் அந்த இசை கேட்பது போல் இருந்தது.

இந்த இசை எங்கிருந்து கேட்டால் நமக்கென்னஎன்பது போல தோள்களைக் குலுக்கிக் கொண்டு அவர் மறுபடியும் அந்த அறிக்கை தயாரிக்கும் வேலையைத் தொடர்ந்தார். கால் மணி நேரத்திற்குப் பின் எக்ஸ் அருகே இருந்த அந்த உதவி மருத்துவரே வந்தார். ”அவன் பிழைத்துக் கொள்வான் போலிருக்கிறது டாக்டர். அவன் உடல்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்திருக்கிறது…..”

தலைமை மருத்துவர் திகைப்புடன் அவரைப் பார்த்தார். அவர் முன்னால் இருக்கும் ரிப்போர்ட்கள் எதிலும் அவன் பிழைத்துக் கொள்வதற்கான அறிகுறிகள் ஒரு சதவீதம் கூட இருக்கவில்லை….. அவர் குழப்பத்துடன் மெல்ல எழுந்தார். கிதார் இசை இப்போதும் கேட்டுக் கொண்டு தானிருந்தது.

இருவரும் சேர்ந்து மிஸ்டர் எக்ஸ் இருக்கும் பகுதியை நோக்கிச் செல்கையில் தலைமை மருத்துவர் அந்த உதவி மருத்துவரிடம் கேட்டார். “கிதார் இசை எங்கேயிருந்து கேட்கிறது?”

உதவி மருத்துவர் சொன்னார். “இந்த ஆஸ்பத்திரியிலேயே யாரோ வாசிக்கிற மாதிரி தான் தெரிகிறது…. எங்கேயிருந்து என்று சரியாகத் தெரியவில்லை…”

அடுத்த சில நிமிடங்களில் தலைமை மருத்துவர் அந்தக் கிதார் இசை உட்பட அனைத்தையும் மறந்து போனார். மிஸ்டர் எக்ஸின் உடலில் தெரிய ஆரம்பித்த மாற்றங்கள் இது வரை அவர் படித்திருந்த மருத்துவத்தைக் கேலி செய்வது போல் இருந்தன. அவர் போன போது அவன் உடலின் வெப்பம் அபாயக்கட்டத்தையும் மீறி அதிகமாக இருந்தது. உடல் அனலாய் கொதித்தது. தர்மாமீட்டர் 106 டிகிரி ஃபாரன்ஹீட் காட்டியது. ஆனால் அதனால் அவன் உடல் எந்தப் பெரிய பாதிப்புக்கும் ஆளாகவில்லை. மிகக்குறைவாக இருந்த இதயத்துடிப்பு சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டு வந்தது. தலைமை மருத்துவருக்கு அவன் உடலில் அசாதாரணமாக என்னென்னவோ நடந்து கொண்டிருப்பது போல் தோன்றியது. ஆனால் எதுவுமே அவன் வாழ்க்கையை முடிக்கிற விதமாய்த் தெரியவில்லை….

திடீரென்று அவன் கண் விழித்தான். அவன் கண்கள் அமைதியாக அவர்களைப் பார்த்தன.

தலைமை மருத்துவர் குனிந்து அவனிடம் கேட்டார். “நீ யார்? உன் பெயர் என்ன?”

 

2

 

லைமை மருத்துவர் நீ யார், உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு அந்தப் போதை மனிதன் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. சின்னதாய் புன்னகை அவன் உதடுகளில் வந்து மறைந்தது. ஏனோ அந்தப் புன்னகை அவர் ரத்தத்தை உறைய வைப்பது போல் வில்லத்தனமாய் இருந்தது. உடனே அவர் அப்படி உணர்வது அர்த்தமில்லாதது என்று நினைத்தார். உண்மையில் அவர் கேட்ட கேள்வி அவன் மூளையை எட்டியிருக்காது என்று அவருக்குத் தோன்றியது. இது போன்ற அதிகபட்ச காய்ச்சல் சமயத்தில் இப்படி நடப்பதுண்டு. ஏதோ ஒரு கற்பனைக் காட்சியில் நோயாளி சஞ்சரிப்பதுண்டு. அவன் கற்பனையில் என்ன பார்த்துப் புன்னகைக்கிறானோ என்று எண்ணியவராக அவர் மறுபடி அவனிடம் கேட்டார். “நான் கேட்டது புரிகிறதா? நீ யார்? உன் பெயர் என்ன?”

அவன் ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டான். களைத்திருக்கிறான் என்பதாகத் தலைமை மருத்துவர் புரிந்து கொண்டார். நினைவு திரும்பி அவன் பெயரைச் சொல்லும் வரை அவன் எக்ஸ் தான்முதலில் அவன் காய்ச்சலைக் குறைக்க வேண்டும், பின் அவன்  உடலில் சக்தியை அதிகரிக்க வேண்டும், பிறகு தான் அவனுக்குச் சரியாக நினைவு திரும்பும் வாய்ப்பு இருக்கிறது…. அதற்கான மருந்துகளை அவன் உடலில் ஏற்ற உதவி மருத்துவரிடம் உத்தரவிட்டு விட்டுத் தன் அறைக்கு அவர் திரும்பினார்.

மறுபடியும் தன் மேசையிலிருந்த எல்லா ஸ்கேன் ரிப்போர்ட்களையும் அவர் எடுத்துப் படித்தார். முன்பு அவர் அனுமானத்திற்கு வந்திருந்தபடியே ஒரு ரிப்போர்ட்டில் கூட அவன் உயிர்பிழைக்கும் வாய்ப்பின் தடயம் கூட இல்லை. இவன் பிழைத்துக் கொண்டால் மருத்துவ உலகில் ஒரு அதிசயம் நிகழ்த்தியவனாகக் கருதப்படுவான் என்று தோன்றியது. உடனே அவர் இண்டர்காமில் அழைத்து அவன் உடல்நிலை ஓரளவு இயல்புநிலைக்குத் திரும்பியவுடன்  மறுபடியும் ஸ்கேன்கள் செய்யச் சொன்னார்.

அவர் பார்வை கண்ணாடி ஜன்னல் வழியே வீதிக்கு போனது. இப்போது விலை உயர்ந்த கார்கள் அந்தத் தெருக்கோடிக் கட்டிடத்திலிருந்து சாரை சாரையாக வெளியே வந்து கொண்டிருந்தன.  அதைப் பார்த்தபடி சிறிது நின்று விட்டுப் பின் மற்ற நோயாளிகளைப் பார்க்க அவர் கிளம்பினார். திடீர் என்று கிதார் இசை நினைவுக்கு வந்தது. இப்போது அது கேட்கவில்லை. எப்போது நின்றது என்று தெரியவில்லைஎன்னவோ எல்லாமே விசித்திரமாய் நடக்கின்றன என்று எண்ணியவர் அடுத்த ஒன்றரை மணி நேரம் எல்லா நோயாளிகளையும் பார்த்து விட்டு வரும் வரை மற்ற எல்லாவற்றையும் மறந்திருந்தார். கடைசியாக மறுபடியும் எக்ஸ் அறைக்குப் போனார்.

அவரைப் பார்த்தவுடன் அந்த உதவி மருத்துவர் சொன்னார். “ஒரு கட்டத்தில் 107 டிகிரி வரை ஏறிய காய்ச்சல் இப்போது தான் குறைய ஆரம்பித்திருக்கிறது. 103 டிகிரிக்கு வந்திருக்கிறது. ஆனால் ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்த மூளையின் ஸ்கேன் ரிப்போர்ட்கள் குழப்புகின்றன டாக்டர். அசாதாரணமான அதிகப்படியான செயல்கள் மூளையில் தெரிகின்றன…..”

அவர் சொல்லிவிட்டு ஸ்கேன் படங்களைக் காட்டிய போது தலைமை மருத்துவர் திகைப்பின் எல்லைக்கே போனார். அவர் அறையில் இருந்த ரிப்போர்ட்டுகளுக்கு நேர்மாறாக உச்சக்கட்ட அளவில் மூளைச் செயல்பாடுகள் இருந்தன. அவர் சொன்னார். “ஸ்கேனிங் மெஷினில் ஏதாவது பிரச்னை இருக்குமோ?”

உதவி மருத்துவர் சொன்னார். “நானும் அதைத் தான் கேட்டேன். ஸ்கேன் ஆபரேட்டர் மெஷின் சரியாகத் தான் இருக்கிறது, இந்த எக்ஸ் சூப்பர் மேனாக இருக்கலாம். யார் கண்டது என்று கிண்டலாகச் சொல்கிறான்….”

எக்ஸ் விஷயத்தில் எங்கோ ஏதோ குழப்பும்படியான தவறுகள் அல்லது பிரமிக்கும்படியான அதிசயங்கள் நடந்திருப்பதாக தலைமை மருத்துவர் நினைத்தார். 107 டிகிரி வரை ஏறிய காய்ச்சலும், மூளையின் அளவுக்கதிகமான செயல்பாடுகளும், சாகக்கிடந்த அவன் உயிர் பிழைத்திருப்பதும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது தலைசுற்றியது. இவன் இயல்புநிலைக்குத் திரும்பி வாய்திறந்து பேசினால் தான் பல விஷயங்கள் புரியும் என்று அவருக்குத் தோன்றியது.

தலைமை மருத்துவர் எக்ஸ் அருகே சென்று பார்த்தார். இப்போது அவன் உடல் சீரடைந்து வருவதாகத் தோன்றியது. மூச்சு சீராக இருந்தது. அவர் உதவி மருத்துவரிடம் சொன்னார். “அவன் இரவு நன்றாக உறங்கி ஓய்வு எடுக்கட்டும். நாளை காலையில் அவனிடம் பேசுவோம்…..”

அவர் வீட்டுக்குக் கிளம்பி விட்டார். செல்வதற்கு முன் ரிசப்ஸனில் எக்ஸைக் கேட்டு யாராவது போன் செய்தார்களா என்று கேட்டார். இல்லை என்று பதில் வந்தது. அவன் வீட்டார், நெருங்கியவர்கள் யாரும் டிவியில் அவனைக் குறித்து வெளியிட்ட செய்தியைப் பார்க்கவில்லை போல் இருக்கிறது….

 

டுத்தநாள் அதிகாலையிலேயே அவருடைய அலைபேசி இசைத்து அவரை உறக்கத்திலிருந்து எழுப்பியது. அவர் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார். காலை மணி 5.05. அலைபேசியை எடுத்துப் பார்த்தார். அழைப்பு மருத்துவமனையிலிருந்து தான் வருகிறதுபேசினார். “ஹலோ

நர்ஸ் ஒருத்தி பேசினாள். “டாக்டர், அந்தப் போதை நோயாளி எக்ஸைக் காணோம்

திகைத்த அவர் ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் யோசித்தார். சில சமயங்களில் இது போன்ற ஆட்கள் மயக்கநிலையில் எழுந்து நடப்பதுண்டு. வேறெதாவது அறைக்குச் சென்று படுத்திருக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்று நினைத்தவராக அவர் கேட்டார். “ஆஸ்பத்திரியில் எல்லா இடங்களிலும் தேடினீர்களா?”

எல்லா இடங்களிலும் பார்த்து விட்டோம் டாக்டர். இங்கு எங்கும் இல்லை

எக்ஸ் ஏன் இப்படிப் படுத்துகிறான் என்று எண்ணியபடி அவர் சொன்னார். “போலீஸுக்கும் போன் செய்து தகவலைத் தெரிவித்து விடுங்கள். நான் அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன்.”

அவர் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்த சமயம் எக்ஸை அங்கு கொண்டு வந்த போலீஸார் இருவரும் வந்து சேர்ந்தார்கள். அவர்களிடம் நேற்றைய அதிசய நிகழ்வுகளை அவர் தெரிவித்தார். அவர்கள் இருவரும் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டார்கள்பின் எக்ஸை யார் கடைசியாக எப்போது பார்த்தார்கள் என்று விசாரித்தார்கள். உதவி மருத்துவர் இரவு 10.30க்கு காய்ச்சல் எந்த அளவு இருக்கிறது என்று பரிசோதித்ததாகவும் அப்போது 99 டிகிரிக்கு காய்ச்சல் இறங்கி இருந்ததாகவும் சொன்னார். நர்ஸ் ஒருத்தி நள்ளிரவு ஒன்றரை மணிக்கு அறைக்கு வந்த போது எக்ஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைப் பார்த்ததாகச் சொன்னாள்.

கடைசியில் ஒரு போலீஸ்காரர் சொன்னார். “அந்த நேரத்திற்குப் பிறகு சிசிடிவி காமிராவில் பார்த்தால் என்ன நடந்திருக்கிறது என்று தெரியும்.”

அறைகளில் சிசிடிவி காமிராக்கள் இல்லை என்றாலும் வராந்தாக்களில் அந்தக் காமிராக்கள் இருந்தன. அறையை விட்டு யார் வந்தாலும், அறைக்குள் யார் சென்றாலும் அந்தக் காமிராக்களில் கண்டிப்பாகப் பதிந்திருக்கும் என்பதால் பரபரப்புடன் அந்த அறைக்கு வெளியே இருந்த வராந்தாவில் இரவு ஒன்றரை மணிக்குப் பிறகு பதிவாகி இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

காமிராப்பதிவுகள் காலி வராந்தாவையே அதிகம் காட்டியது. நீண்ட இடைவெளிகளில் ஒரு நோயாளியோ, அவர் உடனிருப்பவரோ, நர்ஸ்களோ வராந்தாவில் தெரிந்தார்கள். ஆனால் அவர்கள் வந்து போனது வேறு அறைகளிலிருந்து தான்யாரும் எக்ஸ் அறையிலிருந்து வெளியே வரவோ, உள்ளே போகவோ இல்லைதிடீரென்று எக்ஸின் அறையிலிருந்து எக்ஸ் வெளியே எட்டிப் பார்ப்பது தெரிந்தது. உடனே அவர்கள் அந்தக் காமிராப்பதிவு காட்டிய நேரத்தைப் பார்த்தார்கள். காலை மணி 3.37.

வெளியே வராந்தாவில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவுடன் எக்ஸ் மெல்ல நடக்க ஆரம்பித்தான். அவன் வராந்தாவைத் தாண்டிய காட்சி முடிந்ததும் மற்ற தொடர்பகுதிகளின் காமிராப்பதிவுகளை அவர்கள் பார்த்தார்கள். அவன் ஒரே ஒரு பகுதியில் மட்டும் ஒரு நர்ஸ் வருவதைப் பார்த்து மறைந்து நின்றான். அவள் ஒரு அறைக்குள் நுழைந்தவுடன் வேகமாக அந்த அறையைக் கடந்தான். கடைசியில் மணி 3.48ல் அவன்  மருத்துவமனையை விட்டு வெளியேறுவது தெரிந்தது.

ஒரு போலீஸ்காரர் சொன்னார். “கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு முன்பே ஆஸ்பத்திரியை விட்டுப் போய் விட்டான்….”

இன்னொரு போலீஸ்காரர் தலைமை மருத்துவரிடம் சொன்னார். ”அவன் பிழைக்க வழியே இல்லை என்றீர்கள். ஆனால் அவன் பிழைத்துக் கொண்டது மட்டுமல்ல ஒரே நாளில் உங்கள் ஆஸ்பத்திரியை விட்டு அவனாகவே நடந்து வெளியே போயிருக்கிறான்

தலைமை மருத்துவர் சொன்னார். “நேற்றிலிருந்து அவன் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறான். இனி நான் அவன் சிகிச்சைக் கணக்கை எப்படி மூடுவது? அவன் செத்திருந்தாலாவது அனாமதேய போதை மனிதன், அனாதைப் பிணம் என்று எழுதி முடித்திருப்பேன்

கவலைப்படாதீர்கள். உயிர் போகிற அளவுக்கு போதை மருந்து சாப்பிட்ட ஆள் அந்தப் பழக்கத்திற்கு அடிமையானவன் என்பதால் கண்டிப்பாக சீக்கிரமே மறுபடி சாப்பிட்டு எங்கேயாவது விழுந்து கிடப்பான். அல்லது செத்தும் கிடக்கலாம். அப்போது பார்க்கலாம்…. அவன் இங்கே இருந்த சமயத்தில் வேறெதாவது வித்தியாசமாக நடந்திருக்கிறதா?...”

தலைமை மருத்துவர் சொன்னார். “யாரோ நிறைய நேரம் கிதார் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அது ஆஸ்பத்திரிக்குள்ளேயே வாசித்தது போல் தான் இருந்தது. அது யார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது எக்ஸுக்கும் சம்பந்தமில்லாத விஷயமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் எல்லோரும் காதால் கேட்டும், ஒருவராலும் அது எங்கிருந்து கேட்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது விசித்திரமாக இருந்தது….”      


---- மீதியை நாவலில் படித்துக் கொள்ளலாம். விலை ரூ.650/-                                        

ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


 நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

இருவேறு உலகம்!

 


என்.கணேசன் எழுதிய இந்த வித்தியாசமான நாவல் ஜனவரி 2018ல் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.  இரண்டாம் பதிப்பு என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் மே 2023ல் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

ஒரு ஏலியன் கூட கதாபாத்திரமாக இருக்கும் இந்த நாவல் பற்றிய குறிப்பு- 

கதாநாயகனைக் கொலை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றதாய் நினைத்த கொலையாளி பிறகு அதே வழியில் கொல்லப்படுகிறான். கதாநாயகன் பிணமும் கிடைக்காமல் போகிறது. ஏலியனைக் குறித்த ஒரு இரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவுக்கு அந்தக் கொலை முயற்சிப் புகைப்படங்கள் கிடைக்கின்றன. அவர்களுக்கும் முடிவில் நடந்தது என்ன என்று தெரியாத நிலை,  கதாநாயகன் ஒரு நாள் திடீரெனத் திரும்பி வரும் போது புதிர்கள் விடுபடுவதற்குப் பதிலாக கூடுகின்றன. மறுபடி நடக்கும் கொலை முயற்சி, அவன் சமாளிக்க வேண்டியிருந்த இரு எதிரெதிர் சக்தி வாய்ந்த மனிதர்கள், ஏலியன், இரகசிய ஆன்மிக இயக்கம், இல்லுமினாட்டி என்று களம் பல திருப்பங்களுடன் களை கட்டுகிறது. கடைசி வரை ஆபத்தில் இருக்கும் கதாநாயகன் தப்பிக்கிறானா, எப்படி என்பதை காதல், பாசமுள்ள குடும்பம், விஞ்ஞானம், அமானுஷ்ய சக்திகள் என்ற வலைப்பின்னலுடன் சொல்லும் இந்த நாவல் விறுவிறுப்பு மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்து நினைவில் நிற்கும்!   

 

நாவலின் விலை ரூ 750/-


இந்த நாவலின் இரண்டு அத்தியாயங்கள் இலவசமாக வாசகர்களுக்காக இருவேறு உலகம்


1

 

ந்த இளைஞன் அந்த மரத்தைக் கடந்து சென்ற போது மாலை மணி 5.35. மரத்தின் பின் ஒளிந்திருந்தவன் தன் அலைபேசியில் உடனடியாகத் தகவல் சொன்னான். “இப்ப தான் போறான்

 

பைக்கிலயா கார்லயா?வெற்றிலை பாக்கு மென்றபடி குரல் கேட்டது.

 

“பைக்ல

 

“அங்கயே இரு. வேற யாராவது அந்தப் பக்கம் போறாங்களான்னு மட்டும் கவனிச்சுட்டுரு

 

மரத்தின் பின் ஒளிந்திருந்தவன் அங்கேயே நின்று சலித்துப் போனான். மலையடிவாரத்திற்குச் செல்லும் அந்தப் பாதையில் அதற்குப் பிறகு வேறு யாரும் போகவில்லை. மெள்ள இருட்ட ஆரம்பித்தது. இருட்டிய பின் அந்த இடத்தில் ஒருவித அமானுஷ்ய அமைதி சூழ்ந்தது. அந்த அமைதியை அடிக்கடி கலைத்த பெருங்காற்றின் ஓசையும் கூடுதல் அமானுஷ்யமாகவே இருந்தது. லேசாகப் பயமும் கிளம்பியது.

 

பயத்துக்குப் பெரிதாகக் காரணம் இல்லை தான். சில மாதங்களுக்கு முன்பு வரை பேய்களும், ஆவிகளும் இங்கு இரவு நேரங்களில் உலாவுவதாகப் பேசிக் கொண்டார்கள். அதுவும் அமாவாசை நாட்களில் அவற்றின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகமாம். சில பத்திரிக்கைகளில் சிலர் தங்கள் பயங்கர அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்கள். ஆனால் ஒரு பகுத்தறிவு அமைப்பைச் சேர்ந்த பத்து பேர், பேயோ, ஆவியோ சந்தித்தே விடுவது என்ற தீர்மானத்தோடு ஒரு அமாவாசை இரவு வந்து அந்தப் பகுதியில் தங்கினார்கள். அவர்கள் கண்ணுக்கு பன்னிரண்டு மணியளவில் வெள்ளை நிற உடையணிந்த இரு உருவங்கள் தென்படவும் செய்தன. நெருப்பு ஜுவாலையும் திடீரென்று தோன்றி மறைந்தது. அதைப் பார்த்து விட்டு பத்து பேரில் இரண்டு பேர் மயங்கி விழ,  ஒருவன் பயத்தில் தன்னையறியாமல் சிறுநீர் கழித்து விட்டான். மீதியுள்ளவர்களில் நான்கு பேர் தைரியமாக ஓடிச்சென்று ஆவிகளைப் பிடித்துக் கொண்டார்கள். பரிசோதனையில் அந்த ஆவிகள் உள்ளூர் இளைஞர்கள் தான் என்பதும், வேட்டித் துணியை புடவையாகக் கட்டிக் கொண்டு, சவுரியைத் தலையில் பொருத்திக் கொண்டு உலவியதும், கந்தகப்பொடியில் நெருப்பைப் பற்ற வைத்து ஊதி நெருப்பு ஜுவாலையை உருவாக்கினதும் தெரிய வந்தது. நையப்புடைத்து விசாரித்ததில் அந்தப் பகுத்தறிவு அமைப்பினரின் தைரியத்தைப் பரிசோதித்துப் பார்க்கும்  ஆவலில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக இருவரும் சொன்னார்கள்.

 

அந்த நிகழ்ச்சியைப் பற்றிப் படித்ததை நினைவுபடுத்திக் கொண்ட போதும் அவன் மனதில் கிளம்பிய பயம் முற்றிலும் விலகி விடவில்லை. கும்பலாக அந்த அமைப்பினர் பத்து பேர் வந்ததால் ஆவிகளும், பேய்களும் விலகி இருந்திருக்கவும் கூடும் என்கிற எண்ணம் வந்து தொலைத்தது.  அந்த மரத்தில் சாய்ந்து கொண்டே சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அந்த மலையை அவன் பார்த்தான். மாலையில் கடந்து போன அந்த இளைஞன் அந்த மலையில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறானோ தெரியவில்லை.... ஒவ்வொரு அமாவாசை இரவும் அந்த இளைஞன் அந்த மலையில் தான் கழிப்பதாகச் சொன்னார்கள். சில மணி நேரங்களுக்கே இப்படி பயமாகவும், சலிப்பாகவும் இருக்கிறது. எப்படித்தான் அந்த இளைஞன் அங்கே பயமில்லாமல் தங்குகிறானோ?... 

 

சாதாரணமாகத் தனிமையில் இருக்கும் போது அவன் செல் போனில் எஃப் எம் ரேடியோ கேட்பது வழக்கம். பாட்டு கேட்கும் போது நேரம் சீக்கிரம் நகரும். ஆனால் இப்போதோ அவனுக்கு சத்தமே இல்லாமல் கண்காணித்துக் கொண்டிருக்கவே கட்டளை இடப்பட்டிருக்கிறது. கட்டளையை மீறினால் நாளை அவன் உயிரோடிருப்பது கூட நிச்சயமில்லை. என்ன பிழைப்பு இது என்று தனக்குள்ளே சலித்துக் கொண்டான்...

 

திடீரென்று அவன் மேல் ஏதோ விழுந்தது. அவன் நடுநடுங்கிப் போய் டார்ச் விளக்கைப் போட்டுப் பார்த்தான். அணில் ஒன்று வேகமாய் ஓடி ஒரு புதருக்குள் மறைந்தது. பந்தயத்தில் ஓடிய அவன் இதயத்துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள் ஆகாயத்தில் ஏதோ ஒரு பெரிய கரிய பறவை மிக வேகமாகப் பறந்ததைப் பார்த்தான்.... கூர்ந்து பார்ப்பதற்குள் அது கண்ணில் இருந்து மறைந்து விட்டது.... இதயம் மறுபடி படபடக்க ஆரம்பித்தது. இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால் மாரடைப்பு வந்து செத்தே விடுவோம் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது.     

 

அவனைக் காப்பாற்றுகிற மாதிரி தூரத்தில் கார் ஒன்று வரும் சத்தம் கேட்டது. அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி மறைவில் இருந்து வெளியே வந்தான். அவனருகே கார் வந்து நின்றது. வெண்பஞ்சாய் நரைத்த தலை வெளியே எட்டிப் பார்த்தது. “என்னடா வேற யாராவது போனாங்களா...கரகரத்த குரல் கேட்டது.

 

“இல்லைஎன்று சொல்ல நினைத்து வார்த்தை வராமல் தலையை மட்டும் அவன் அசைத்தான்.

 

“என்னடா பேயைப் பாத்த மாதிரி நிக்கறே. பேயின்னு ஒன்னு இருந்தாலும் நாம அதப்பாத்து பயப்படக்கூடாது. அது நம்மளப் பாத்து பயக்கணும்டா. போய் அடுத்த வேலயப் பார்

 

இந்த ஆள் இருக்கையில் இந்தப் பகுதிக்கு வர  பேய் கூடப் பயப்படும் என்று நினைத்த அவன் தைரியம் வந்தவனாய் தலையசைத்தான். அந்தக் கார் மலையடிவாரத்தை நோக்கி விரைய, அவன் சற்று தள்ளி ஒதுக்குப் புறத்தில் மறைவில் நிறுத்தியிருந்த தன் யமஹாவைக் கிளப்பிக் கொண்டு எதிர் திசையில் பறந்தான். இரண்டு கிலோ மீட்டர் பயணித்து மெயின் ரோட்டிற்கு வந்தவன் அங்கு ஓரமாய் வைத்திருந்த “சாலைப்பணி நடைபெறுகிறதுஎன்ற அறிவிப்புத் தடுப்புகள் இரண்டை எடுத்து, தான் வந்த பாதைக்குக் குறுக்கில் நிறுத்தினான். யாருமே இந்த நேரத்தில் அந்தப் பாதையில் செல்லப் போவதில்லை என்ற போதும் கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு அவனுக்கு அந்த வேலை தரப்பட்டிருந்தது.

 

அப்படி சாலைத் தடுப்புகளை நிறுத்தி விட்டு மறுபடி அங்கே ஒதுக்குப் புறத்தில் மறைந்து நின்று கொண்டான். ஓரிரண்டு வாகனங்களாவது அவ்வப்போது அந்த மெயின் ரோட்டில் போய் வந்து கொண்டிருந்தன. அமானுஷ்ய அமைதியும் அங்கில்லை. அதனால் பழைய இடத்தைப் போல அங்கே அவனுக்குப் பயம் இருக்கவில்லை....

 

ந்தக் கார் சத்தமில்லாமல் மலையடிவாரத்தை அடைந்த போது அங்கு அந்த இளைஞனது பஜாஜ் பல்சர் பைக் நிறுத்தப்பட்டிருந்தது.  காரை ஓட்டி வந்தவன் சற்று தூரத்திலேயே காரின் உள், வெளி விளக்குகளை எச்சரிக்கையோடு அணைத்திருந்தான். மலையடிவாரத்தில் காரை நிறுத்திய பின்னும் உடனடியாக இறங்கி விடாமல் உள்ளிருந்த படியே மலையின் உச்சியைக் கூர்ந்து கவனித்தான்.

 

பயப்படாதே.... பக்கத்துல போய் நின்னா கூட அவன் உடனே உன்னைக் கவனிப்பானாங்கறது நிச்சயமில்ல 

 

அருகிலிருந்து கரகரத்த குரல் அவனை தைரியமூட்டும் தொனியில் இருந்தது. அவன் தலையசைத்தாலும் பார்ப்பதை நிறுத்தவில்லை. சிறிது நேரம் கவனித்து விட்டு இறங்க அவன் முடிவெடுத்த போது அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் கரகரத்த குரலில் சொன்னார்.

 

“எந்த வகையிலும் கொலையா யாருக்கும் தெரியக் கூடாது. அவன் சாதாரண குப்பனோ சுப்பனோ அல்ல. அவன் அப்பன் இந்த மாநிலத்தோட சக்தி வாய்ந்த மந்திரி. அவன் அண்ணன் எம்.பி. கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் ஆபத்து தான். தெரியுமில்ல...

 

அவன் தலையசைத்தான். இந்த ஆள் தைரியமூட்டுவதும், இப்படி ஏழாவது முறையாக எச்சரிப்பதும் அவனுக்கு எரிச்சலைத் தான் ஏற்படுத்தியது. ஆனால் அவன் அதை வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. மற்ற ஆட்களிடமாக இருந்தால் “யோவ் என்னை ஒழுங்கா வேலை செய்ய விடுய்யா. சும்மா தொண தொணன்னு பேசிட்டிருந்தா எனக்குப் பிடிக்காதுஎன்று எரிந்து விழுந்திருப்பான். ஆனால் இந்த ஆளிடம் அப்படிப் பேசுவது ஆபத்து. வாழ்நாள் முழுவதற்குமாய் ஒரு தீவிர எதிரியைச் சம்பாதிப்பதாக அது ஆகி விடும். இந்த ஆளின் எதிரிகள் எப்படியெல்லாம் நரக வாழ்க்கை அனுபவித்தார்கள் என்பதை அவன் பார்த்தும், கேள்விப்பட்டும் இருக்கிறான்...

 

அவன் காரின் பின் சீட்டிலிருந்த ஒரு அட்டைப் பெட்டியை மிகவும் கவனமாக எடுத்துக் கொண்டான். பயமே அறியாதவராகப் பலரும் நினைக்கும் அந்தப் பஞ்சுத் தலையர் கூட அந்த அட்டைப் பெட்டி அவர் அருகே கொண்டு வரப்பட்ட போது வேகமாய் பின்னால் கதவோரத்தை ஒட்டி நகர்ந்தார். அவனுக்கு அவர் செய்கை சின்னதாய் ஒரு முறுவலை முகத்தில் வரவழைத்தது. ‘உயிர்ப்பயம் யாரை விட்டது!

 

அந்த முறுவல் அவர் கண்களுக்குத் தப்பவில்லை. அவனைக் கூர்ந்து பார்த்தார். அவன் முறுவல் வந்த வேகத்தில் மறைந்தும் போனது. அவன்  அந்த அட்டைப் பெட்டியோடு காரை விட்டு இறங்கினான். கார்க்கதவை இழுத்துச் சாத்தினால் அது கூட இந்த இரவின் அமைதியில் அந்த இளைஞனுக்குக் கேட்டு விடுமோ என்று எச்சரிக்கையோடு கதவை மெல்ல சாத்தினான்.  பின் வேகமாக அவன் மலையை நோக்கி நடந்தான். பார்வையிலிருந்து அவன் மறைகிற வரை அவர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்...

 

ஒரு பெருங்காற்று அமானுஷ்ய ஒலியோடு வீசியது. ஆனால் அவருடைய வேலையாள் சிறிது நேரத்துக்கு முன் பயப்பட்டது போல அந்த பஞ்சுத் தலையர் பயப்படவில்லை. இப்போது போனவன் வேலையை முடித்து விட்டு வருவதற்காக அவர் பரபரப்போடு காத்திருந்தார்.

 

 2

 

காத்திருப்பது சுலபமல்ல. அதுவும் மிக முக்கியமான, இக்கட்டான தருணங்களில் வினாடி முள் கூட மிக மிக நிதானமாகவே நகரும். வேகமாக நடக்க முடிந்த பழைய காலமாய் இருந்தால் பஞ்சுத் தலையர் அவன் கூடவே போயிருப்பார். கொடுத்த வேலை எப்படி நடக்கிறது என்று பக்கத்தில் இருந்தே கண்காணித்திருப்பார். சாகிற போது அந்த இளைஞன் முகபாவனை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க அவருக்குப் பேராவலாக இருந்தது. ஆனால்  இப்போதைய வயோதிகத்தினால் மலை மேல் வேகமாக நடக்கும் சக்தி அவருக்கில்லை. மலையுச்சியை அவரும் சற்று குனிந்து கூர்ந்து பார்த்தார். மலையுச்சியில் காரிருள் மண்டிக் கிடந்ததே தவிர எந்த அசைவும் தெரியவில்லை. பொறுமை இல்லாமல் தொடையில் தாளம் போட ஆரம்பித்தார்.

 

இப்போது போனவன் கண்டிப்பாகத் தன் வேலையை முடித்து விட்டு வெற்றியோடு தான் திரும்புவான்... சந்தேகமேயில்லை..... ஏனென்றால் அந்த வாடகைக் கொலையாளி மிகவும் திறமையானவன்.... கொலை போலத் தெரியாமல் அந்த மரணம் நிகழ வேண்டும் என்று சொன்ன போது சிறிதும் யோசிக்காமல் ஒத்துக் கொண்டான். ஆனால் எப்படிச் செய்யப் போகிறாய் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்திய போது மட்டும் அவன் தயங்கினான். பின் மெள்ளச் சொன்னான். அவன் தெரிவித்த திட்டம் மிகவும் கச்சிதமானது. யாரும் கண்டுபிடிக்க வழியே இல்லை. ஆனாலும் ஏதோ ஒன்று அவரை அமைதியிழக்க வைத்தது....

 

பேய்க்காற்று ஊளையிடும் தொனியில் வீசியது. இதை வைத்துத் தான் இங்கு பேய்கள், ஆவிகள் உலாவுவதாக முட்டாள்கள் ஒரு காலத்தில் பேசி இருக்க வேண்டும். அந்தப் பகுத்தறிவு அமைப்பினர் மட்டும் இங்கு வந்திரா விட்டால் இப்போதும் இந்த முட்டாள் ஜனங்கள் நம்பி நடுங்கிக் கொண்டிருப்பார்கள். இத்தனை தெளிவாக எல்லாம் வெளியாகி இருந்தும் போன மாதம் ஒரு பணக்காரன் இந்த மலையுச்சியில் சிறியதாக ஒரு அம்மன் கோயிலைக் கட்டியிருக்கிறான். சாமி இருந்தால் பேய், ஆவி எதுவும் வராதாம். சாமிக்குப் பேயோட்டும் வேலை தான் போலிருக்கிறது...

 

ஏதோ அபசகுனம் போல வானத்தில் பெரிய கரிய பறவை ஒன்று மலை உச்சி நோக்கிப் பறந்தது தெரிந்தது. வௌவாலா, வேறெதாவது பறவையா தெரியவில்லை. சாகப் போகிற அந்த இளைஞனைக் கேட்டால் அந்தப் பறவையின் பெயர் மட்டுமல்லாமல் அந்தப் பறவையினம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியையும் விளக்கி இருப்பான். பாவம், அறிவின் அளவுக்கு அவனுக்கு ஆயுசு அதிகம் இல்லை.....

 

எல்லையில்லாமல் நீண்ட காலம், திடீரென்று முடிவுக்கு வந்தது. சற்று தூரத்தில் அந்த வாடகைக் கொலையாளி தெரிந்தான். வேகமாக வந்தவன் மிகவும் கவனமாகத் தன் கையில் இருந்த அட்டைப்பெட்டியை காரின் பின் சீட்டில் வைத்து விட்டுக் காரைக் கிளப்பினான்.

 

“என்ன ஆச்சு?என்று அவர் அமைதியிழந்து கேட்டார்.

 

“செத்துட்டான்அவன் அமைதியாகச் சொன்னான்.

 

அவருக்கு உடனடியாக சந்தோஷப்பட முடியவில்லை. அவருக்கு ஏனோ முதலிலேயே எதிர்பார்த்திருந்தாலும் கூட இப்போது நம்பக் கஷ்டமாகவே இருந்தது. ஒரு நிமிடம் அவனையே கூர்ந்து பார்த்தார். அவன் வந்த வழியே காரை ஓட்டிக் கொண்டிருந்தானே ஒழிய அவர் பார்வையைப் பொருட்படுத்தவில்லை.

 

“எப்படி?அவர் கேட்டார்.

 

“நான் முதல்ல சொன்ன மாதிரியே தான்....”  என்று சொன்னவன் காரின் வேகத்தை அதிகப்படுத்தினான். இந்த ஆளுடன் இருக்கும் நேரத்தை அவன் குறைக்க விரும்பினான். சில மனிதர்களைச் சகித்துக் கொள்வது சுலபமல்ல. இந்த ஆள் அந்த வகையைச் சேர்ந்தவர் தான்....

 

அவருக்கு அவன் பதில் திருப்தியளிக்கவில்லை. விரிவாக என்ன நடந்தது என்பதைச் சொன்னால் தேவலை என்று தோன்றியது. அதனால் விரிவாகச் சொல் என்று சொல்ல வாய் திறந்தார். ஆனால் அந்த நேரமாகப் பார்த்து அவர் அலைபேசி பாடித் தொலைத்தது. எடுத்துப் பேசியவர் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார். “முடிஞ்சுது

 

அவர் பேச்சை முடிக்க எதிர்தரப்பு அனுமதிக்கவில்லை போல் தெரிந்தது. அழைத்துப் பேசிய நபர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, இடையிடையே “ஆமா”, “ம்”, “வந்துகிட்டிருக்கோம்...என்றெல்லாம் சொல்லிக் கடைசியில் ஒருவழியாக அவர் அலைபேசியைக் கீழே வைத்த போது அவர்கள் கார் மெயின் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பருகே வந்திருந்தது. அவரது பணியாள் வேகமாக ஓடி வந்து அந்தச் சாலைத் தடுப்புகளை அப்புறப்படுத்தினான்.

 

வெளியே எட்டிப் பார்த்து அந்த வேலையாளிடம் அவர் கேட்டார். “ப்ரச்னை எதுவும் இல்லயே

 

“இல்லீங்கய்யா

 

கார் மறுபடி பறந்தது. சில வினாடிகளில் அவருடைய சொந்தக் கார் டிரைவருடன் தூரத்தில் நின்றிருந்ததைப் பார்த்தார். இனி அவர் அருகில் அமர்ந்திருந்தவனிடம் விரிவாகக் கேட்க நேரமில்லை.  அதனால் ஒரே கேள்வி கேட்டார். “பாம்பு அவனை எங்கே கடிச்சுது

 

“வலது கால் பெருவிரல்ல என்றான்.  

 

அவர் கார் அருகே அவன் தன் காரை நிறுத்தினான். அவர் இறங்கிக் கொள்ள அவன் கார் மீண்டும் பறந்தது. கொலைக்காட்சியைத் தெளிவாகவும், முழுவதுமாகவும் அவன் வாய் வழியே கேட்க முடியாத அதிருப்தியுடன் கண்களைச் சுருக்கிக் கொண்டே அந்தக் காரையே பார்த்துக் கொண்டு அவர் நின்றார். ஏழே நொடிகளில் கார் அவர் கண் பார்வையிலிருந்து மறைந்தது.

 

காரில் ஏறிய அவர் தன் டிரைவரிடம் சொன்னார். “அவன் மாதிரியே வேகமாய் போடா

 

ன்றிரவு அவரால் உறங்க முடியவில்லை. எப்போது விடியும் என்று ஆவலோடு காத்திருந்தார். அந்த அறிவுஜீவி இளைஞனின் பிணத்தை டிவியில் பார்க்கிற வரை நிம்மதியில்லை.... மெள்ள விடிந்தது.

 

பிணத்தை யார் முதலில் பார்க்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. காலையில் சுள்ளி பொறுக்கப் போகிற பெண்களா, ஆடு மேய்க்கும் பையன்களா, மலை மேல் இருக்கும் அந்தச் சின்னக் கோயிலுக்குப் பூஜை செய்யப் போகும் பூசாரியா என்று எண்ணியபடி அவர் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பித்தார்.

 

பக்தி இசை, கோயில் உலா, திருக்குறள், இன்றைய விருந்தினர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தன. ஆனால் அவர் எதிர்பார்த்த செய்தி இன்னும் வரவில்லை. மணி எட்டான போது அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. அவரைப் போலவே இருப்பு கொள்ளாமல் இருந்த இன்னொரு நபரின் அலைபேசி அழைப்பு வந்தது. “என்ன, ந்யூஸ்ல ஒன்னயும் காணோம்....?   

 

“தெரியல. பொறு. ஆளனுப்பிப் பார்க்கறேன்என்றவர், நேற்று இரவு கண்காணிப்பு வேலையில் ஈடுபடுத்தியிருந்த அதே வேலையாளை  அலைபேசியில் தொடர்பு கொண்டார்.

 

முக்கால் மணி நேரத்தில் அவன் போன் செய்தான். “ஐயா அவனோட பைக் இன்னும் மலையடிவாரத்தில் தான் இருக்கு

 

அவருக்குக் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. அவன் உயிரோடு இருந்திருந்தால் காலை ஆறரைக்குள் பைக்கோடு கிளம்பியிருப்பான். இப்போது மணி ஒன்பது.

 

அவர் வேலையாளிடம் சொன்னார். “நீ மலைக்கு  மேல அங்கிருக்கற கோயிலுக்குப் போற மாதிரி போ. போய் அவன் பிணம் இருக்கான்னு பாரு. அவன் பிணத்தை முதல்லயே யாராவது பாத்திருந்தா நீயும் அவங்களோட சேர்ந்து வேடிக்கை பாரு. அவனைத் தெரிஞ்ச மாதிரியே காட்டிக்காதே.... பிணத்த யாரும் கண்டுபிடிக்காம இருந்தா அது எங்க இருக்குன்னு உடனடியா கண்டுபிடி. கண்டுபிடிச்ச பிறகு யார் கிட்டயும் அங்கே சொல்லப் போகாம அமுக்கமா கிளம்பி வந்துடு. ஏன்னா எப்பவுமே போலீஸ்காரனுக முதல்ல பிணத்த பாத்தது யாருன்னு தான் முதல்ல கேப்பானுக.... அவனுக உன்னை விசாரிக்க வேண்டாம்....

 

“சரிங்கய்யா...என்று சொல்லிவிட்டுப் போனவன் திரும்ப அழைக்கும் வரை அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. இந்தக் காலத்து வேலையாட்கள் சுறுசுறுப்பில்லாத பாதி சவங்களாகத் தான் இருக்கிறார்கள். ஏன் தாமதம் என்று கேட்டால் மட்டும் சளைக்காமல் சொல்ல ஏராளமான பதில்கள் வைத்திருப்பார்கள். ஒருவன் சரியில்லை என்று வேலையில் இருந்து நீக்கினால் அடுத்து வேலைக்குச் சேர்பவன் முந்தைய ஆளே பத்து மடங்கு பரவாயில்லை என்று நினைக்க வைத்து விடுகிறான். எல்லாம் காலத்தின் கோலம்.....

 

அவன் பத்தரை மணிக்கு அவரை அலைபேசியில் அழைத்தான். “ஐயா மலைக்கு மேல கோயில்ல பூசாரி பூஜைய முடிச்சுட்டு நான் போறதுக்குள்ளயே கீழ வந்துட்டாரு. மேல சும்மா சுத்திகிட்டிருந்த ரெண்டு பசங்க, சுள்ளி பொறுக்கற ஒரு கிழவி தவிர யாரும் இல்லீங்கய்யா. நான் எல்லா இடங்கள்லயும் நல்லாவே தேடிட்டேன். ஆனா பிணம் கிடைக்கலீங்கய்யா....

 

அவர் அந்தத் தகவலில் அதிர்ந்து போனார். ஒழுங்கா தேடினியா?

 

“ஆமாங்கய்யா. அதனால தான் இவ்ளவு லேட்டு

 

அவருக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அவர் அடுத்ததாக வாடகைக் கொலையாளிக்குப் போன் செய்தார். மணி அடித்தது. அடித்துக் கொண்டே இருந்தது. ஆனால் அவன் போனை எடுக்கவே இல்லை.....

 

அவர் ஆபத்தை உணர்ந்தார். என்ன ஆயிற்று?

 ----

(நாவலை வாங்கி மீதியை நீங்கள் படித்து மகிழலாம்)


 ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/dp/8195612873?ref=myi_title_dp

அமேசான் கிண்டிலிலும் கிடைக்கிறது. லிங்க் - 

https://www.amazon.in/dp/B0C3ZDC2H6


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.