வெள்ளி, 19 மே, 2023

என்.கணேசனின் கீதை காட்டும் பாதை வெளியீடு!

 


இதுவரை கிண்டிலில் மின்னூலாக மட்டுமே இருந்து வந்த என்.கணேசனின் கீதை காட்டும் பாதை தற்போது அச்சு நூலாக என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது. 296 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.350/- 

நூலுக்கு திரு. என்.கணேசன் எழுதிய முன்னுரை இதோ - 

முன்னுரை                                       

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

பகவத் கீதைக்கு ஆதிசங்கரர் முதல் எத்தனையோ ஞானிகள் உரை எழுதியிருக்கிறார்கள். எத்தனையோ பண்டிதர்கள் வியாக்கியானம் செய்து இருக்கிறார்கள். அந்த அளவு ஞானமோ, தகுதியோ எனக்கு இல்லை என்றாலும் ஒரு சாமானியனாக நான் கீதை இன்றைய கால கட்ட மனிதர்களுக்கு எப்படி வழி காட்டுகிறது என்பதை அதனைப் படித்து ஆழ்ந்து சிந்தித்த ஆர்வக் கோளாறு காரணமாக எழுத முற்பட்டேன். ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கும், வாழ்க்கையில் அமைதி வேண்டுபவர்களுக்கும், மெய்ஞானத்தை அடைய விரும்புபவர்களுக்கும் கீதை காட்டும் வழியை தேடல் உள்ள அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையான நடையில் எழுத வேண்டும் என்ற ஆவலின் விளைவே இந்த நூல்.

கீதோபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமல்லாமல் யாரெல்லாம் அதை ஆழ்ந்து படிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வழிகாட்டக்கூடியது. மகாத்மா காந்தி அதை மிக அழகாகக் கூறியுள்ளார்: “கீதை சூத்திரங்கள் அடங்கிய நூல் அல்ல. அது கவிதை உருவான மகத்தான நூல். நீங்கள் அதை எந்த அளவுக்கு ஆழ்ந்து பரிசீலனை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதிலிருந்து அற்புதமான அர்த்தங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். காலம் செல்லச் செல்ல அதில் உள்ள முக்கிய வார்த்தைகள் புதிய விரிவான அர்த்தங்களுடன் திகழ்கின்றன.....என்னைப் பொறுத்த மட்டில் எனது நடத்தையை உருவாக்கும் தவறாத ஒரு வழிகாட்டியாக கீதை அமைந்தது. அது தினந்தோறும் என் சந்தேகங்களைத் தீர்க்கும் ஒரு அகராதியாக அமைந்தது. எனக்கு கஷ்டங்களும், சோதனைகளும் ஏற்பட்ட போது அதிலிருந்து விடுதலை பெற நான் இந்த அகராதியையே நாடினேன்”.

காந்தியடிகள் சொன்னது போல் கீதோபதேசம் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ உள்ளங்களில் இருள் மண்டிய போதெல்லாம் ஞான விளக்கேற்றி வைத்திருக்கிறது. பண்டிதன் முதல் பாமரன் வரை, அரசன் முதல் அன்றாடங்காய்ச்சி வரை இந்த ஞானாக்னியில் தங்கள் துக்கங்களையும், அறியாமையையும் பொசுக்கி பலனடந்து இருக்கிறார்கள்.  இன்று நமக்கும் கீதோபதேசம் எவ்வாறு பொருந்துகிறது, கீதையின் ஞானம் எப்படி நமக்கு போக வேண்டிய பாதையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது என்கிற நோக்கையே இந்தத் தொடரில் பிரதானப்படுத்தி இருக்கிறேன். எனவே இதில் கீதையின் முழு உரையையும் அப்படியே தராமல் முக்கியமான அனைத்துச் சுலோகங்களையும் சொல்லி அதற்கான விளக்கங்களை என் அறிவுக்கு எட்டிய அளவில் விவரித்திருக்கிறேன். எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் உண்மைகளை அழகாகக் கூறும் பகவத் கீதையின் முக்கிய சாராம்சத்தை உதாரணங்களுடனும், விஞ்ஞான உண்மைகளுடனும், மற்ற அறிஞர்கள் கருத்துடனும் இணைத்து விளக்க முற்பட்டுள்ளேன்.

இதை எந்திரத்தனமாய் படித்துக் கொண்டே போவதை விட சிறிது நேர வாசிப்புக்குப் பின் அது குறித்து சிந்தியுங்கள். முக்கியமாக படிப்பினூடே உங்கள் வாழ்க்கைக்கு உதவுகிற  சிந்தனைகள், மாற்றி யோசிக்கத் தூண்டும் மெய்ஞான உண்மைகள், ஆமாயில்ல என்று பிரமிக்க வைக்கும் பொறி தட்டும் சத்தியங்கள் படிக்க நேர்ந்தால் கண்களை மூடிக் கொண்டு மனதில் சிறிது நேரமாவது அதை ஊறப்போடுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்று யோசியுங்கள். இந்த நூல் உங்களுக்குப் பயன்படுவது அந்த வகையிலேயே முழுமையாக இருக்கும். பின் மறுபடி தொடருங்கள்

நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதே எந்தவொரு உபதேசத்தின் நோக்கமும் பயனும் ஆகும். மகத்தானதொரு புனிதநூலின் மெய்ஞான உண்மைகளை எனக்குப் புரிந்த அளவு நானும் எழுத வேண்டும் என்ற உந்துதலில் உருவான இந்த  நூல்  படிப்பவர்கள் மனதிலும் வாழ்விலும் மாற்றங்களைச் சிறிதேனும் ஏற்படுத்தினால் எழுதிய பயன் கிடைத்ததாய் பெருமகிழ்ச்சி அடைவேன்.

வாருங்கள் கீதை காட்டும் பாதையில் பயணிப்போம்

அன்புடன்

என்.கணேசன்

நூலை அமேசானில் ஆன்லைனில் வாங்கலாம். லிங்க் -

https://www.amazon.in/dp/8195612857?ref=myi_title_dp

அல்லது என்.கணேசன் புக்ஸிலிருந்து நேரடியாகவும் வாங்கலாம். தொடர்புக்கு அலைபேசி எண்.9486309351 மற்றும் மின்னஞ்சல் nganeshanbooks@gmail.com ஐ தொடர்பு கொள்ளவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக