வெள்ளி, 31 டிசம்பர், 2021

பரம(ன்) இரகசியம் நாவல்

 


பரம(ன்) இரகசியம்


என்.கணேசன் எழுதிய நாவல்களில் இந்த நாவல் நான்காவது நாவல் என்ற போதும் அச்சில் வந்த நாவல்களில் இது முதலாம் நாவல். 

பெரிய நாவல்களில் மூன்று பதிப்புகள் காண்பது என்பது இக்காலக் கட்டத்தில் அரிதிலும் அரிது என்ற போதும் இந்த நாவல் அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த நாவலின் முதல் பதிப்பு ஜனவரி 2014லும், இரண்டாம் பதிப்பு ஜூன் 2016லும், மூன்றாம் பதிப்பு டிசம்பர் 2020லும் வெளியானது.

696 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.750/- 


நூற்குறிப்பு:

சித்தர்கள் ரகசியமாய் பூஜித்து, பாதுகாத்து வந்த விசேஷ மானஸ லிங்கத்தை அதன் தெய்வீக சக்திகளுக்காக ஒரு கும்பல் கடத்திச் செல்கிறது. ஓலைச்சுவடிகள் முதல் விஞ்ஞானக் கருவிகள் வரை பயன்படுத்தி அந்தச் சிவலிங்கத்தின் சக்திகளை அடைய முற்படுகிறது.

கடத்தப்பட்ட சிவலிங்கத்தைக் கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பு ஒரு இளம் ஆழ்மனசக்தி ஆராய்ச்சியாளனுக்கு வந்து சேர்கிறது. அவன் அதற்காகப் பழைய பகையை மறந்து அச்சிவலிங்கம் சம்பந்தப்பட்ட தன் குடும்ப மூத்தவர்களுடன் இணைய நேர்கிறது.

இதைத் தொடர்ந்து அத்தியாயத்துக்கு அத்தியாயம் பரபரப்பான, திகிலான நிகழ்வுகள், அமானுஷ்யம், ஆழ்மனசக்தி, ஆன்மீகம், தத்துவம், விஞ்ஞான ஆராய்ச்சிகள்... இவற்றுடன் கண்கள் அக்னியாய் ஜொலிக்கும் அக்னிநேத்திர சித்தர், பக்தி மட்டுமே தெரிந்த ஒரு வெள்ளந்தி பூசாரி, விஞ்ஞானப் பார்வையாலேயே சிவலிங்கத்தை அணுகும் ஒரு குருஜி போன்ற கதாபாத்திரங்களும் பின்னிப் பிணைகிறார்கள். இத்தனைக்கும் நடுவில் புதிராய் இயங்கும் விசேஷ மானஸ லிங்கம்!

பிடிபடுமா பரமனின் இரகசியம்?

அறிய இந்த நூலை வாங்கிப் படியுங்கள்


நூலின் இரண்டு அத்தியாயங்கள் வாசகர்களுக்காக இலவசமாய் -



பரம(ன்) ரகசியம்!

*என்.கணேசன்*

 

1

 

புறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரையும், முன்னால் இருந்த பெரிய இரும்புக் கதவையும் அவன் ஒருவித அலட்சியத்துடன் ஆராய்ந்தான். இரும்புக் கதவை ஒட்டிய சுவரில் ஒட்டியிருந்த கரும்பலகையில் ”சர்வம் சிவமயம்” என்ற வாசகம் கரும்பலகையில் தங்க எழுத்துகளில் மின்னியது தெருவிளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. உள்ளே நாய்கள் இல்லை என்ற தகவலை அவனுக்கு அந்த வேலையைக் கொடுத்தவர்கள் முன்பே சொல்லி இருந்தார்கள். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை ஒரு முறை உறுதிப்படுத்திக் கொண்டு அவன் அனாயாசமாக அந்த இரும்புக் கேட்டில் ஏறி உள்ளே குதித்தான்.

வீட்டினுள்ளே அந்த நேரத்திலும் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றாலும் பயப்படவும் இல்லை. அவன் தன் சிறிய வயதில் இருந்து அறியாத ஒரு உணர்ச்சி பயம் தான். பன்னிரண்டு வயதில் திருடவும், பதினேழு வயதில் கொலை செய்யவும் ஆரம்பித்தவன் அவன். எத்தனை கொள்ளை அடித்திருக்கிறான், எத்தனை கொலை செய்திருக்கிறான் என்ற முழுக்கணக்கை அவன் வைத்திருக்கவில்லை. போலீசாரிடமும் அதன் முழுக்கணக்கு இல்லை. அத்தனை செய்த போதும் சரி, அதில் சிலவற்றிற்காக பிடிபட்ட போதும் சரி அவன் பயத்தை சிறிதும் உணர்ந்திருக்கவில்லை.

ஒரு அமானுஷ்ய அமைதியைத் துளைத்துக் கொண்டெழுந்த சுவர்க்கோழியின் சத்தம் தவிர அந்த இடத்தில் வேறெந்த ஒலியும் இல்லை. அவன் சத்தமில்லாமல் வீட்டை நோக்கி முன்னேறினான். வீட்டை முன்பே விவரித்திருந்தார்கள். ஒரு ஹால், படுக்கையறை, பூஜையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை கொண்டது அந்த வீடு. வீட்டின் முன் கதவு மிகப்பழையது, மரத்தினாலானது, பழைய பலவீனமான தாழ்ப்பாள் கொண்டது, அதனால் உள்ளே நுழைவது அவனுக்கு அத்தனை கஷ்டமான காரியம் அல்ல என்று சொல்லி இருந்தார்கள்.

ஹாலில் தான் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஹால் ஜன்னல் திறந்து தான் இருந்தது. மறைவாக நின்று கொண்டு உள்ளே பார்த்தான். முதியவர் ஒருவர் ஹாலில் ஜன்னலுக்கு நேரெதிரில் இருந்த பூஜையறையில் தியானத்தில் அமர்ந்திருந்தார். பூஜையறையில் இரண்டு அகல்விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பூஜையறையில் ஒரு சிவலிங்கத்தைத் தவிர வேறு எந்த விக்கிரகமோ, படங்களோ இல்லாதது விளக்கொளியில் தெரிந்தது.

இந்த சிவலிங்கம் தான் அவர்கள் குறி. அந்த சிவலிங்கத்தை அவன் உற்றுப்பார்த்தான். சாதாரண கல் லிங்கம் தான். இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்பது அவனுக்குப் புரியவில்லை. அவனுக்கு உடல் வலிமையும், மன தைரியமும் இருந்த அளவுக்கு அறிவுகூர்மை போதாது. அதனால் அவன் அதைத் தெரிந்து கொள்ளவும் முனையவில்லை.

அந்த முதியவர் மிக ஒடிசலாக இருந்தார். அவரைக் கொல்வது ஒரு பூச்சியை நசுக்குவது போலத் தான் அவனுக்கு. இந்த வேலையை முடிக்க எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்ட போது பேரம் பேசுவார்கள் என்று நினைத்து இரண்டு லட்சம் வேண்டும் என்று கேட்டான். அவர்கள் மறுபேச்சு பேசாமல் ஒத்துக் கொண்டதை இப்போது நினைத்தாலும் அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. மூன்று லட்சமாகக் கேட்டிருக்கலாமோ?


ஆனால் பண விஷயத்தில் பேரம் பேசாதவர்கள், முன்னதாகவே ஒரு லட்ச ரூபாயையும் முன்பணமாகக் கொடுத்தவர்கள், மற்ற சில நிபந்தனைகள் விதித்தார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த முதியவரை பூஜையறையில் கொல்லக் கூடாது, எந்தக் காரணத்தைக் கொண்டும் அவன் அந்த பூஜையறைக்குள் நுழையவோ, சிவலிங்கத்தைத் தொடவோ கூடாது என்று உறுதியாகச் சொல்லி இருந்தார்கள். அவன் அறிவுகூர்மை பற்றி அவர்கள் அறிந்திருந்தார்களோ என்னவோ, சொன்னதை அவன் வாயால் திரும்பச் சொல்ல வைத்துக் கேட்டார்கள். அந்த லிங்கத்தில் ஏதாவது புதையல் இருக்குமோ? தங்கம் வைரம் போன்றவை உள்ளே வைத்து மூடப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்கு இப்போது வந்தது. அப்படி இருந்தால் கேட்ட இரண்டு லட்சம் குறைவு தான்.


கிழவர் அந்த பூஜையறையில் அமர்ந்திருப்பது இப்போது அவனுக்கு அனுகூலமாக இல்லை. முன்னால் சிவலிங்கம் சிலையாக இருக்க, முதியவரும் இன்னொரு சிலை போல அசைவில்லாமல் உட்கார்ந்திருந்தார். மனதுக்குள்ளே கிழவரிடம் சொன்னான். “யோவ் சாமி கும்பிட்டது போதும்யா. வெளியே வாய்யா”

அவன் வாய் விட்டுச் சொல்லி அதைக் கேட்டது போல் முதியவர் கண்களைத் திறந்து அவனிருந்த ஜன்னல் பக்கம் பார்த்தார். அவனுக்கு திக்கென்றது. அவனை அறியாமல் மயிர்க்கூச்செரிந்தது. ஒருசில வினாடிகள் ஹால் ஜன்னலைப் பார்த்தார் அவர். கண்டிப்பாக இருட்டில் நின்றிருந்த அவனை அவர் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. என்றாலும் அவர் பார்வை அவனைப் பார்ப்பதாக அவன் உணர்ந்தான். ஆனாலும் அவனுக்கு பயம் வந்து விடவில்லை. அவனைப்பார்த்து மற்றவர்கள் தான் பயப்பட வேண்டுமே ஒழிய அவன் யாரையும் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

கிழவர் முகத்தில் லேசானதொரு புன்னகை அரும்பி மறைந்ததாக அவனுக்குத் தோன்றியது. அவர் அமைதியாக எழுந்து நின்று சாஷ்டாங்கமாக விழுந்து சிவலிங்கத்தை வணங்கினார். வணங்கி எழுந்து அவர் திரும்பிய போது அவர் முகத்தில் அசாதாரணமானதொரு சாந்தம் தெரிந்தது. அவர் பூஜையறையை விட்டு வெளியே வந்தார். வெளியே வந்தவர் பத்மாசனத்தில் அந்த சிவலிங்கத்தைப் பார்த்தபடியே ஹாலில் அமர்ந்தார்.


அவன் உள்ளுணர்வு சொன்னது, அவன் அங்கே இருப்பது அவருக்குத் தெரியும் என்று. அவனுக்கு சந்தேகம் வந்தது. வீட்டுக்குள் வேறு யாராவது ஒளிந்து கொண்டிருக்கிறார்களோ? அதனால் தான் அவர் அவ்வளவு தைரியமாக அப்படி உட்கார்கிறாரோ? மெல்ல வீட்டை சத்தமில்லாமல் ஒரு சுற்று சுற்றி வந்தான். எல்லா ஜன்னல்களும் திறந்து தான் இருந்தன. அதன் வழியாக உள்ளே நோட்டமிட்டான். இருட்டில் பார்த்துப் பழகிய அவன் கண்களுக்கு உள்ளே வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. மறுபடி அவன் பழைய இடத்திற்கே வந்து ஹால் ஜன்னல் வழியாக அவரைப் பார்த்தான். அவர் அதே இடத்தில் பத்மாசனத்திலேயே இன்னமும் அமர்ந்திருந்தார். பூஜையறையில் அகல்விளக்குகள் அணைந்து போயிருந்தன.

இனி தாமதிப்பது வீண் என்று எண்ணியவனாக அவன் வீட்டின் கதவருகே வந்தான். கதவு லேசாகத் திறந்திருந்ததை அவன் அப்போது தான் கவனித்தான். அவனுக்கு இது எல்லாம் இயல்பாகத் தெரியவில்லை. அவனுக்குப் புரியாத ஏதோ ஒரு விஷயம் மிகவும் பிரதானமாக அங்கே இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஆனாலும் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு அவன் மெல்ல கதவைத் திறந்து ஒரு நிமிடம் தாமதித்தான். பின் திடீரென்று உள்ளே பாய்ந்தான். அவனை ஆக்கிரமிக்க அங்கே யாரும் இல்லை.


அவன் பாய்ந்து வந்த சத்தம் அவரைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அவர் தியானம் கலையவும் இல்லை. அவனுக்கு அவர் நடவடிக்கை திகைப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. ”என்ன இழவுடா இது. இந்த ஆள் மனுசன் தானா?” என்று தனக்குள்ளே அவன் கேட்டுக் கொண்டான். உடனடியாக வேலையை முடித்து விட்டு இந்த இடத்தை விட்டுப் போய் விடுவது தான் நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

அதற்குப் பின் அவன் தயங்கவில்லை. மின்னல் வேகத்தில் செயல்பட்டு தியானத்தில் அமர்ந்திருந்த அவர் கழுத்தை அசுர பலத்துடன் நெரித்தான். அவர் உடல் துடித்தாலும் அவரது பத்மாசனம் கலையவில்லை. அவர் அவனைத் தடுக்கவோ, போராடவோ இல்லை. அவர் உயிர் பிரியும் வரை அவன் தன் பிடியைத் தளர்த்தவில்லை. அவர் உயிர் பிரிந்த அந்த கணத்தில் பூஜையறையில் ஒரு ஒளி தோன்றி மறைந்தது. அவன் திகைத்துப் போனான். ஒளி தோன்றியது பூஜை அறையின் எந்த விளக்காலும் அல்ல, அந்த சிவலிங்கத்தில் தான் என்று ஏதோ ஒரு உணர்வு வந்து போனது. யாரோ சிவலிங்கத்தில் வெள்ளை ஒளியை பாய்ச்சியது போல, ஒரு மின்னல் ஒளி அந்த சிவலிங்கத்தில் வந்து போனது போல, அந்தக் கிழவரின் உயிரே ஒளியாகி அந்த சிவலிங்கத்தில் சேர்ந்து மறைந்தது போல... அதே நேரத்தில் அவனை வந்து ஏதோ ஒரு சக்தி தீண்டியதைப் போலவும் உணர்ந்தான். அது என்ன என்று அவனுக்கு விளக்கத் தெரியவில்லை என்றாலும் அவன் ஒரு அசௌகரியத்தை உணர்ந்தான்.

முதல் முறையாக இனம் புரியாத ஒரு பயம் அவனுள் எட்டிப்பார்த்தது. யோசித்துப் பார்க்கையில் அந்த முதியவர் சாகத் தயாராக இருந்தது போலவும் அதற்காகக் காத்துக் கொண்டு இருந்தது போலவும் அவனுக்குத் தோன்றியது. கடவுளை நம்பாத அவனுக்கு, அமானுஷ்யங்களையும் நம்பாத அவனுக்கு, சிவலிங்கத்தில் வந்து போன ஒளி கண்டிப்பாக வெளியே இருந்து யாரோ டார்ச் மூலம் பாய்ச்சியதாகவோ, அல்லது ஃப்ளாஷ் காமிராவில் படம் எடுத்ததாகவோ தான் இருக்க வேண்டும் என்று சந்தேகம் எழும்ப வேகமாக வெளியே ஓடி வந்து வீட்டை சுற்றிப் பார்த்தான். யாரும் இல்லை. தோட்டத்தில் யாராவது ஒளிந்து இருக்கலாமோ? அவனுக்கு இந்த வேலை தந்தவர்களில் யாராவது ஒருவரோ, அவர்கள் அனுப்பிய ஆள் யாராவதோ இருக்கலாமோ என்றெல்லாம் சந்தேகம் வந்தது. ஆனால் அதே நேரத்தில் அவனை வந்து தீண்டியதாக அவன் உணர்ந்த சக்தி என்ன? அது பிரமையோ?

அவனுக்கு குழப்பமாக இருந்தது. தலை லேசாக வலித்தது. அவர்கள் ஒரு மொபைல் போனைத் தந்து அதில் ஒரு எண்ணிற்கு வேலை முடிந்தவுடன் அழைக்கச் சொல்லி இருந்தார்கள். அவன் வெளியே வந்து அவர்கள் சொன்னபடியே அந்த மொபைல் போனை எடுத்து அந்த எண்ணிற்கு அழைத்துச் சொன்னான்.

“கிழவனைக் கொன்னாச்சு”

“பூஜையறைக்கு வெளிய தானே?”

“ஆமா”

“நீ பூஜையறைக்குள்ளே போகலை அல்லவா?”

“போகலை”

“அந்த சிவலிங்கத்தை தொடலை அல்லவா?”

அவனுக்குக் கோபம் வந்தது. “உள்ளே போகாம எப்படி அதைத் தொட முடியும்? என் கை என்ன பத்தடி நீளமா”

அந்தக் கோபம் தான் அவன் உண்மையைச் சொல்கிறான் என்பதை அந்த மனிதருக்கு உணர்த்தியது போல இருந்தது. அமைதியாகச் சொன்னார். “அங்கேயே இரு. கால் மணி நேரத்தில் என் ஆட்கள் அங்கே வந்து விடுவார்கள்”

அவன் காத்திருந்தான். காத்திருந்த நேரத்தில் ஒவ்வொரு நொடியும் மிக மிக மந்தமாக நகர்ந்தது போல இருந்தது. வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்தான். முதியவரின் உடல் சரிந்து கிடந்தாலும் கால் பத்மாசனத்திலேயே இருந்தது இயல்பில்லாத ஒரு விஷயமாகப் பட்டது. அப்போது தான் அந்தக் கிழவரின் முகம் பார்த்தான். மூக்கிலும் வாயிலும் இரத்தம் வழிந்திருந்தாலும் அந்த முகத்தில் வலியின் சுவடு கொஞ்சம் கூட இல்லை. மாறாக பேரமைதியுடன் அந்த முகம் தெரிந்தது. உள்ளே நுழைந்து ஹாலில் இருந்தபடியே அந்த சிவலிங்கத்தைக் கவனித்தான். சிவலிங்கம் சாதாரணமாகத் தான் தெரிந்தது.

அதைத் தொடக்கூடாது, பூஜையறைக்குள் நுழையக் கூடாது என்று திரும்பத் திரும்ப அவர்கள் சொல்லி இருந்ததும், இப்போதும் கூட அதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டதும் ஏதோ ஒரு ரகசியம் இந்த சிவலிங்கத்தைச் சூழ்ந்து இருப்பதை அவனுக்கு உணர்த்தியது. சிறு வயதிலிருந்தே செய்யாதே என்பதை செய்து பழகியவன் அவன்.... அவன் கடிகாரத்தைப் பார்த்தான். அவர் சொன்ன கணக்குப்படி அவர்கள் வர இன்னும் பன்னிரண்டு நிமிடங்கள் இருக்கின்றன. அதற்குள் அந்த சிவலிங்கத்தில் அப்படி என்ன தான் ரகசியம் புதைந்து இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் வலிமையாக அவனுக்குள்ளே எழ அவன் அந்தப் பூஜையறைக்குள் நுழைந்தான்.



2



ந்தக் கொலைகாரனிடம் போனில் தெரிவித்தபடி ஆட்கள் மூன்று பேர் இரண்டு கார்களில் சொன்ன நேரத்திற்குள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்த போது அவன் தோட்டத்தின் முன் இரும்புக் கதவு பாதி திறந்து கிடந்தது. மறுபாதிக் கதவின் கீழ்க்கம்பிகளில் ஒன்றைப் பிடித்தபடி அவன் கீழே உட்கார்ந்திருந்தான். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தால் கூட இப்படியா தெருவிளக்கின் ஒளியில் அலட்சியமாக உட்கார்ந்திருப்பது என்று நினைத்தவனாய் முதல் காரில் இருந்து இறங்கியவன் அவனை நெருங்கினான்.

கார்கள் வந்து நின்ற சத்தம் கூட அந்தக் கொலைகாரன் கவனத்தைத் திருப்பவில்லை. அதனால் ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்த முதல் கார் ஆசாமி குனிந்து அந்தக் கொலைகாரனை உற்றுப்பார்த்தான். பின் மூக்கருகே கையை வைத்துப் பார்த்தான். மூச்சில்லை. அப்போது தான் அந்தக் கொலைகாரன் இறந்து போயிருந்தது உறைத்தது. திகைப்புடன் அவனை முதல் கார் ஆசாமி கூர்ந்து பார்த்தான். உடலில் எந்தக் காயமும் இல்லை. முகத்தில் மட்டும் எதையோ பார்த்து பயந்த பீதி பிரதானமாகத் தெரிந்தது. ஏதோ அதிர்ச்சியில் இறந்து போயிருக்க வேண்டும்....

இரண்டாவது காரில் இருந்து ஒருவன் தான் இறங்கி வந்தான். “என்னாச்சு”

“செத்துட்டான்”

“எப்படி?”

“தெரியல. முகத்தப் பார்த்தா ஏதோ பயந்து போன மாதிரி தெரியுது”

“பயமா, இவனுக்கா....” என்று சொன்ன இரண்டாவது கார் ஆசாமி அருகில் வந்து இறந்தவனை உற்றுப்பார்த்தான். அவன் சொன்னது உண்மை என்று தெரிந்தது. தேர்ந்தெடுக்கும் போதே பயமோ, இரக்கமோ, தயக்கமோ இல்லாத ஆளாகப்பார்த்துத் தான் அவர்கள் அவனைத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அப்படிப்பட்ட அவனையே இந்தக் கோலத்தில் பார்த்த போது ஏற்பட்ட அதிர்ச்சியில் ஒருகணம் இரண்டாவது கார் ஆசாமி பேச்சிழந்து போனான்.

“என்ன செய்யலாம்?” முதல் கார் ஆசாமி கேட்டான்.

ஆயிரம் கேள்விகள் மனதில் எழுந்தாலும், இந்த சூழ்நிலையை சிறிதும் எதிர்பாராமலிருந்தாலும் கூட இரண்டாவது கார் ஆசாமி தன்னை உடனடியாக சுதாரித்துக் கொண்டான். ஒரு முறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளி விட்டவன் அமைதியாகச் சொன்னான். “முதலில் இவனுக்கு நாம் கொடுத்த செல்லை எடு”

முதல் கார் ஆசாமி இறந்தவன் சட்டைப்பையில் வைத்திருந்த இரண்டு செல் போன்களை வெளியே எடுத்தான். ஒன்று கொலைகாரனுடையது. இன்னொன்று அவர்கள் அவனுக்குக் கொடுத்தது.

“நம் செல்போனில் வேறு யாரிடமாவது எங்காவது பேசியிருக்கிறானான்னு பார்”

முதல் கார் ஆசாமி தாங்கள் கொடுத்திருந்த செல்போனில் ஆராய்ந்து விட்டுச் சொன்னான். “நம்மிடம் மட்டும் தான் பேசியிருக்கான். வேற எந்தக் காலும் இதுக்கும் வரல. இவனை என்ன பண்ணறது?”

”இவனை சுவரின் மறைவுக்கு இழுத்து விடு. வெளியே இருந்து பார்த்தால் தெரியாதபடி இருந்தால் போதும்”


கவனமாக பிணத்தை சுவர்ப்பக்கம் அவன் இழுத்துப் போட்ட பிறகு இரண்டாம் கார் ஆசாமி சொன்னான். “போய் உள்ளே என்ன நிலவரம்னு பார்க்கலாம் வா”

அவர்கள் இருவரும் வேகமாக வீட்டை நோக்கி நடந்தார்கள். நடக்கும் போது முதல் கார் ஆசாமி கேட்டான். “அவன் பயத்துலயே செத்திருப்பானோ? என்ன ஆகியிருந்திருக்கும்?”


”தெரியல. எனக்கு சந்தேகம், நாம சொன்னதையும் மீறி அந்த பூஜையறைக்குள்ளே நுழைஞ்சிருக்கலாம். ஏதாவது செய்திருக்கலாம்.....”

“அது அவ்வளவு அபாயமானதா?”

இரண்டாம் கார் ஆசாமி பதில் சொல்லவில்லை. அதற்குள் அவர்கள் வீட்டை எட்டி விட்டிருந்தார்கள். சர்வ ஜாக்கிரதையுடன் வாசலிலேயே நின்று கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தார்கள். பத்மாசனத்தோடே கவிழ்ந்திருந்த முதியவர் பிணம் அவர்களை வெறித்துப் பார்த்தது. முகத்தில் இரத்த வரிகள் இருந்தாலும் அவர் முகத்தில் இருந்த அமைதியையும் அவரைக் கொன்றவன் முகத்தில் இருந்த பீதியையும் ஒப்பிடாமல் அவர்களால் இருக்க முடியவில்லை....

“இதென்ன இந்த ஆள் பத்மாசனத்துலயே இருக்கார். இது இயல்பா தெரியலயே...” முதல் கார் ஆசாமிக்குத் தன் திகைப்பை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

“உன்னால கொஞ்ச நேரம் பேசாமல் இருக்க முடியுமா?” என்று குரலை உயர்த்தாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்ன இரண்டாம் கார் ஆசாமி ஹாலை ஆராய்ந்தான். கிழவரின் பிணத்தைத் தவிர வேறு எதுவும் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றவில்லை.

உள்ளே அவன் நுழைந்தான். படபடக்கும் இதயத்துடன் பூஜையறையைப் பார்த்தான். சிவலிங்கம் இன்னும் அங்கேயே இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான் அவன். அவனைத் தொடர்ந்து முதல் கார் ஆசாமியும் உள்ளே நுழைந்தான்.

இரண்டாம் கார் ஆசாமி எச்சரித்தான். “எதையும் தொட்டுடாதே. கவனமா இரு”


முதல் கார் ஆசாமி தலையசைத்தான். இருவரும் மெல்ல பூஜையறைக்கு இரண்டடி தள்ளியே நின்று பூஜையறையை நோட்டமிட்டார்கள். பூஜையறையில் திருநீறு டப்பா கவிழ்ந்து திருநீறு தரையில் கொட்டிக் கிடந்தது. ஹாலின் விளக்கொளியில் அதற்கு மேல் பூஜையறையில் வேறு அசாதாரணமானதாக எதுவும் தெரியவில்லை.


இரண்டாம் கார் ஆசாமி தன் கைக்குட்டையை எடுத்து அதைப்பிடித்தபடி ஹாலில் இருந்த பூஜையறை ஸ்விட்ச்சைப் போட்டான். ஓரடி தூரத்தில் இருந்தே பூஜையறையை மேலும் ஆராய்ந்தான். அப்போது தான் பூஜையறையின் ஒரு ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேவார, திருவாசகப் புத்தகங்கள் சரிந்து கிடந்தது தெரிந்தது.

“முட்டாள்... முட்டாள்.... அவன் உள்ளே போயிருக்கிறான்” இரண்டாம் கார் ஆசாமி ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தான். சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்ட அவன் அடுத்தவனிடம் சொன்னான். “அவனை வரச் சொல்...”

முதல் கார் ஆசாமி அவசரமாகப் போனான். வெளியே இருந்த முதல் காரின் பின் கதவைத் திறந்து அங்கு அமர்ந்திருந்தவனிடம் “வாங்க” என்றான்.

இடுப்பில் ஈரத்துண்டை கச்சை கட்டிக் கொண்டிருந்த ஒரு ஆஜானுபாகுவான இளைஞன் காரில் இருந்து இறங்கினான். அவன் செருப்பு இல்லாமல் வெறும் காலுடன் இருந்தான். அவன் நெற்றியிலும், கைகளிலும், புஜங்களிலும், நெஞ்சிலும் திருநீறு பூசி இருந்தான். அவன் வாய் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

இருவரும் உள்ளே போனார்கள். அந்த இளைஞன் அக்கம் பக்கம் பார்க்காமல் நேர் பார்வையுடன் சீரான வேகத்தில் சென்றான். வீட்டினுள்ளே நுழையும் போது முதியவரின் பிணத்தைப் பார்க்க நேர்ந்த போது மட்டும் அவன் ஒரு கணம் அப்படியே நின்றான். அவனையும் அந்த விலகாத பத்மாசனம் திகைப்பை அளித்திருக்க வேண்டும்.


தாமதமாவதை சகிக்க முடியாத இரண்டாம் கார் ஆசாமி அவனுக்கு பூஜையறையைக் கை நீட்டி காண்பித்தான். அந்த இளைஞன் திகைப்பில் இருந்து மீண்டு பூஜையறைக்குள் நுழைந்தான். உள்ளே நுழைந்தவுடன் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தான். மந்திரங்களை உச்சரித்தபடியே அந்த சிலையை அவன் பயபக்தியுடன் தொட்டு வணங்கினான். ஏதோ ஒரு லேசான மின் அதிர்ச்சியை உணர்ந்தது போல அவனுக்கு உடல் சிலிர்த்தது.


அதைக் கவனித்த முதல் கார் ஆசாமி “என்ன?” என்று சற்றே பயத்துடன் கேட்டான்.

அந்த இளைஞன் பதில் சொல்லவில்லை. அவன் பக்கம் திரும்பிப் பார்க்கவும் இல்லை. இரண்டாம் கார் ஆசாமி தன் சகாவிடம் அவசரமாய் தாழ்ந்த குரலில் எச்சரித்தான். “அவன் கவனம் இப்போது எதிலும் திரும்பக்கூடாது. நீ எதுவும் கேட்காதே....பேசாமலிரு”


முதல் கார் ஆசாமி அதற்குப் பிறகு வாயைத் திறக்கவில்லை.


அந்த இளைஞன் கை கூப்பி ஒரு முறை வணங்கி விட்டு அந்த சிவலிங்கத்தைத் தூக்கினான். அந்த சிவலிங்கம் மிக அதிக கனம் இல்லை. சுமார் பத்து அல்லது பன்னிரண்டு கிலோ தான் இருக்கும். அதைத் தூக்கிக் கொண்டு அந்த இளைஞன் வெளியே வந்தான். அவன் உதடுகள் ஏதோ மந்திரத்தை உச்சரித்தபடி இருந்தன.

 வேகமாக சிவலிங்கத்துடன் வெளியே செல்ல மற்ற இருவரும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். அந்த இளைஞன் தன் கையில் இருக்கும் சிவலிங்கம் கனத்துக் கொண்டே போவது போல் உணர்ந்தான். அவன் ஆரம்பத்திலேயே எச்சரிக்கப்பட்டிருந்தான். ” அந்த சிவலிங்கம் இங்கு வந்து சேர்வதற்குள் நீ எதிர்பாராத எத்தனையோ நடக்கலாம். சிவலிங்கம் உன் கையில் இருக்கும் போது பிரளயமே ஆனாலும் சரி, இந்த மந்திரத்தை சொல்வதை மட்டும் நீ நிறுத்தி விடக்கூடாது. இது தான் உன் பாதுகாப்பு கவசம். அதே போல் அந்த சிவலிங்கத்தை எந்தக் காரணம் கொண்டும் கீழேயும் போட்டு விடக்கூடாது...”

அந்த நள்ளிரவுக் குளிரிலும் அந்த இளைஞனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. சிவலிங்கம் அநியாயத்திற்கு எடை கூடிக்கொண்டு போனது. ஏதோ ஒரு அசௌகரியத்தை உடலெல்லாம் அவன் உணர்ந்தான். முன்பே அறிவுறுத்தப்பட்டபடி அவன் அந்த மந்திரத்தை மட்டும் விடாமல் சொல்லிக் கொண்டிருக்க, காரை வந்தடைந்தான்.


முதல் காரின் பின் சீட்டில் முன்பே புதிய பட்டுத்துணி ஒன்று விரிக்கப்பட்டு இருந்தது. அதில் மிகக் கவனமாய் அந்த சிவலிங்கத்தை வைத்து விட்டு அதன் அருகில் அந்த இளைஞன் தானும் அமர்ந்தான். இறக்கி வைத்த பின் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. கார் வேகமாகக் கிளம்பியது.

முதல் காரைத் தொடர்ந்தே இரண்டாவது காரும் வேகமாகத் தொடர்ந்தது. இரண்டாவது கார் ஆசாமி நிம்மதிப் பெருமூச்சு விட்டான். வந்த வேலை நன்றாகவே முடிந்து விட்டது. அந்தக் கொலைகாரன் தான் தேவை இல்லாமல் உயிரை விட்டு விட்டான்.... அவன் எப்படி இறந்தான்? பயமே அறிந்திராத அவன் எதைப்பார்த்து பயந்தான்? கிழவரைக் கொன்று விட்டு தெரிவித்த போது கூட அவன் சாதாரணமாகத் தானே இருந்தான்! பிறகு ஏதோ ஒரு உந்துதலில் அவன் பூஜையறைக்குள் நுழைந்திருக்க வேண்டும். பின் என்ன ஆகியிருந்திருக்கும்?... மனதின் நீண்ட கேள்விகள் செல் போன் சத்தத்தில் அறுபட்டன. செல் போனை எடுத்துப் பேசினான். “ஹலோ”


முதல் கார் ஆசாமி தான் பேசினான். “ஏ.சி போட்டுக்கூட இவனுக்கு அதிகமா வியர்க்குது. ஏதோ ஜுரத்தில் இருக்கிற மாதிரி தோணுது. இவ்வளவு நேரமா மந்திரத்தை மெல்ல உச்சரிச்சிட்டு இருந்தவன் சத்தமாய் சொல்ல ஆரம்பிச்சிருக்கான். ஏதோ பைத்தியம் பிடிச்சிட்ட மாதிரி தோணுது. என்ன செய்யறது?” அவன் குரலில் பயம் தொனித்தது.

இரண்டாம் கார் ஆசாமி காதில் அந்த இளைஞன் சத்தமாகச் சொல்லும் மந்திரம் நன்றாகவே கேட்டது. இரண்டாம் கார் ஆசாமி அமைதியாகச் சொன்னான். “இதுல நாம் செய்யறதுக்கு எதுவுமில்லை. சீக்கிரமா அந்த சிலையை அங்கே சேர்த்திட்டா போதும். மீதியை அவர் பார்த்துக்குவார். நீ கண்டுக்காதே”


ஆனால் முதல் கார் ஆசாமிக்கு அப்படி இருக்க முடியவில்லை. நடக்கிற எதுவுமே இயல்பானதாக இல்லை.... ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்று தோன்ற ஆரம்பித்தது.

... ... ...


படிக்கக் கையில் எடுத்தால் பின் முடிக்காமல் கீழே வைப்பது கஷ்டமான மிக அருமையான நாவல் இது. 


ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


(அல்லது)


இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 


நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

                                                 

 நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக