ஞாயிறு, 9 ஜனவரி, 2022

விதி எழுதும் விரல்கள்!


என்.கணேசன் எழுதிய நாவல்களில் மிகச்சிறிய நாவல் என்றாலும் விறுவிறுப்புக்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லாத நாவல் இது.


கதைக்குறிப்பு:


திருடனிடமிருந்து திருடுவதில் தப்பில்லை என்ற சித்தாந்தமுடைய ஒரு இளைஞன், தவறாகச் சொத்து சேர்த்திருக்கும் ஒரு முன்னால் மந்திரியின் மகனிடமிருந்து, 3400 கோடி ரூபாய் சொத்துக்களை அதிசாமர்த்தியமாகத் தன்னுடையதாக்கிக் கொண்டு தலைமறைவாகி விடுகிறான். அவனைத் தேடிக் கண்டுபிடிக்கப் பலர் நியமிக்கப்பட்டு அவர்கள் அவன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கவும் செய்கிறார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் இந்த நாவல் தனி மனிதனாய் அவன் சமாளிக்கும் தந்திரங்களை சூழ்ச்சி, குடும்பம், பாசம், காதல், தேசபக்தி முதலான வலைகளால் பின்னி சுவாரசியமாகச் சொல்கிறது. ஆரம்பம் முதல் முடிவு வரை அடுத்தது என்ன என்ற ஆர்வமூட்டி, பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகரும் இந்த நாவல் படித்து முடித்த பின்னும் வாசகர் நினைவில் நிற்கும்.



வாசகர்களுக்காக ஒரு அத்தியாயம் இங்கே இலவசமாய் :

               1                    


வனைக் கண்டுபிடிப்பது அவர்களுக்குச் சுலபமாக இருக்கவில்லை. அந்த வேலை மூன்று திறமை வாய்ந்த துப்பறியும் நிறுவனங்களிடம் சரியாக ஐம்பத்தியோரு நாட்களுக்கு முன் தரப்பட்டிருந்தது. நேற்றிரவு பத்தரை மணிக்குத் தான்  அவன் இருக்கும் இடத்தை ஒரு துப்பறியும் நிறுவனம் கண்டுபிடித்துத் தெரிவித்தது. அரை மணி நேரத்தில் அவசர அவசரமாக அவர்கள் பத்து பேர் சென்னையிலிருந்து மூன்று கார்களில் கிளம்பி அதிவேகத்தில் வந்தும் இந்த ஊர் வந்து சேர, காலை ஒன்பது மணி ஆகி விட்டதுஅவர்கள் அவன் வசிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த போது தான் அவன் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான். அவனுடைய அலுவலகம் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த டாக்சி வெளியே நின்று கொண்டிருந்தது. அந்த டாக்சியில் ஏற்கெனவே இரண்டு ஊழியர்கள் அமர்ந்திருந்தார்கள். வீதியில் ஆள்நடமாட்டமும் அதிகமிருந்தது. அதிகமாக யார் கவனத்தையும் கவராமல் அவனைப் பிடித்து அழைத்து வரும்படி அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்ததால் அந்த நேரத்தில் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. அவர்களுடைய மூன்று கார்களையும் வேறு வேறு இடங்களில் தூரத்திலேயே நிறுத்தி விட்டார்கள். அவன் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டே அந்த டாக்சியில் ஏறிக் கொள்ள டாக்சி அங்கிருந்து கிளம்பியது.

 

வந்திருந்த பத்து பேர்களின் தலைவன் ஒரு காரில் உள்ளவர்களுக்குச் சைகை காட்ட அந்தக் கார் சிறிது இடைவெளி விட்டு அந்த டாக்சியைத் தொடர ஆரம்பித்தது. அவர்கள் பின் தொடர்வதை அவன் அறிவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால் மிக நெருங்கி விடாமல் அதே நேரத்தில் அதிகம் பின் தங்கி விடாமல் தொடர்ந்த அந்தக் காரில் உள்ளவர்கள் அவன் எந்த நேரமும் டாக்சியை நிறுத்தி இறங்கி ஓடித் தப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவே எண்ணினார்கள். அவர்கள் பிடிக்க வந்த அந்த ஆள் சாதாரண மனிதன் அல்ல. ஜகதலப்பிரதாபன். எப்போது என்ன செய்வான் என்று யாராலும் சொல்ல முடியாது. அவனைத் தப்பிக்க விட்டால் அவர்கள் நிலைமை பரிதாபமாகி விடும். அதனால் கவனத்தை வேறெங்கும் சிதறாமல்  சர்வ ஜாக்கிரதையுடன் அவர்கள் பின் தொடர்ந்தார்கள்.

 

அவன் ஒரு தடவை கூடப் பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் தன் சகாக்களுடன் சுவாரசியமாக என்னவோ பேசிக் கொண்டிருந்தான். வழியில் வேறிரண்டு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு ஆறு கிலோமீட்டர் பயணித்த பின் அவன் வேலை செய்யும் நிறுவனம் முன்பு டாக்சி நின்றது. தொடர்ந்து காரில் வந்தவர்கள் சற்று தூரத்திலேயே தங்கள் காரை நிறுத்திக் கொண்டார்கள்.

 

அவனும் அவன் சகாக்களும் இறங்கிப் பேசிக் கொண்டே நிறுவனத்தின் பெரிய கேட்டைத் தாண்டி உள்ளே சென்றார்கள். காரில் இருந்தவர்கள் அவன் மீது வைத்த கண்களை எடுக்கவில்லை. அவன் உள்ளே போன பிறகு காரில் இருந்தவர்களில் ஒருவன் தங்கள் தலைவனுக்குப் போன் செய்தான். ”இறங்கி உள்ளே போயிட்டான்

 

தலைவன் சொன்னான். “சரி வாசலையே கண்காணிச்சுட்டு இருங்கள். நாங்களும் வந்துடறோம்....”

 

ஒரு காரையும், மூன்று ஆட்களையும் அந்த வீட்டருகே காவலுக்கு நிறுத்தி விட்டு அவன் தன் காரில் இருந்த சகாக்களுடன் கிளம்பி அந்த நிறுவனத்திற்கு முன்னால் போய்ச் சேர்ந்தான். உள்ளே போகின்றவர், வருகின்றவர்களை மிகவும் கவனமாக அவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அவன் வெளியே வரவில்லை. அந்த நிறுவனத்திற்குள் ஊழியர்கள் உள்ளே போன பின்பு அதிகமாக மற்ற ஆட்கள் உள்ளே போகவில்லை. இரண்டு குரியர் ஆட்களும், ஒன்பது வேறு ஆட்களும் மட்டும் தான் உள்ளே போய் வந்தார்கள். நிறுவனத்தின் முகப்புச் சுவரில் ஜன்னல்கள் ஏதும் இல்லை. பக்கவாட்டுச் சுவர்களில் தான் ஜன்னல்கள் இருந்தன. அந்த ஜன்னல்கள் வழியாக எங்கிருந்து பார்த்தாலும் தெரியாதபடி தான் எச்சரிக்கையுடன் அவர்கள் காருடன் நின்றிருந்தார்கள். அவன் ஜன்னல் வழியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள வழியில்லை.

 

பெரும்பாலும் அவன் வேலை விட்டு வெளியே வருவதற்கு இரவு எட்டு மணி ஆகி விடும் என்று அந்தத் துப்பறியும் நிறுவனம் கண்டுபிடித்துச் சொல்லி இருந்தது. இடைப்பட்ட நேரத்தில் அவன் வெளியே வருவதில்லை எனவும், நிறுவனத்தின் உள்ளேயே கேண்டீன் இருக்கிறது என்றும் அங்கேயே காலை, மதிய, இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு தான் கிளம்புவான் என்றும் கூடத் தெரிவித்திருந்தது. ஆனாலும் அவனை நம்ப முடியாது. அவர்கள் வந்திருப்பது தெரிந்தால் எப்படியாவது தப்பிச் செல்ல முயற்சி செய்வான்... செய்யக்கூடியவன் தான்.

 

இரவு ஏழரை மணியானவுடன் அவர்களில் தலைவன் காலையில் இன்னொரு காரில் முதலில் பின் தொடர்ந்தவர்களிடம்  சொன்னான். ”நீங்கள் போய் அவன் வீட்டைத் தாண்டி தெருக்கோடியில் காத்திருங்கள். காலையில் ஒருவேளை உங்கள் காரை அவன் கவனித்திருந்து திரும்பவும் அவன் கண்ணில் பட்டால் உஷாராகி விடுவான்.”

 

அந்தக் கார் அங்கிருந்து போய் பத்து நிமிடங்கள் கழித்து நிறுவன ஊழியர்களை அழைத்துப் போகும் டாக்சி வந்து சேர்ந்தது. அப்போது தான் காலையிலிருந்து அந்த வீட்டைக் கண்காணித்து வந்தவர்களில் ஒருவன் போன் செய்தான். “அந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக் காரன் வீட்டைக் காலி செய்கிறான் போல இருக்கு. ஒரு டிரான்ஸ்போர்ட் லாரி வந்து நின்னிருக்கு. நாலு கூலி ஆள்களும் வந்திருக்காங்க...”

 

அவர்களில் தலைவன் பெருமூச்சு விட்டான். அவர்கள் திட்டம் அவர்கள் தேடி வந்த ஆள் வீடு போய்ச் சேர்ந்தவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கோழியை அமுக்குவது போல அமுக்கிக் காரில் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்பதாய் இருந்தது. தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தால் அவன் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போவதற்குள் அதைச் செய்து முடிக்க நினைத்திருந்தார்கள். ஒருவேளை தெருவில் ஆட்கள் இருந்தால் பத்து மணி ஆகும் வரை காத்திருக்க எண்ணியிருந்தார்கள். அந்தத் தெரு பத்து மணிக்கு மேல் வெறிச்சோடிக் கிடக்கும் என்றும் பின் ஏதாவது ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் வந்து போய்க் கொண்டிருக்கும் என்றும் கூட அந்தத் துப்பறியும் தெரிவித்திருந்தது.    

 

இப்போது பக்கத்து வீடு காலியாகிறது என்றால் சாமான்களை எல்லாம் லாரியில் ஏற்றிமுடிக்க எவ்வளவு நேரமாகுமோ தெரியவில்லை. அவர்கள் இன்னும் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டி வரலாம்....

 

தலைவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த நிறுவன ஊழியர்கள் ஒவ்வொருவராக வெளியே வர ஆரம்பித்தார்கள். இரண்டு பைக்குகள் முதலில் வெளியேறின. அவர்கள் யாருடனாவது அவன் பைக்கில் ஏறிப் போய்விடவும் வாய்ப்பிருக்கிறது என்பதால் தலைவனும் அவன் ஆட்களும் சற்று பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்தால் அடையாளம் கண்டுபிடிப்பது சுலபமல்ல. அவர்கள் வந்திருக்கலாம் என்ற சிறிய சந்தேகம் அவனுக்கு வந்திருந்தாலும் அவன் அப்படித் தப்பிப்பது தான் புத்திசாலித்தனமாய் இருக்கும்... நல்ல வேளையாக அப்படி எதுவும் ஆகாமல் அவனும் அவன் சகாக்களும் வெளியே வந்தார்கள். அப்போது மணி 8.07. சற்று பின்னால் காரை நிறுத்தி உள்ளே தயாராக அமர்ந்திருந்த அவர்கள் பக்கம் இப்போதும் அவன் திரும்பிப் பார்க்கவில்லை. டாக்சி டிரைவரைப் பார்த்து எதோ சொல்லிக் கொண்டு வந்தவன் டாக்சியின் முன்பக்கம் ஏறி அமர்ந்து கொண்டான். மற்ற ஊழியர்களும் ஏறிக் கொள்ள டாக்சி கிளம்பியது. அவர்கள் பின் தொடர்ந்தார்கள்.

 

காலை வந்த வழியே டாக்சி போனது. ஏறிய இடத்திலேயே ஊழியர்கள் இறங்கினார்கள். இறங்கும் ஆள்அவன்அல்லவே என்று அவர்கள் கூர்மையாகக் கவனித்துத் திருப்தி அடைந்த பிறகே அவர்கள் அந்த இடங்களைக் கடந்தார்கள். அவன் அவர்கள் பின் தொடர்வதைச் சந்தேகிக்காதபடியே நல்ல இடைவெளி விட்டுத் தான் அவர்கள் பின் தொடர்ந்தார்கள்.

 

அவன் வீட்டை நெருங்கிய போது பக்கத்து வீட்டின் பெரிய பீரோவை எடுத்துக் கொண்டு கூலிகள் தெருவை மறித்தபடி வந்து கொண்டிருந்தார்கள். டாக்சி அதனால் சற்று முன்பே நின்றது. அவன் இறங்குவது தெரிந்தது. வீடு தாண்டி சிறிது தூரத்தில் அவர்களுடைய ஒரு காரும், தெருக்கோடியில் ஒரு காரும் ஆட்களுடன் நின்று கொண்டிருந்தாலும் கூட தலைவன் மெல்ல பதற்றத்தை உணர்ந்தான்.

....

தொடர்ந்து இதை அச்சிலோ, அமேசான் கிண்டிலிலோ நீங்கள் படிக்கலாம். ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் அக்டோபர் 2019 ல் வெளியான இந்த நாவலின் விலை ரூ.130/-  


ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


(அல்லது)


இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 


நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.                                             

                                                           

அமேசான் கிண்டிலில் படிக்க லிங்க்- 

https://www.amazon.com/dp/B07ZHMLFRX

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக