புதன், 19 ஜனவரி, 2022

’சத்ரபதி’ வரலாற்று நாவல்!

 

என்.கணேசன் எழுதிய முதல் வரலாற்று நாவல் சத்ரபதி! 

பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்து ராஜ்ஜியம் ஆளும் நிலைக்கு உயர்ந்த ஒரு மகத்தான வீரனின் சாகசக் கதை இது! ஒவ்வொரு இந்தியனும் அறிய வேண்டிய சரித்திரம் இது.  வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆபத்தையும், சூழ்ச்சியையும், வஞ்சனையையும், சோதனையையும் சந்தித்து வந்த போதும் மனம் தளராமல், வீரத்துடனும், துணிச்சலுடனும், தந்திரத்துடனும், தொலைநோக்குடனும், கூரிய அறிவுடனும் அவற்றை எதிர்கொண்டு முன்னேறிய சிவாஜியின் இந்த சாகசக்கதையில் சுவாரசியத்திற்கும், திடீர்த் திருப்பங்களுக்கும், பிரமிப்புக்கும், மனநெகிழ்வுக்கும் பஞ்சமில்லை. அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புடனும், திகிலுடனும் கடைசி வரை நகரும் இந்த நாவலை ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் ஜனவரி 2019ல் வெளியிட்டது. 

நாவலின் இரு அத்தியாயங்கள் இலவசமாய் வாசகர்களுக்கு இங்கே தரப்பட்டுள்ளது.

1

 

ஷிவ்னேரி கோட்டை மேல்தளத்தில் இருந்த சிறப்புக் காவலன் வெகுதூரத்தில் எறும்புகளாய் ஊர்ந்து வந்து கொண்டிருக்கும் உருவங்களைக் கண்களைச் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கூர்மையும் அனுமானத் திறமையும் அபாரமானது. நகரும் வேகத்தைப் பார்க்கையில் அவர்கள் குதிரைகளில் மிக வேகமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. வருபவர்கள் நண்பர்களா, பகைவர்களா என்று தெரியவில்லை. யார் என்பது அவர்களை முந்திக் கொண்டு அவர்களை விட வேகமாக ஒரு குதிரையில் வந்து கொண்டிருக்கும் ஒற்றன் மூலம் தெரிந்து விடும். வருபவர்களின் எண்ணிக்கை அறுபதிலிருந்து எண்பதற்குள் இருக்கும் என்று சிறப்புக் காவலனுக்குத் தோன்றியது. இந்த வேகத்திலேயே வந்தார்களானால் ஒன்று அல்லது ஒன்றே கால் நாழிகைக்குள் இங்கு வந்து சேர்ந்து விடுவார்கள் என்று கணக்குப் போட்டவன் கூக்குரலிட்டு கீழ்த் தளத்தில் இருந்து இரு காவலர்களை மேல் தளத்திற்கு வரவழைத்தான். அவர்களைக் காவலுக்கு நிறுத்தி விட்டு கோட்டைத் தலைவருக்குத் தகவல் தர விரைந்தான். போகிற வழியில் அவன் மற்ற காவலர்களையும் எச்சரிக்கை செய்ய அபாய மணி அடிக்கப்பட்டது. கோட்டையின் நூற்றுக் கணக்கான காவலர்கள் அவரவர் காவல் இடத்திற்கு தங்கள் ஆயுதங்களுடன் விரைந்தார்கள். அந்தக் காவலன் கோட்டைத் தலைவரின் இருப்பிடத்தை அடைவதற்கு முன், அபாய மணி ஓசை கேட்டு அவரே வேகமாக அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவன் தகவலை அவரிடம் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டே அவர்  கோட்டையின் மேல்தளத்திற்கு விரைந்தார்….

 

நம் கதைக்களக் காலமான பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாரதத்தின் தக்காணப் பீடபூமி மூன்று சுல்தான்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. அகமதுநகர், பீஜாப்பூர், கோல்கொண்டா என்ற அந்த மூன்று பகுதி சுல்தான்களும் மாறி மாறித் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டும், சமாதானமாய் போய்க் கொண்டும் வாழ்ந்த காலம் அது. அவர்கள் ராஜ்ஜியத்துக்குள்ளேயே பல உள்நாட்டுக் கலவரங்களும் வெடிக்கும். அதில் மற்ற சுல்தான்களின் பங்கும் இருக்கும். அதை அடக்குவது, மற்றவர்களுடன் போரிடுவது, வெற்றி தோல்விகளின் முடிவில் தங்கள் ராஜ்ஜியத்தின் சில பகுதிகளையும், குதிரைகள் யானைகளையும், பெரும் செல்வத்தையும் தந்தும், எடுத்துக் கொண்டும், சமாதான உடன்படிக்கைகள் செய்து கொள்வது தொடர்ந்து நடக்கும். எந்த உடன்படிக்கையும் நீண்டகாலம் நீடிக்காது. தோற்றவன் வலிமையை வளர்த்துக் கொண்டவுடன் மறுபடி போருக்குக் கிளம்பி பழைய சரித்திரம் சிறு சிறு மாறுதல்களுடன் திரும்பத் திரும்ப எழுதப்படும். இவர்களுடன் கூட்டுச் சேரவும், சண்டையிடவும் அடிக்கடி வடக்கிலிருந்து முகலாயப் பேரரசின் ஒரு படையும் வந்து சேரும். இவர்களுக்கிடையே அணிகள் மாறிக் கொண்டே இருக்கும்.

 

இந்தக் காலத்தில் இவர்கள் மட்டுமல்லாமல் சிலர் தனிப்படைகள் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட குறுநில மன்னர்கள் போல அங்கங்கே இவர்களுக்கு நடுவில் இருந்தார்கள். அவர்களும் ஒருசில கோட்டைகள், படைகள், வைத்துக் கொண்டு சுயேச்சையாக இயங்கி வந்தார்கள். அவர்களும் தங்களுடைய இலாப நஷ்டங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கூட்டணி வைத்துக் கொள்வதும், பிரிவதும், அணி மாறுவதுமாக இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு தனிப்படையின் தலைவர் தான்  ஷிவ்னேரிக் கோட்டையின் தலைவரான ஸ்ரீனிவாசராவ். அவர் கைவசம் இருந்த இந்த ஷிவ்னேரிக் கோட்டை வலிமையான கோட்டைகளில் ஒன்று. பூனாவில் இருந்து சுமார் 56 மைல் தொலைவில் இருந்த இந்தக் கோட்டைக்குள் ஆயிரம் குடும்பங்கள் அடைக்கலம் புகலாம். அவர்களுக்கு ஏழாண்டுகள் வரை வெளியுதவி இல்லாமல் அவர் அந்தக் கோட்டையில் அடைக்கலம் தர முடியும் அளவு நிதி நிலைமையும், தன்னிறைவான அமைப்பும் இருந்தது.

 

இப்படி சுல்தான்களும், முகலாயப் பேரரசரும், தனிப்படைத் தலைவர்களும் விளையாடும் இந்த சரித்திரக் களத்தில் யாருக்கும் யாரும் நிரந்தர நண்பர்களும் அல்ல, நிரந்தரப் பகைவர்களும் அல்ல. இன்றைய நண்பன் நாளைய பகைவனாகலாம். எதிர்கால நண்பனாக மறுபடி மாறலாம். அதே போல் இன்றைய பகைவன் நாளைய கூட்டாளியாகலாம். எதிர்கால எதிரியாக மறுபடியும் மாறலாம். இங்கே மாற்றம் ஒன்றே நியதி. அப்போதைய லாபம் ஒன்றே குறிக்கோள். எல்லோருக்குமே எதிர்காலம் நிச்சயமில்லாத ஒன்றாய் இருந்ததால் எதிர்காலத்தைப் பற்றி யாரும் பெரிதாய் சிந்தித்ததில்லை. எதிர்காலம் என்று ஒன்றிருந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்….

 

ஸ்ரீனிவாசராவ் கோட்டையின் மேல்தளத்திற்குச் சென்று சேர்ந்த போது குதிரையில் வேகமாகக் கோட்டை வாசலில் வந்திறங்கிய ஒற்றன்வருவது ஷாஹாஜி போன்ஸ்லேஎன்று கத்தினான்.

 

ஷாஹாஜி போன்ஸ்லே அகமதுநகர சுல்தான் நிஜாம்ஷாவிடம் படைத்தளபதியாக இருப்பவர். அகமதுநகர் அரசின் தற்போதைய சுல்தான் இரண்டாம் நிஜாம் ஷா சொந்த புத்தி இல்லாதவனாகவும், பலவீனமானவனாகவும்  இருந்ததோடு நல்ல அறிவுரைகளை ஏற்கவும் தெரியாதவனாக இருந்ததால் ஷாஹாஜி போன்ஸ்லே பல சிரமங்களை உணர்ந்து வந்தார். இதனிடையே முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் பெரும்படை ஒன்று அகமதுநகர மஹூலிக் கோட்டையை முற்றுகையிட்டிருந்தது. ’கூடுமான வரை ஆறு மாத காலம் வீரத்தோடு தாக்குப் பிடித்த ஷாஹாஜி போன்ஸ்லேயால் முகலாயப் பெரும்படையை அதற்கு மேல் தாக்குப்பிடித்திருக்க வழியில்லை. அதனால் அவர் தான் தப்பித்து வந்து கொண்டிருக்கிறார்…..!’ அதை யூகித்து, வருவது எதிரியல்ல என்பதால் ஸ்ரீனிவாசராவ் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கூடவே இந்த மனிதரிடம் எந்த வகையில் ஆதாயம் பெறலாம் என்கிற சிந்தனை ஸ்ரீனிவாசராவின் மனதில் ஓட ஆரம்பித்தது. பல வருடங்களாக ஷாஹாஜி போன்ஸ்லேயும் அவரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிவார்கள், பல களங்களில் ஒரே அணியில் சேர்ந்து போராடி இருக்கிறார்கள் என்றாலும் தற்போதைய சூழ்நிலையைக் கொள்முதலாக்க எண்ணியபடியே அவர் காவலாளிகளுக்கு ஷாஹாஜி போன்ஸ்லேயை வரவேற்று அழைத்துவர உத்தரவிட்டு தன் சிறு மாளிகைக்குத் திரும்பினார்.

 

சிறிது நேரத்தில் ஷாஹாஜி போன்ஸ்லேயும் அவரது ஆட்களும் ஷிவ்னேரிக் கோட்டை வாசலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுடன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாஹாஜியின் மனைவி ஜீஜாபாயும், அவர்களுடைய நான்குவயது மகன் சாம்பாஜியும்  இருந்தார்கள். ஷாஹாஜியும், அவர் மனைவி ஜீஜாபாயும், சாம்பாஜியும் மிகுந்த மரியாதையுடன் காவலர்களால் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். ஸ்ரீனிவாசராவும் குடும்பத்தினரும் அவர்களது சிறு மாளிகையின் வாசலில் அவர்களை வரவேற்க நின்றிருந்தனர். ஸ்ரீனிவாசராவும், ஷாஹாஜியும் அணைத்து அன்பைத் தெரிவித்துக் கொண்டார்கள். மனைவியையும், சாம்பாஜியையும் ஸ்ரீனிவாசராவ் குடும்பத்தினரின் உபசரிப்பில் விட்டு விட்டு ஷாஹாஜி ஸ்ரீனிவாசராவைத் தனியறைக்கு அழைத்துச் சென்றார்.

 

என்ன நண்பரே. தாக்குப்பிடிக்க முடியவில்லையா?” ஸ்ரீனிவாசராவ் கவலையுடன் கேட்டார்.

 

ஆம் நண்பரே, ஒரு தற்காலிகப் பின்னடைவு. இந்தச் சூழலில் உங்களிடம் ஒரு உதவியைத் தேடி வந்திருக்கிறேன். நண்பரேஷாஹாஜி உடனடியாக விஷயத்துக்கு வந்தார். ஒவ்வொரு கணமும் மிக முக்கியமானதாக இருப்பதாலும், உயிரைப் பணயம் வைத்துக் கிளம்பிய பயணத்தின் இடையே இருப்பதாலும் மற்ற உபசார வார்த்தைகள் பேச அவருக்கு நேரமில்லை.

 

சொல்லுங்கள் நண்பரே. தக்க சமயத்தில் உதவுவதற்காக அல்லவா நண்பர்கள் இருக்கிறார்கள்என்றார் ஸ்ரீனிவாசராவ்.

 

என் மனைவியை இங்கே விட்டுச் செல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறேன். நிறைமாத கர்ப்பிணியை நான் இவ்வளவு தூரம் குதிரையில் அழைத்து வந்திருப்பதே ஆபத்து. இனியும் அவளை என்னோடு அழைத்துப் போவது அவள் உயிருக்கும் சிசு உயிருக்கும் ஆபத்தாகவே முடியும். அதனால் சில மாதங்கள் அவள் இங்கிருக்கட்டும்….. பின் அவளை அழைத்துச் செல்கிறேன்….”

 

ஸ்ரீனிவாசராவ் யோசிப்பது போல் காட்டினார். பின் தயக்கத்துடன். “அடைக்கலம் கொடுத்திருப்பது முகலாயர்களுக்குத் தெரிந்தால் ……” என்று இழுத்தார். இது பேரத்தின் துவக்க வார்த்தை என்பது தெரிந்த போதிலும் ஷாஹாஜிக்கு அது வருத்தம் தரவில்லை. இங்கே மகான்களும், உத்தம புருஷர்களும் இல்லை. தங்கள் லாப நஷ்டக்கணக்கிலேயே கண்ணாய் இருக்கும் மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள்…! பேரம் பேச அதிக காலம் தன்னிடம் இல்லாததால் ஷாஹாஜி தங்க நாணயங்கள் நிரப்பியிருந்த இரு சிறு பட்டுத்துணி மூட்டைகளை உடனடியாக எடுத்துத் தந்தார். நிலைமை சரியானவுடன் 500 குதிரைகள் தருவதாகவும் வாக்குத் தந்தார். ஓரளவு திருப்தியுடன் ஸ்ரீனிவாசராவ் மெல்லத் தலையசைத்தார்.

 

நன்றி நண்பரே! மீண்டும் நல்லதொரு சூழலில் சந்திப்போம். இப்போது விரைகிறேன்…..” என்று கூறி ஸ்ரீனிவாசராவை மீண்டும் ஒரு முறை தழுவி ஷாஹாஜி கிளம்பினார்.

 

மனைவியிடம் வந்த ஷாஹாஜிஉனக்கு இங்கே பரிபூரண பாதுகாப்பு கிடைக்கும். உன் பாதுகாப்புக்கும் சேவை புரிவதற்கும் நம்பிக்கைக்குரிய இருபது பேரை இங்கே விட்டுப் போகிறேன் ஜீஜா. நிலைமை சரியானவுடன் உன்னை அழைத்துக் கொள்கிறேன். பத்திரமாக இரு. நீ வணங்கும் இறைவன் உனக்குத் துணை இருப்பான்….” என்று சொல்ல ஜீஜாபாயின் கண்கள் கலங்கின. அவள் பேச வார்த்தைகள் வராமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

 

மகன் சாம்பாஜியை ஷாஹாஜி தூக்கிக் கொண்டது செல்வதற்கு முன் அவனை ஒரு முறை கொஞ்சி விட்டுத் திருப்பித் தரத்தான் என்று நினைத்த ஜீஜாபாய் ஷாஹாஜிஎங்களுக்கு விடைகொடு ஜீஜாஎன்றவுடன் துணுக்குற்றாள்.

 

நான்கு வயதுக் குழந்தையையும் அவர் தன்னுடன் அழைத்துச் செல்வார் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதை சாஹாஜி அவளிடம் முன்பே தெரிவித்திருக்கவுமில்லை.

 

குழந்தையை எதற்காக அழைத்துச் செல்கிறீர்கள்?” என்று குரலடைக்க ஜீஜாபாய் கேட்டாள்.

 

அவன் உன்னுடன் இருப்பது அவனுக்கும் ஆபத்து, உனக்கும் ஆபத்து ஜீஜா. அவனைப் பணயக்கைதியாய்ப் பிடித்து வைக்க எதிரிகள் கண்டிப்பாக முயற்சி செய்வார்கள். அவனை வைத்தே என்னை வரவழைக்கப் பார்ப்பார்கள்……”

 

ஷாஹாஜி சொன்னது உண்மை தான். போரில் பணயக்கைதியாகப் பிள்ளைகளை வைத்துக் கொள்வது அக்காலத்தில் சர்வசகஜம். மனைவியைப் பணயக்கைதியாகப் பிடித்தால் அது பல நேரங்களில் எந்தப் பலனையும் அளிப்பதில்லை. கணவன் இன்னொருத்தியை மணந்து கொண்டு பாதிப்பே இல்லாமல் வாழ்வைத் தொடர்வது சகஜமாக இருந்தது. ஆனால் பிள்ளைகள் என்ற போது தந்தைகள் ரத்தபாசத்தினால் வேறு வழியில்லாமல் பேச்சு வார்த்தைக்கு வந்தே ஆகும் சூழல் இருந்தது.  அந்த உண்மையையும் மீறிய இன்னொரு உண்மை - ஷாஹாஜி தன் மூத்த பிள்ளை சாம்பாஜி மேல் உயிரையே வைத்திருந்தார் என்பது தான். அவனை விட்டுப் பிரிந்திருக்க அவரால் முடியாது என்பதாலேயும் தான் அவனை கூட்டிச் செல்கிறார். சாம்பாஜிக்கும் தந்தையுடன் பயணம் போவதில் எப்போதுமே மகிழ்ச்சி தான். ஜீஜாபாய் மறுத்து எதுவும் சொல்ல முடியாமல் கனத்த மனதுடன் தலையசைத்தாள். ஷாஹாஜி வேகமாகச் செல்ல அவளும் கோட்டை வாசல் வரை கூடவே வேகமாகப் போனாள். வைத்த ஒவ்வொரு காலடியிலும் அவள் மனதின் கனம் கூடிக் கொண்டே போனது.

 

ஷாஹாஜி வெளியே குதிரை ஏறிய போது சாம்பாஜி திரும்பித் தாயைப் பார்த்தான். தாய் தங்களோடு வராமல் கோட்டை வாசலிலேயே நிற்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் பிஞ்சுக் கைகளை ஆட்டி தாயை வரச் சொன்னான். “அம்மா நீயும் வா

 

ஜீஜாபாயின் கண்கள் குளமாயின. பார்வையிலிருந்து அவள் கணவனும் பிள்ளையும் சென்று மறையும் முன்பே கண்ணீர்த் திரை முந்திக் கொண்டு மறைத்தது….. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவள் பார்த்த போது அவர்கள் நீண்ட தொலைவை அடைந்திருந்தார்கள். இருட்ட ஆரம்பித்திருந்தது. அவள் இதயம் வெடித்து விடும் போலிருந்தது. சோகத்துடன் கோட்டைக்குள் திரும்ப நுழைந்தாள்…..

 

ஒன்றரை நாழிகை நேரம் கழித்து எதிரிப்படையினர் ஷிவ்னேரிக் கோட்டையை நோக்கி வந்து கொண்டிருப்பதை ஒரு ஒற்றன் ஸ்ரீனிவாசராவிடம் தெரிவித்தான்

 

2

 

திரிப்படைகள் ஷாஹாஜியைத் தேடிக் கண்டிப்பாக வருவார்கள் என்று ஸ்ரீனிவாசராவ் எதிர்பார்த்திருந்தாலும் கூட இவ்வளவு சீக்கிரம் பின் தொடர்ந்து வருவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ஒற்றனிடம் கேட்டார். “எத்தனை பேர் இருப்பார்கள்?”

 

சுமார் 1500 பேர் இருப்பார்கள் பிரபுஎன்றான் ஒற்றன்.

 

யார் தலைமையில் வருகிறார்கள்?” ஸ்ரீனிவாசராவ் கேட்டார்.

 

லாக்கோஜி ஜாதவ்ராவ் தலைமையில் வருகிறார்கள்என்றவுடன் விதி வலிது மட்டுமல்ல வேடிக்கையானதும் கூட என்று ஸ்ரீனிவாசராவ் நினைத்துக் கொண்டார். அவரது சிறு மாளிகைக்கு அடுத்தபடியாக சற்று விசாலமானதும், வசதியானதுமான இன்னொரு சிறு மாளிகையில்  தான் ஜீஜாபாயை அவர் தங்க வைத்திருந்தார். அந்த மாளிகைக்கு அவர் விரைந்தார். ஜீஜாபாய் அவர் அங்குள்ள வசதி குறித்து விசாரிக்க மரியாதை நிமித்தம் வந்திருக்கிறார் என்று நினைத்து சோகத்தை மறைத்துக் கொண்டு அவரை வரவேற்றாள்.

 

இருப்பதிலேயே இதுவே அதிக வசதி கொண்டது என்று இதை ஒதுக்கியுள்ளேன் சகோதரி. நீங்கள் பெரும் குறையாக எதையும் உணரவில்லையேஎன்று ஸ்ரீனிவாசராவ் கேட்டார்.

 

கட்டிய கணவனையும்பெற்ற குழந்தையையும் பிரிந்து நிர்க்கதியாய் நிற்பவளுக்கு எது தான் வசதியாக இருக்க முடியும் என்று ஜீஜாபாய் மனதில் நினைத்துக் கொண்டாலும் புன்னகையுடன்ஒரு குறையும் இல்லை சகோதரரேஎன்றாள்.

 

எதிரிப்படையினர் வந்து கொண்டிருப்பதாக ஒற்றன் மூலம் செய்தி வந்திருக்கிறது சகோதரிஎன்று ஸ்ரீனிவாசராவ் மெல்லச் சொன்னார்.

 

ஜீஜாபாய் இன்னேரம் கணவரும், பிள்ளையும் எவ்வளவு தூரம் போயிருப்பார்கள் என்று மனக்கணக்குப் போட்டு நிம்மதியடைந்தாள். “இன்னேரம் என் கணவர் வெகுதூரம் போயிருப்பார். கவலை கொள்ள எதுவுமில்லை சகோதரரேஎன்று அவள் சொன்ன போது ஸ்ரீனிவாசராவ் அவள் தன் நிலையை எண்ணி வருத்தமோ பயமோ கொள்ளவில்லை என்பதை வியப்புடன் கவனித்தார்.

 

அந்தப் படைக்குத் தலைமை தாங்கி வருவது உங்கள் தந்தை தான் சகோதரிஎன்று ஸ்ரீனிவாசராவ் சொன்ன போது ஒரு கணம் சிலையாய் சமைந்த ஜீஜாபாய் பின்வருவது என் கணவரின் எதிரி சகோதரரேஎன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் உறுதியாகச் சொன்னாள். ஸ்ரீனிவாசராவ் சிறு தலையசைப்புடன் விடைபெற்றார்.

 

தக்காணப் பீடபூமியின் அரசியல் சதுரங்கத்தில் சின்னாபின்னமானது அந்தப் பெரும் நிலப்பரப்பு மட்டுமல்ல, எத்தனையோ குடும்பங்களும் தான். அதில் தன் குடும்பமும் ஒன்றாகிப் போனதை ஜீஜாபாய் இப்போது வருத்தத்துடன் நினைத்துப் பார்க்கிறாள்…..

 

அவள் தந்தை லாக்கோஜி ஜாதவ்ராவ் யாதவ அரசர்களின் வம்சாவளியில் வந்தவர். சிந்துகேத் என்ற பகுதியின் தலைவராக இருந்த அவர் அகமதுநகர் அரசவையில் ஒரு சக்தி வாய்ந்த பிரபுவாகவும் இருந்தார். அவரிடம் 10000 குதிரைகள் கொண்ட சக்தி வாய்ந்த படை இருந்தது. அவருக்குப் பல கிராமங்கள் சொந்தமாக இருந்தன. ஷாஹாஜியின் தந்தை மாலோஜி உதய்ப்பூர் ராணாக்களின் வீரவம்சத்தவர் என்றாலும் அச்சமயத்தில் அகமதுநகர்  படையில் ஒரு சிறுபிரிவின் தலைவராக இருந்தார். சிறுபிரிவுத் தலைவராக இருந்த போதிலும் மாலோஜி மீது அப்போதைய அகமதுநகர் சுல்தான் முதலாம் நிஜாம்ஷாவிற்கும், லாக்கோஜி ஜாதவ்ராவுக்கும் மரியாதை இருந்ததுமாலோஜியும், அவர் மகன் சிறுவன் ஷாஹாஜியும் அடிக்கடி லாக்கோஜி ஜாதவ்ராவின் மாளிகைக்கு வருவதுண்டு. ஜீஜாபாய் ஷாஹாஜியை விட ஒரு வயது தான் குறைந்தவள் என்பதால் இருவரும் சேர்ந்து விளையாடுவதுண்டு.

 

அப்படி ஒரு ஹோலிப்பண்டிகையின் போது ஷாஹாஜியும், ஜீஜாபாயும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த போது லாக்கோஜி ஜாதவ்ராவ் நாக்கில் விதி விளையாடியது. குழந்தைகளின் விளையாட்டை ரசித்தவர்என்னவொரு அருமையான ஜோடிஎன்று வாய்விட்டுச் சத்தமாகச் சொல்ல அருகிலிருந்த மாலோஜி அவர்கள் இருவரின் திருமணத்தை அவர் உறுதி செய்து விட்டதாக எடுத்துக் கொண்டதுடன் அங்கிருந்த  எல்லோரையும் அழைத்துச் சொல்லவும் செய்தார். லாக்கோஜி ஜாதவ்ராவ் தான் விளையாட்டாகச் சொன்னதை இவர் காரியமாய்ச் சொன்னதாக எடுத்துக் கொண்டு விட்டாரே என்று திகைத்தார். பின்னால் அவர் அங்கு நடந்ததைத் தன் மனைவி மால்சாபாயிடம் சொல்ல அவள் அவரைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டாள். தன் அன்பு மகள் ஒரு சாதாரண சிறுபடைப்பிரிவின் தலைவரின் மகனுக்கு மனைவியாவதை அவளால் சகிக்க முடியவில்லை. “நீங்கள் தான் விளையாட்டாய் சொன்னீர்கள் என்றால் மாலோஜிக்கு அறிவு எங்கே போயிற்று. நம் அந்தஸ்து என்ன? அவர்கள் அந்தஸ்து என்ன? ஒரு அரசகுமாரனுக்கு மனைவியாக வேண்டிய என் மகளை இப்படி தாழ்ந்த நிலையில் இருப்பவர் மகனுக்கு மணமுடித்துக் கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன்…..” என்று சாடவே லாக்கோஜி ஜாதவ்ராவுக்கு மனைவி சொல்வது சரியென்றே தோன்றியது.

 

மறுநாள் அவர் மாளிகையில் நடக்க இருந்த விருந்துக்கு அனைவரையும் அழைத்த போது மாலோஜியையும் அழைத்தார். விருந்தின் போது நாசுக்காகச் சொல்லி அவருக்குப் புரிய வைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால் விருந்துக்கு அழைப்பு விடுத்த போதே, “சம்பந்தம் முடியாமல் உங்கள் வீட்டு விருந்தில் கைநனைப்பது சரியாக இருக்காதுஎன்று மாலோஜி சொல்லவே லாக்கோஜி ஜாதவ்ராவ் அன்று அப்படிச் சொன்னது விளையாட்டாகத் தான் என்றும் திருமண எண்ணம் தனக்கு இல்லை என்பதையும் வெளிப்படையாகவே  தெரிவித்து விட்டார். உடனே தான் அவமானப்பட்டதாய் நினைத்த மாலோஜி அவரை மற்போருக்கு அழைத்தார். அவமானப்படுத்தப்படுவதாய் நினைக்கும் வீரர்கள் இப்படி தன்னுடன் தனியாக யுத்தம் செய்வதற்கு அழைப்பு விடுவது அக்காலத்தில் சகஜமாய் இருந்தது. இதைக் கேள்விப்பட்ட சுல்தான் முதலாம் நிஜாம் ஷா இருவரையும் வரவழைத்து நடந்ததை எல்லாம் கேட்டறிந்தார். அந்தஸ்து தானே பிரச்னை என்று சொல்லி உடனே 5000 குதிரைகள் கொண்ட படைக்குத் தலைவனாக மாலோஜியை உயர்த்தி, இரண்டு கோட்டைகள் தந்து கவுரவத்திலும் உயர்த்தி, இனி திருமண ஏற்பாடுகள் நடக்கட்டும் என்று சொல்லி விட்டார். அதன் பிறகு மறுக்க முடியாமல் லாக்கோஜி ஜாதவ்ராவ் சம்மதித்தார்.  அரசரே நேரடியாக வந்து வாழ்த்த ஷாஹாஜிஜீஜாபாய் திருமணம் விமரிசையாக நடந்தது. ஆனாலும் பழைய பகை முழுவதுமாக முடிந்து விடாமல் இரு குடும்பங்களுக்குள் புகைந்து கொண்டே இருந்தது.

 

அரசியல் சதுரங்கத்தில் ஷாஹாஜி அகமதுநகரின் சுல்தான் பக்கம் தீவிரமாகப் பிற்காலத்தில் சென்றுவிட லாக்கோஜி ஜாதவ்ராவ் ஷாஜஹானின் முகலாயப் படையினர் பக்கம் தீவிரமாகச் செயல்பட்டார். உறவின் நெருக்கத்தை முற்றிலுமாக இரண்டு பக்கமும் உதறித் தள்ளியது. இருபக்கமும் தீவிரப் பகைவர்களானார்கள். ஜீஜாபாய்க்குப் பிறந்த வீட்டுடன் இருந்த தொடர்பு என்றென்றைக்குமாய் அறுந்து போனது. அவள் தன் பெற்றோரைக் கண்டு பல வருடங்கள் ஆகி விட்டன…..   தற்போது மஹூலிக் கோட்டையை முற்றுகை இட்டிருந்த படைக்குத் தலைமை வகித்திருந்தது லாக்கோஜி ஜாதவ்ராவ் தான். தப்பித்து வந்த அவர்களைத் தொடர்ந்து வந்திருப்பதும் அவர் தான். ஆறு மாத முற்றுகையிலும் சரி, இப்போதும் சரி, அவர் தன் மகளும் உள்ளே இருக்கிறாள் என்று ஒரு முறையாவது யோசித்திருப்பாரா என்று ஜீஜாபாய் நினைத்துப் பார்த்தாள்….. உண்மை கசந்தது.!

 

ஸ்ரீனிவாசராவ் ஷாஹாஜியை வரவேற்ற விதத்தில் ஷாஹாஜியின் மாமனாரை வரவேற்கத் துணியவில்லை. லாக்கோஜி ஜாதவ்ராவ் படையினருடன் ஷிவ்னேரி கோட்டை வாயிலுக்கு வந்து சேர்ந்த போது ஸ்ரீனிவாசராவ் கோட்டை வாசலில் காத்து நின்று வரவேற்றார். லாக்கோஜி ஜாதவ்ராவ் அந்த வரவேற்பில் மயங்கி விடவில்லை. ஸ்ரீனிவாசராவ் போன்ற மனிதர்களை அவர் நன்றாக அறிவார். செய்யும் தவறுகளை மரியாதையால் மறைக்க முற்படும் ஆட்கள் இவர்கள்….

 

என்ன ஸ்ரீனிவாசராவ் மரியாதை எல்லாம் தடபுடலாக இருக்கிறது. இதை வைத்துப் பார்க்கையில் நீ செய்திருக்கும் தவறும் இதே அளவில் இருக்கும் போலத் தெரிகிறதேஎன்று வெளிப்படையாகவே அவர் கேட்டார்.

 

மரியாதைகளை தகுதி உடையவர்களுக்கு எப்போதும் அளிக்கும் பழக்கம் உடையவன் பிரபுவே நான். தங்கள் வயதுக்கும், அறிவுக்கும் பண்புக்கும் அளிக்கும் மரியாதையை இப்படிக் கொச்சைப்படுத்துகிறீர்களேஎன்று ஸ்ரீனிவாசராவ் வருத்தத்தைக் காட்டினார்.

 

உன்னை அறிந்தவன் என்பதால் சந்தேகப்பட்டேன். அது போகட்டும். உள்ளே எதிரி இருக்கிறானா?”

 

உங்கள் எதிரியை உள்ளே விடும் அளவு என்புத்தி இன்னும் கெட்டு விடவில்லை பிரபுவே. அப்படி யாரையும் நான் உள்ளே அனுமதிக்கவில்லை

 

சில நாழிகைகளுக்கு முன் எதிரியை நீர் உள்ளே அனுமதித்ததை நேரில் கண்டதாய் என் ஒற்றர்கள் சொன்னார்களே”” லாக்கோஜி ஜாதவ்ராவ் ஸ்ரீனிவாசராவைக் கூர்ந்து பார்த்தபடியே கேட்டார்.

 

அதை நான் மறுக்கிறேன் ஐயா. இன்று தங்கள் மருமகனைத் தவிர வேறு வெளியாட்கள் யாரும் இந்தக் கோட்டைக்குள் புகவில்லை பிரபுசொல்லும் போது முகத்தை வெகுளியாய் ஸ்ரீனிவாசராவ் வைத்துக் கொண்டார்.

 

லாக்கோஜி ஜாதவ்ராவின் முகம் உடனே கருத்தது. “அவனை என் மருமகனாக நான் அங்கீகரிக்கவில்லை ஸ்ரீனிவாசராவ். அப்படிப்பட்டவனை உன் கோட்டைக்குள் அனுமதித்ததோடு என் மருமகன் என்று சொல்லி என்னை அவமதிக்கவும் செய்கிறாய். இந்தக் குற்றத்திற்காகவே உன் நாக்கை அறுத்தாலும் தப்பில்லை….”

 

அங்கீகரிக்க மறுப்பதால் உறவுகள் இல்லாமல் போய் விடுவதில்லை பிரபு. அவர் தனியாக வந்திருந்தால் உங்கள் எதிரணியில் இருப்பதால் எதிரி என்று நினைத்திருப்பேன். ஆனால் உங்கள் மகள் மற்றும் பேரப்பிள்ளையோடு அவர் வந்ததால் தான் உறவை வைத்தே அவரை அனுமதித்தேன்…..”

 

மகளையும் பேரனையும் பற்றிச் சொன்னதால் லாக்கோஜி ஜாதவ்ராவ் சற்று மென்மையானது போல் தோன்றியது. ஆனாலும் அவர் அவர்களைப் பற்றி எதுவும் கேட்காமல் அவன் உள்ளே தான் இருக்கிறானா….” என்று சந்தேகத்தோடு அவர் தன் எதிரியையே விசாரித்தார்.

 

இல்லை ஐயா அவர் போய் விட்டார். அதையும் தங்கள் ஒற்றர்கள் தங்களிடம் கண்டிப்பாகத் தெரிவித்திருப்பார்கள். உள்ளே தங்கள் மகள் மட்டும் தான் இருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியான தங்கள் மகளை உடன் அழைத்துச் செல்வது அவரது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று பயப்பட்டு அவருக்கு மட்டும் தான் ஷாஹாஜி அடைக்கலம் கேட்டார். பெண்மையையும், தாய்மையையும் போற்றும் மரபில் வந்த எனக்கு மறுக்க முடியவில்லை. மேலும் ஒருவேளை நான் மறுத்து அனுப்பி விட்டால், அழைத்துச் செல்லும் வழியில் கர்ப்பிணியான உங்கள் மகளுக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டால் உங்கள் கோபத்திற்கும் ஆளாக வேண்டி வருமே என்பதாலும் தான் நான் சம்மதித்தேன்….”


-----


704 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.700/-  

இந்த அச்சு நூலையும், என்.கணேசனின் மற்ற நூல்களையும் 

ஆன்லைனில் அமேசானில்  வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

                                                 

நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.


நாவலைப் படித்து விட்டு  ஒரு வாசகர் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி அனுப்பியிருந்த விரிவான விமர்சனம் -


சத்ரபதி நாவல் விமர்சனம்

ஐயா தங்களுடைய தீவிர ரசிகன் நான்அமானுஷ்யனில் ஆரம்பித்து இருவேறு உலகம் வரை ஒவ்வொரு நாவலையும் ரசித்துப் படித்தவன்ஆனால் 
தங்களுக்கு நான் கருத்து தெரிவித்ததில்லைசத்ரபதியைப் படித்து முடித்த 
பின் உடனே நான் உணர்ந்ததைச் சொல்லும் ஆவல் ஏற்பட்டதுஏனென்றால் 
சிவாஜியை அவன் பிறப்பிலிருந்து நேரில் பார்த்து அவன் வாழ்க்கையோடு 
பயணம் செய்த நிறைவு எனக்கு ஏற்பட்டதுநாவல் அருமையிலும் அருமை.

உங்கள் மற்ற நாவல்கள் போல் மளமளவென்று படித்து நகர முடியவில்லை
நிறைய வரலாற்றுத் தகவல்கள் இடையிடையே நிறைய கொடுத்திருப்பதால் நிதானமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டியிருந்ததுபுரிந்து கொண்ட
பின் அந்தக் காலத்தில் பயணம் செய்வது போலவே உணர முடிந்தது.

உயிருக்குப் பயந்து சிவாஜியின் பெற்றோர் ஓடி வரும் கட்டத்தில் ஆரம்பிக்கும் நாவல் சிவாஜியின் முடிசூட்டு விழாவில் முடியும் வரை ஒவ்வொரு காட்சியும்
கண் முன்னே நிற்கிறதுஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியிலும் அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்டவர்கள் எண்ணங்கள் மூலமாக வெளிப்படுத்தி 
இருப்பதால் அந்தக் கதாபாத்திரங்களையும் சரித்திரத்தையும் இயல்பாய் 
புரிந்து கொள்ள முடிந்தது.

ஷாஹாஜிஜீஜாபாய்தாதாஜி கொண்டதேவ்சிவாஜியின்      நண்பர்கள்ஆதில்ஷா சுல்தான்கள்அப்சல்கான்செயிஷ்டகான்ஔரங்கசீப்ஜஹானாராஜெப் உன்னிசா கேரக்டர்கள் மனதில் தங்கி விட்டார்கள்சிவாஜிக்கு ரொட்டி கொடுத்த பாட்டி போன்ற சின்னச் சின்ன கேரக்டர்களும் சூப்பர்.

சின்ன எடிட்டிங் தவறுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தன என்றாலும் ஒட்டு மொத்தத்தில் ஒரு மகாபுருஷனை பிரம்மாண்டமாய் செதுக்கி வைத்திருக்கிறீர்கள்அவனோடு வாழ்வது போலவே உணர வைத்ததற்கு நன்றி.

நாவலில் நான் மிகவும் ரசித்த இடங்கள்:

ஜீஜாபாய் அயூப்கான் என்ற ஏமாற்றுக் கோட்டைத் தலைவனைப் பழி வாங்கும் இடம்.

ஜாவ்லி அரசனை சிவாஜியின் ஆட்கள் நன்றாய் கலாய்த்து விட்டுக் கொல்லும் இடம்

செயிஷ்டகான் மீதான தாக்குதலில் நகைச்சுவையும் அதற்குப் பின் சிவாஜியின் குழு தப்பித்த விதமும்.

சிவாஜி ஆக்ரா சென்று சேர்ந்ததிலிருந்து அங்கிருந்து தப்பித்து வருவது வரை நிகழ்ச்சிகள் நல்ல விறுவிறுப்புதிட்டமிட்ட விதமும்அதன் பின் ஔரங்கசீப் போலத்கானை விசாரித்து உண்மையாக நடந்ததைத் தெரிந்து கொள்ளும் நிகழ்ச்சியும் அருமை..

சாலேர் கோட்டையைத் தக்க வைக்க சிவாஜி செய்த யுத்த யுக்திகளால் மும்முனையில் வெற்றி பெற்ற சம்பவம்.

ஔரங்கசீப்பின் பழைய காதலை அறிந்து அவன் மகள் ஜெப் உன்னிசா தந்தையைச் சந்தித்துப் பேசும் இடம்முடிவில் ஔரங்கசீப் மீது அவளைப் போலவே நமக்கும் பச்சாதாபம் ஏற்படுகிறது. (உங்கள் நாவல்களில் என்னால் வில்லன்களைக் கூட வெறுக்க முடிந்ததில்லைஅப்படி அவர்களைச் சித்தரிப்பீர்கள்இந்த நாவலிலும் ஔரங்கசீப் கேரக்டரின் அந்த குறிப்பிட்ட இடம் சூப்பர்)

ஆக்ராவிலிருந்து தப்பித்து வரும் சிவாஜி ஒரு மூதாட்டி வீட்டில் தங்கும் நிகழ்வுஅந்த மூதாட்டியின் மனமும்சிவாஜியின் பதில் பரிசும் நெகிழ வைத்த இடங்கள்.

நாவலில் என்னால் ரசிக்க முடியாத விஷயங்கள்:

மராட்டியப் பெயர்கள் ஒரே போல் இருப்பது போலவே தெரிகின்றனசில இடங்களில் குழப்பமாக இருக்கிறது

-     சங்கர சுப்பிரமணியன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக