எழுத்தாளர் என்.கணேசன் எழுதியுள்ள அனைத்து நூல்களின் அனைத்து விவரங்களும், நூற்குறிப்புகளும், சில நாவல்களின் இலவச அத்தியாயங்களும் இங்குள்ளன.
வெள்ளி, 31 டிசம்பர், 2021
அமானுஷ்யன் நாவல்
அமானுஷ்யன்
என்.கணேசனின் கதாபாத்திரங்களிலேயே பெருவாரியான வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற கதாபாத்திரம் எது என்றால் அது அமானுஷ்யன் அக்ஷய் தான். அந்த வரவேற்பின் காரணமாகத் தான் அவரது பின் இரண்டு நாவல்களிலும் (புத்தம் சரணம் கச்சாமி, இல்லுமினாட்டி) அந்தக் கதாபாத்திரம் மிகமுக்கிய இடங்களைப் பிடித்து நின்றது. இனியும் அந்தக் கதாபாத்திரம் தொடர்ந்து மற்ற நாவல்களில் இடம் பிடிக்க வேண்டும் என்று வாசகர்கள் வேண்டுகோள் விடுக்கும் அளவு அவர்கள் மனதில் இடம் பிடித்தவன் அமானுஷ்யன்.
ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த நாவலும் இது வரை இரண்டு பதிப்புகள் கண்டுள்ளன. முதல் பதிப்பு ஆகஸ்ட் 2014. இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2020.
608 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.600/-
நூல்குறிப்பு
டெல்லியில் சிபிஐ டைரக்டர் ஒருவர் கொல்லப்படும் அதே நேரத்தில் இமயமலையில் உள்ள ஒரு புத்த விஹார வாசலில் குண்டடிபட்ட நிலையில் ஓர் இளைஞன் சுயநினைவற்றுக் கிடக்கிறான். சில அசாதாரண சக்திகள் இருப்பதால் அமானுஷ்யன் என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட அவனைக் கொல்லத் தீவிரவாதிகள், போலீசார், சிபிஐ என முத்தரப்பும் முனைகிறது.
தான் யார், எதற்காக இத்தனை பேர் தன்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று அறியும் முயற்சியில் ஆரம்பிக்கிறது கதைக்களம்.
அமானுஷ்யன் யார்? அவனுக்கும், கொல்லப்பட்ட சிபிஐ டைரக்டருக்கும் என்ன தொடர்பு? ஏன் அவனை எதிரிகள் கொல்லத் துடிக்கிறார்கள்? இறுதியில் என்ன ஆகிறது? என்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடையைப் பல எதிர்பாராத திருப்பங்களுடனும், மர்ம முடிச்சுகளுடனும் விறுவிறுப்பாகச் சொல்கிறது இந்த நாவல். காதல், ஆன்மீகம், அழகிய மனித உணர்வுகள், அரசியல் என்று எல்லாம் கலந்த இந்த நாவலைப் படிப்பவர்கள் மனதில் நிரந்தரமாய் தங்கி விடுவான் அமானுஷ்யன்!
வாசகர்களுக்காக அமானுஷ்யன் நாவலின் இரண்டு அத்தியாயங்கள் இங்கே இலவசமாய்த் தரப்பட்டிருக்கின்றன.
அமானுஷ்யன்
என்.கணேசன்
1
அந்த
புத்த விஹாரத்தின் கூரையில் தொப்பென்று ஏதோ விழுந்து உருண்டு வாசற்புறத்தில் கீழே
விழுந்தது நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்டது. உறக்கத்தில்
இருந்த புத்த பிக்குகள் கண் விழித்தார்கள். இளம் பிக்கு ஒருவர் சொன்னார்.
"ஏதோ மரம் விழுந்து விட்டது போலிருக்கிறது"
இமயமலைச்சாரலில்
உள்ள அந்த புத்த விகாரத்தின் மீது மரக் கிளைகளும், வேரறுந்த
மரங்களும் விழுவது புதிதல்ல.
ஆனால்
அவர்களின் குருவான, எழுபது வயதைக் கடந்த
மூத்த பிக்கு அமைதியாகச் சொன்னார். "சத்தத்தை வைத்துப் பார்த்தால் விழுந்தது
மரமாகத் தெரியவில்லை. மனிதனோ விலங்கோ தான் விழுந்திருக்க வேண்டும். போய்க் கதவைத்
திறந்து பார்"
அவர்
சொன்னவுடன் எழுந்த அந்த இளம் பிக்கு இரண்டடி வைத்த பின் தயங்கினார்.
என்ன
என்று மூத்த பிக்குவின் கண்கள் கேட்டன.
"மனிதன் என்றால்
பரவாயில்லை. ஏதாவது விலங்காய் இருந்தால்..." இளம் பிக்குவிற்கு விலங்கிடம்
மாட்டிக் கொள்ள விருப்பமில்லை.
"மனிதனாயிருந்தாலும்
சரி, விலங்காய்
இருந்தாலும் சரி, பிரக்ஞை இருக்க
வாய்ப்பில்லை. விழுந்த விதத்தைப் பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது. விழுந்த
சத்தத்தைத் தவிர வேறு சத்தமில்லை. பிரக்ஞை இருந்திருந்தால் கண்டிப்பாக
கத்தியிருக்க வேண்டும். எழுந்து ஓடின சத்தமும் இல்லை பார்த்தாயா. போய்ப்
பார்"
இளம்
பிக்கு தன் குருவை வியப்புடன் பார்த்தார். எதையும் புரிந்து கொள்ள கிழவருக்கு அதிக
நொடிகள் தேவையில்லை. இது வரையில் அவர் எதையும் தவறாகப் புரிந்து கொண்டதுமில்லை.
ஆனால் அவரும் மனிதர் தானே? எதற்கும் ஒரு ஆரம்பம்
என்றும் இருக்கிறதே?....இளம் பிக்குவிற்கு
இன்னும் தயக்கமாகவே இருந்தது.
மூத்த
பிக்கு தன் பார்வையை மற்ற பிக்குக்களிடம் திருப்ப அவர்களில் இருவர் எழுந்து கையில்
விளக்குகளை எடுத்துக் கொண்டு இளம் பிக்குவிற்குத் துணையாகக் கிளம்பினார்கள். இளம்
பிக்கு அசட்டுச் சிரிப்புடன் போய் புத்த விஹாரத்தின் பெரிய மரக் கதவைத் திறந்தார்.
வெளியே இருந்து பனிக்காற்று பலமாக வீச ஒரு பிக்கு கையில் இருந்த விளக்கு அணைந்தது.
மற்ற விளக்கின் வெளிச்சத்தில் விழுந்தது என்ன என்று பார்த்தார்கள்.
வெளியே
ஒரு மனிதன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
அதே
நேரத்தில் டில்லியில் ஒரு மனிதன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான்.
சுவர்க் கடிகாரம் ஆமை வேகத்தில் நகர்வதாக அவனுக்குத் தோன்ற, டீப்பாயின் மீது வைத்திருந்த தன்
கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான். மணி இரண்டிலும் இரவு ஒன்று பத்து தான். அவன்
எதிர்பார்த்த போன்கால் வராமல் அவனால் இன்று உறங்க முடியாது. அந்த போன் கால் மணி ஒன்று நாற்பத்திரண்டிற்கு
வந்தது. பதட்டத்துடன் அவன் அந்த செல் போனை எடுத்தான். "ஹலோ"
"ஆபரேஷன் சக்ஸஸ்"
அந்த
மனிதன் நிம்மதிப் பெரு மூச்சு விட்டான். "எல்லாத்தையும் விவரமா
சொல்லுங்க"
பதினேழு
நிமிடங்கள் கழித்து அந்த மனிதன் அந்த செல் போனில் இன்னொரு நபருக்குப் போன்
செய்தான். மறுபக்கம் போனை எடுத்தவுடன் சொன்னான். "முடிச்சுட்டோம்"
சில
வினாடிகள் மறுபக்கம் மௌனம் சாதித்தது. பிறகு அங்கிருந்து கேள்வி எழுந்தது.
"உடம்பை என்ன செஞ்சாங்க"
"மலயுச்சில அவனைத்
துப்பாக்கில சுட்டுருக்காங்க. குண்டு பட்டவுடனே அவன் பேலன்ஸ் தவறி உச்சியில்
இருந்து கீழே விழுந்துட்டான். அந்தப் பக்கம் பெரிய பள்ளத்தாக்கு. குண்டு படாம
விழுந்தாலே எந்த மனுஷனும் பிழைக்க முடியாது......"
"·பீல்டுல பலரும் அவனை
மனுஷனாய் நினைக்கிறதில்லை. அவனுக்கு அமானுஷ்யன்னு ஒரு பேர் இருக்கு தெரியுமா?"
அந்தக்
குரலில் லேசாகப் பயம் இருந்ததாகத் தோன்றியது. உடல் கிடைக்கவில்லை என்ற செய்தி
மறுபக்கத்தை சங்கடப்படுத்தியதாகத் தோன்றியது. இரண்டு நாட்களுக்கு முன் CBI அடிஷனல் டைரக்டரையே சுட்டுக் கொன்ற போது
அவர் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. அந்த அளவு அதிகார வர்க்கத்தின் உயரத்தில்
இருக்கும் இத்தனை பெரிய மனிதரையே பயமுறுத்தும் அந்தக் குண்டடிபட்டு செத்தவனை
நினைக்கப் பொறாமையாக இருந்தது.
மறுபக்கம்
மறுபடி சொன்னது. "அவன் பிணத்தை அந்தப் பள்ளத்தாக்குல தேடச் சொல்லுங்க. அவன்
கிட்ட ஏதாவது பேப்பர்ஸோ, வேறெதாவதோ இருந்தா
எடுத்து அனுப்பச் சொல்லுங்க. பிறகு புதைச்சுட்டோ, எரிச்சுட்டோ
தகவல் தெரிவிக்கச் சொல்லுங்க...."
"இந்த டிசம்பர்
குளிரில் இமயமலைப் பள்ளத்தாக்குல ஒரு பிணத்தைத் தேடறது சுலபமில்லை....."
"எத்தனை செலவானாலும்
பரவாயில்லை. வேலையை முடிக்கச் சொல்லுங்க.... உங்க பணம் ஸ்விஸ் அக்கவுண்ட்ல ஐம்பது
லட்சம் டெபாசிட் ஆயிருக்கு. அவங்களுக்குத் தர வேண்டிய பணத்தை வழக்கமான இடத்தில்
இருந்து நீங்க எடுத்துக்கலாம்..."
"தேங்க்ஸ் சார்"
இணைப்பு
துண்டிக்கப்பட்டது. அந்த மனிதன் செல் போனில் மீண்டும் ஒரு எண்ணிற்குப் பேசினான்.
தனக்குத் தெரிவிக்கப்பட்டதை தானும் அந்த எண்ணில் பேசிய மனிதனுக்குத் தெரிவித்தான்.
பின் செல்போனை சைலன்ஸ் மோடில் மாற்றி சமையலறைக்குப் போய் பெரிய எவர்சில்வர்
டப்பாவை எடுத்து அதில் நிறைந்திருந்த துவரம்பருப்பின் அடியில் அந்த செல்போனைப்
பதுக்கி வைத்தான். ஒரு போலி நபர் பெயரில்
பதிவாகி இருந்த அந்த செல்போனை இந்த ஆபரேஷனுக்கு மட்டுமே அவன் பயன்படுத்தி
வருகிறான்....
"உயிர்
இருக்கிறது"
"தலையில்
அடிபட்டிருக்கிறது. தோள்பட்டையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருக்கிறது..."
புத்த
பிக்குகள் பரபரப்பாய் வந்து சொல்ல, மூத்த பிக்கு உடலை
உள்ளே எடுத்து வரச் சொன்னார். "தூக்கி வரும் போது முடிந்த வரை உடலை
அசைக்காமல் கொண்டு வரப்பாருங்கள்". இன்னொரு பிக்குவிடம் தண்ணீரைச் சூடாக்கச்
சொன்னார். தனதறையில் வைத்திருந்த ஒரு
மரப்பெட்டியை எடுத்து வந்து பிரித்தார். அதில் பல விதமான கத்திகள், ப்ளேடுகள், பஞ்சு, தூய்மையான
துணிகள், கூரிய கம்பிகள்
எல்லாம் இருந்தன.....
உள்ளே
எடுத்து வரப்பட்டவனுக்கு வயது 25லிருந்து 30க்குள் இருக்கலாம் என்று மூத்த பிக்கு
கணக்கு போட்டார். மாநிறமாக சுமாரான உயரத்துடன் இருந்தான். ஒல்லியாக இருந்தாலும்
உறுதியான உடலமைப்பைக் கொண்டவனாக இருந்தான். உடலில் பல இடங்களில் இருந்த வடுக்கள்
அவன் அடிபடுவது புதிதல்ல என்று சாட்சி சொல்லின.
மூத்த
பிக்கு அமைதியாகத் தன் சிகிச்சையை ஆரம்பித்தார். காயங்களைச் சுத்தம் செய்யும் போது
அவன் மயக்க நிலையிலேயே இருந்தான். ஆனால் அவர் அவன் தோள்பட்டையில் இருந்து குண்டை
எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அதிகமாய் வலித்திருக்க வேண்டும்.
கண்களைத் திறந்து அவரைப் பார்த்தான். அவர் ஹிந்தியில் அவனிடம் சொன்னார்.
"கொஞ்சம் பொறுத்துக் கொள். அசையாதே. இரண்டே நிமிடம் தான்...."
அவன்
அதன் பிறகு அசையவில்லை. மூத்த பிக்கு அவனுடைய மன உறுதியைக் கண்டு வியந்தார். மயக்க
மருந்து இல்லாமல் செய்யப்படும் இந்த சிகிச்சையில் வலி எந்த அளவு இருக்கும் என்பதை
அவர் அறிவார். அவன் பற்களைக் கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக் கொண்ட விதம்
அவரைப் பாராட்ட வைத்தது. குண்டை எடுத்து விட்டு மூலிகை மருந்துகளால் உறுதியாகக்
கட்டுப் போட்ட பிறகு வலி குறைந்திருக்க வேண்டும். மீண்டும் உறக்க நிலைக்குச்
சென்றான்.
மீண்டும்
அவன் விழித்த போது அதிகாலையாகி இருந்தது. அவனருகில் மூத்த பிக்குவும் இளம்
பிக்குவும் அருகில் இருந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் புன்னகைத்தான். புன்னகைத்த
போது முகம் பிரகாசமாகி அழகாகத் தெரிந்தான்.
மூத்த
பிக்குவும் புன்னகைத்தார். அவருக்கு ஏனோ அவனை மிகவும் பிடித்துப் போனது.
கருணையுடன் ஹிந்தியில் கேட்டார். "எப்படி இருக்கிறது?"
அவன்
பரவாயில்லை என்பது போல் தலையாட்டினான்.
"உன் பெயர் என்ன?" அவர் அன்புடன் கேட்டார்.
அவன்
விழித்தான். கண்களை இரண்டு மூன்று முறை கசக்கிக் கொண்டு யோசித்தான். ஒன்றுமே
தெரியவில்லை. மனத்திரையில் எல்லாமே வெறுமையாக இருந்தது. அவன் தமிழில் தாழ்ந்த
குரலில் கேட்டான். "நான் யார்?"
பிக்குகள்
இருவரும் விழித்தார்கள். ஹிந்தியில் மூத்த பிக்கு கேட்டார். "என்ன கேட்டாய்?"
அவன்
சிறிதும் யோசிக்காமல் ஹிந்தியில் மறுபடியும் கேட்டான். "நான் யார்?". கேட்ட பின் தான் தன் கேள்வியின்
விசித்திரம் அவனுக்கு உறைத்தது போலிருந்தது. அவன் மூளையைக் கசக்கிக் கொண்டு
யோசித்தது தெரிந்தது. முகத்தில் படர்ந்த குழப்பம் நீங்காமல் நிறைய நேரம்
தொடர்ந்தது. அவனுக்கு அவனைப் பற்றி எதுவுமே நினைவுக்கு வரவில்லை.
மூத்த
பிக்குவும் இளம் பிக்குவும் அவனைத் திகைப்புடன் பார்த்தார்கள்.
2
CBI டைரக்டர் மஹாவீர்
ஜெயின் தன் அலுவலகத்தின் முன் காரில் இருந்து இறங்குகையில் பத்திரிக்கை நிருபர்கள்
அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.
"சார் அடிஷனல்
டைரக்டர் ஆச்சார்யாவைக் கொலை செய்தது யார் என்று தெரிந்து விட்டதா?"
"உங்களுக்கு யார்
மீதாவது சந்தேகம் இருக்கிறதா?"
"CBI அடிஷனல் டைரக்டர்
கொலைக்கு அரசியல் காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?"
மஹாவீர்
ஜெயின் கைகளை உயர்த்தி மேலும் வரவிருக்கும் கேள்விகளை நிறுத்தினார். "அவரைக்
கொன்றவர்கள் யார் என்பதை கூடிய சீக்கிரம் கண்டு பிடிப்போம். அவர்கள் சட்டத்தின்
பிடியில் இருந்து தப்ப முடியாது. அவரைக் கொன்றவர்களைக் கண்டு பிடிக்க போலீஸ் ஒரு சிறப்புக்குழு
அமைத்துள்ளது. அவர்களுக்கு இதில் முழு ஒத்துழைப்பு தருவதுடன் எங்கள் தரப்பிலும்
விசாரணை நடக்கும். இப்போதைக்கு வேறெதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.
நன்றி"
நிருபர்
கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது. "உங்களுக்கும் ஆச்சார்யாவுக்கும் இடையே
கருத்து வேறுபாடுகள் இருந்தன என்று கூறுகிறார்களே அது பற்றி நீங்கள் என்ன
சொல்கிறீர்கள்?"
மஹாவீர்
ஜெயின் புன்னகையுடன் சொன்னார். "எனக்கும் என் மனைவிக்கும் இடையே
எக்கச்சக்கமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.....எங்களுக்குத் திருமணமாகி
இருபத்தி எட்டு வருடங்கள் ஆகின்றன. என் மனைவி இன்னும் இருக்கிறார்.....என்னை
அதிகாரம் செய்து கொண்டு"
பலத்த
சிரிப்பலைகள் எழ மஹாவீர் ஜெயின் தன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். தன் அறை
நாற்காலியில் அமர்ந்த போது கடைசியாகக் கேட்கப்பட்ட கேள்வி அவர் மனதை நெருடியது.
அவருக்கும் இறந்த ஆச்சார்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள்....
எத்தனையோ
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஆச்சார்யா மீது அவருக்கு பெரும் மரியாதை
இருந்தது. மனிதர் மிக நேர்மையானவர். நல்லவர். ஆனால் அவர் சில விஷயங்களில் ரகசியமாக
இயங்கி வந்தார். கடைசியில் எல்லாம் முடிந்த பிறகு தான் ஜெயினுக்கே தெரிவிப்பார்.
உதாரணமாக, சென்ற வருடம் ஒரு
போதை மருந்து கடத்தல் கும்பலை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த விதம். CBI ஆட்கள் அந்த கேஸில்
ஈடுபடுத்தப்படவில்லை. யாரோ ரகசியமாகத் தெரிவித்தார்கள் என்று சொல்லி, தகவல் தெரிவித்தவருக்கு பெரும் தொகை
ஒன்றையும் அவர் பெற்றுத் தந்தார். ஆனால் ஜெயினுக்குத் தெரியும் யாரோ வெளியாட்கள்
சிலரை வைத்துக் கண்டுபிடித்திருக்கிறார் என்று. அது பல நாட்கள் செய்த வேலையின்
பலன். ஆனால் தகவல் தெரிவித்ததாகச் சொன்ன நபர் அல்லது கண்டு பிடிக்க உதவிய நபர்
அல்லது நபர்கள் யார் என்று இன்று வரை ஜெயினுக்குத் தெரியாது. ஆச்சார்யா தன் சொந்த
அதிகாரத்தில் அதை வெளிப்படுத்த மறுத்து விட்டார்.
ஜெயினுக்கு
அவருடைய ரகசியத்தன்மை பெரும் எரிச்சலைக் கிளப்பியது. பல முறை வெளிப்படையாகவே அதை
அவரிடமும், மற்ற உயர்
அதிகாரிகளிடமும் தெரிவித்தும் இருந்தார். CBI
வெளி
மனிதர்களைத் தங்கள் துப்பறியும் வேலைகளுக்குப் பயன்படுத்துவது புதிதல்ல என்றாலும்
முழுக்க முழுக்க யாரோ ஒருசில வெளியாட்களை அவர் பயன்படுத்துவது தவறு என்று ஜெயின்
சொன்ன போது, இங்குள்ளவர்களுள்
ஒருசிலர் மூலம் வெளியாருக்கு தகவல்கள் சுலபமாகச் செல்கிறது என்பது தான் காரணம்
என்பது போல ஆச்சார்யா சொன்னார். யார் அந்தப் புல்லுருவிகள் என்று கேட்டதற்குச்
சரியாகத் தெரியவில்லை என்பது அவரது பதிலாக இருந்தது.
வழக்கமான
கேஸ்களை அவருடைய டிபார்ட்மெண்ட் ஆட்களே கவனித்து வந்தார்கள் என்றாலும் இப்போதும்
ஏதோ ஒரு பெரிய கேஸை அவர் திரை மறைவில் துப்பறிந்து வந்தார் என்று ஜெயினுக்கு
சந்தேகம் தோன்றியிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இறப்பதற்கு சில மணி
நேரங்கள் முன்பு இரவில் ஆச்சார்யா ஜெயினுக்குப் போன் செய்திருந்தார்.
"சார். நாட்டையே அதிர
வைக்கிற மாதிரியான சில தகவல்களை ஆதாரத்தோட வைத்திருக்கிறேன். நாளைக்குக் காலையில்
உங்க டேபிள்ல வைக்கிறேன்."
அப்போதைக்கு
என்னவோ ஜெயினுக்கு எரிச்சலாகத் தான் இருந்தது. அவருக்குத் தெரியாமல் தானாகவே ஒரு
கேஸை எடுத்துக் கொண்டு திரைமறைவில் இந்த முறையும் ஆச்சார்யா துப்பறிந்து சொல்ல
வருவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ஆச்சார்யா சொல்ல வருவதற்கு முன் கொலை
செய்யப்பட்டு விட்டார்.
ஆச்சார்யாவின்
மனைவி பெங்களூரில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்ததால் ஆச்சார்யா
வீட்டினுள் தனியாகவே அன்று இருந்திருக்கிறார். நள்ளிரவில் அவர் வீட்டுக்குக் காவல்
இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் முதலில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். பின்
அவருடைய வீட்டுக்குக் கொலையாளியோ, கொலையாளிகளோ
நுழைந்திருக்கிறார்கள். கதவு உடைக்கப்படவில்லை என்பதால் உள்ளே நுழைந்த நபர் அல்லது
நபர்கள் ஆச்சார்யாவுக்குத் தெரிந்தவர்களாகவே இருந்திருக்க வேண்டும். ஆள் யார்
என்று பார்க்காமல் நள்ளிரவில் கதவைத் திறப்பவரல்ல அவர். உள்ளே நுழைந்த நபர்/கள்
அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு அவருடைய வீட்டுப் பொருள்களைக்
கண்டபடி துவம்சம் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்....
போலீஸ்
விசாரணையின் போது அவரிடமும் கேள்வி கேட்டார்கள். அப்போது ஜெயின் கடைசியாக
ஆச்சார்யா செய்த போன் கால் பற்றி சொல்லப் போகவில்லை. அந்த போன் காலை அவர் ஏதோ ஒரு
காயின் பாக்ஸ் போனிலிருந்து தான் செய்திருந்தார் என்பதால் போலீசிடம் அந்தத் தகவல்
இருக்கவில்லை. இவராகவும் அதை சொல்லப் போகவில்லை. போலீசில் இருந்து பத்திரிக்கைகளுக்கு
இந்தத் தகவல் கசிவதை அவர் விரும்பவில்லை.
இதை
தங்கள் தரப்பிலிருந்தே ரகசிய விசாரணை செய்வது நல்லது என்று ஜெயின் நினைத்தார்.
அதுவும் இப்போதைய தலைமை அலுவலகத்தில் இல்லாத,
தங்கள்
வட்டார அலுவலகத்தில் உள்ள ஏதாவது ஒரு திறமையான அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்துவது
உத்தமம் என்று தோன்றிய உடனேயே அவருக்கு ஒரு பெயர் நினைவுக்கு வந்தது. உடனே சென்னை
அலுவலகத்திற்குப் போன் செய்தார்.
அவன்
இன்னும் தன் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்துக் கொண்டு தான் இருந்தான். எதுவுமே
நினைவில்லை. அவனுக்கு நினைவிற்கு எதுவும் வரவில்லை என்பது தெரிந்த மூத்த பிக்கு
அவனுடைய சட்டை, பேண்ட் ஆகியவற்றை
பரிசோதித்துப் பார்த்தார். ஒரு சிறிய காகிதம் கூட இருக்கவில்லை. சட்டை, பேண்ட் இரண்டும் ரெடிமேடாக இருந்ததால்
தையல்காரன் பற்றிய தகவல் கூட இருக்கவில்லை. பிறகு மூத்த பிக்கு சொன்னார்.
"இப்போது எதுவும் நினைவுக்கு வரா விட்டால் பரவாயில்லை. கவலைப்படாமல் தூங்கு.
இன்னொரு முறை தூங்கி எழுந்தால் எல்லாம் நினைவுக்கு வரும்" அவர் ஏதோ விதைகளைக்
கசக்கி முகர வைத்து அவனை மறுபடி உறங்க வைத்தார்.
அவன்
மறுபடி எழுந்து இப்போதும் யோசிக்கிறான். உலகத்திலேயே ஒரு மனிதனுக்கு மிகவும்
பரிச்சயமான பெயர் தன் சொந்தப் பெயராகத் தான் இருக்க வேண்டும். ஆனால் ஏனோ அதுவே
அவனுக்கு நினைவுக்கு வரவில்லை. அவனுக்கு நினைவு இருப்பதெல்லாம் புத்த பிக்குகளும்
இந்த புத்த விஹாரமும் தான். மற்றதெல்லாம் துடைத்தெடுத்தது போல் நினைவரங்கம்
வெறுமையாக இருந்தது. தலையில் அடிபட்டது காரணமாக இருக்குமா? தோள்பட்டையில் குண்டு பாய்ந்திருந்ததை
மூத்த பிக்கு சிகிச்சை செய்து எடுத்தாரே, யார் சுட்டார்கள்? ஏன் சுட்டார்கள்?
தலையும், தோளும் வலித்தது பெரிதாகத் தோன்றவில்லை.
எதுவும் நினைவுக்கு வராதது பயங்கரமாக இருந்தது.
அப்போது
புத்த விஹாரத்தின் வெளியே சலசலப்பு கேட்டது. அவன் காதைக் கூர்மையாக்கினான்.
வெளியே
இரண்டு இளைஞர்கள் இளைய பிக்குவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். "இங்கே
ஏதாவது மனித உடல் விழுந்திருந்ததா?"
அவர்கள்
கேட்ட விதத்திலேயே அவர்கள் உயிருள்ள உடலைத் தேடவில்லை, செத்த பிணத்தைத் தான் தேடுகிறார்கள்
என்பது அந்த இளைய புத்த பிக்குவிற்குத் தெரிந்து விட்டது. அவர்களை இதுவரை அந்தப்
பகுதியில் பார்த்ததில்லை. அவர்கள் நினைப்பது போல் அவன் சாகவில்லை உயிர் பிழைத்து
விட்டான் என்று சொல்ல நினைத்த இளைய பிக்கு வந்திருந்த ஆட்களின் முகத்தைக்
கூர்மையாகப் பார்த்தார். நல்ல மனிதர்களாகத் தெரியவில்லை. கண்களில் ஒருவித கொடூரம்
தெரிந்ததை அவர் கவனித்தார். இவர்கள் கொலை செய்ய முயன்ற கூட்டத்தாராகக் கூட
இருக்கலாம். இல்லையென்றால் இவர்களுக்கு எப்படி ஒரு பிணம் இந்தப் பகுதியில் விழுந்து
கிடக்கும் என்று தெரியும்? அப்படி எதுவும்
இந்தப்பகுதியில் விழவில்லை என்று சொல்வதே உள்ளே உள்ள வாலிபனுக்கு பாதுகாப்பு என்று
தோன்றியது. ஆனால் இந்த புத்த விஹாரத்தில் சேரும் போது அவர் சத்தியம்
செய்திருக்கிறார்- எந்தக் காரணத்தை வைத்தும் பொய் சொல்ல மாட்டேன் என்று!
செய்த
சத்தியம் பெரிதா உயிர் பெரிதா என்று தனக்குள் கேட்டுக் கொண்ட இளைய பிக்கு சத்தியம்
திரும்பவும் செய்து கொள்ளலாம், ஆனால் உயிர் போனால்
திரும்பி வருமா? என்று யோசித்து
முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டி "இல்லையே" என்றார்.
வந்தவர்களில்
ஒருவன் திரும்பத் தயாரானான். அடுத்தவன் அவனைத் தடுத்து நிறுத்தி புத்தவிஹாரத்தின்
கதவைக் காட்டினான். கதவில் இரத்தக் கறை இருந்தது......
இளைய
பிக்குவிற்கு ஒரு கணம் இதயத்துடிப்பு நின்று போனது.
(மீதியை அமானுஷ்யன் நூலில் வாசகர்கள் படிக்கலாம்)
ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
(அல்லது)
இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.
பரம(ன்) இரகசியம் நாவல்
பரம(ன்) இரகசியம்
என்.கணேசன் எழுதிய நாவல்களில் இந்த நாவல் நான்காவது நாவல் என்ற போதும் அச்சில் வந்த நாவல்களில் இது முதலாம் நாவல்.
பெரிய நாவல்களில் மூன்று பதிப்புகள் காண்பது என்பது இக்காலக் கட்டத்தில் அரிதிலும் அரிது என்ற போதும் இந்த நாவல் அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த நாவலின் முதல் பதிப்பு ஜனவரி 2014லும், இரண்டாம் பதிப்பு ஜூன் 2016லும், மூன்றாம் பதிப்பு டிசம்பர் 2020லும் வெளியானது.
696 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.750/-
நூற்குறிப்பு:
சித்தர்கள் ரகசியமாய் பூஜித்து, பாதுகாத்து வந்த விசேஷ மானஸ லிங்கத்தை அதன் தெய்வீக சக்திகளுக்காக ஒரு கும்பல் கடத்திச் செல்கிறது. ஓலைச்சுவடிகள் முதல் விஞ்ஞானக் கருவிகள் வரை பயன்படுத்தி அந்தச் சிவலிங்கத்தின் சக்திகளை அடைய முற்படுகிறது.
கடத்தப்பட்ட சிவலிங்கத்தைக் கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பு ஒரு இளம் ஆழ்மனசக்தி ஆராய்ச்சியாளனுக்கு வந்து சேர்கிறது. அவன் அதற்காகப் பழைய பகையை மறந்து அச்சிவலிங்கம் சம்பந்தப்பட்ட தன் குடும்ப மூத்தவர்களுடன் இணைய நேர்கிறது.
இதைத் தொடர்ந்து அத்தியாயத்துக்கு அத்தியாயம் பரபரப்பான, திகிலான நிகழ்வுகள், அமானுஷ்யம், ஆழ்மனசக்தி, ஆன்மீகம், தத்துவம், விஞ்ஞான ஆராய்ச்சிகள்... இவற்றுடன் கண்கள் அக்னியாய் ஜொலிக்கும் அக்னிநேத்திர சித்தர், பக்தி மட்டுமே தெரிந்த ஒரு வெள்ளந்தி பூசாரி, விஞ்ஞானப் பார்வையாலேயே சிவலிங்கத்தை அணுகும் ஒரு குருஜி போன்ற கதாபாத்திரங்களும் பின்னிப் பிணைகிறார்கள். இத்தனைக்கும் நடுவில் புதிராய் இயங்கும் விசேஷ மானஸ லிங்கம்!
பிடிபடுமா பரமனின் இரகசியம்?
அறிய இந்த நூலை வாங்கிப் படியுங்கள்
நூலின் இரண்டு அத்தியாயங்கள் வாசகர்களுக்காக இலவசமாய் -
பரம(ன்) ரகசியம்!
*என்.கணேசன்*
1
வீட்டினுள்ளே அந்த நேரத்திலும் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றாலும் பயப்படவும் இல்லை. அவன் தன் சிறிய வயதில் இருந்து அறியாத ஒரு உணர்ச்சி பயம் தான். பன்னிரண்டு வயதில் திருடவும், பதினேழு வயதில் கொலை செய்யவும் ஆரம்பித்தவன் அவன். எத்தனை கொள்ளை அடித்திருக்கிறான், எத்தனை கொலை செய்திருக்கிறான் என்ற முழுக்கணக்கை அவன் வைத்திருக்கவில்லை. போலீசாரிடமும் அதன் முழுக்கணக்கு இல்லை. அத்தனை செய்த போதும் சரி, அதில் சிலவற்றிற்காக பிடிபட்ட போதும் சரி அவன் பயத்தை சிறிதும் உணர்ந்திருக்கவில்லை.
ஒரு அமானுஷ்ய அமைதியைத் துளைத்துக் கொண்டெழுந்த சுவர்க்கோழியின் சத்தம் தவிர அந்த இடத்தில் வேறெந்த ஒலியும் இல்லை. அவன் சத்தமில்லாமல் வீட்டை நோக்கி முன்னேறினான். வீட்டை முன்பே விவரித்திருந்தார்கள். ஒரு ஹால், படுக்கையறை, பூஜையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை கொண்டது அந்த வீடு. வீட்டின் முன் கதவு மிகப்பழையது, மரத்தினாலானது, பழைய பலவீனமான தாழ்ப்பாள் கொண்டது, அதனால் உள்ளே நுழைவது அவனுக்கு அத்தனை கஷ்டமான காரியம் அல்ல என்று சொல்லி இருந்தார்கள்.
ஹாலில் தான் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஹால் ஜன்னல் திறந்து தான் இருந்தது. மறைவாக நின்று கொண்டு உள்ளே பார்த்தான். முதியவர் ஒருவர் ஹாலில் ஜன்னலுக்கு நேரெதிரில் இருந்த பூஜையறையில் தியானத்தில் அமர்ந்திருந்தார். பூஜையறையில் இரண்டு அகல்விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பூஜையறையில் ஒரு சிவலிங்கத்தைத் தவிர வேறு எந்த விக்கிரகமோ, படங்களோ இல்லாதது விளக்கொளியில் தெரிந்தது.
இந்த சிவலிங்கம் தான் அவர்கள் குறி. அந்த சிவலிங்கத்தை அவன் உற்றுப்பார்த்தான். சாதாரண கல் லிங்கம் தான். இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்பது அவனுக்குப் புரியவில்லை. அவனுக்கு உடல் வலிமையும், மன தைரியமும் இருந்த அளவுக்கு அறிவுகூர்மை போதாது. அதனால் அவன் அதைத் தெரிந்து கொள்ளவும் முனையவில்லை.
அந்த முதியவர் மிக ஒடிசலாக இருந்தார். அவரைக் கொல்வது ஒரு பூச்சியை நசுக்குவது போலத் தான் அவனுக்கு. இந்த வேலையை முடிக்க எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்ட போது பேரம் பேசுவார்கள் என்று நினைத்து இரண்டு லட்சம் வேண்டும் என்று கேட்டான். அவர்கள் மறுபேச்சு பேசாமல் ஒத்துக் கொண்டதை இப்போது நினைத்தாலும் அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. மூன்று லட்சமாகக் கேட்டிருக்கலாமோ?
ஆனால் பண விஷயத்தில் பேரம் பேசாதவர்கள், முன்னதாகவே ஒரு லட்ச ரூபாயையும் முன்பணமாகக் கொடுத்தவர்கள், மற்ற சில நிபந்தனைகள் விதித்தார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த முதியவரை பூஜையறையில் கொல்லக் கூடாது, எந்தக் காரணத்தைக் கொண்டும் அவன் அந்த பூஜையறைக்குள் நுழையவோ, சிவலிங்கத்தைத் தொடவோ கூடாது என்று உறுதியாகச் சொல்லி இருந்தார்கள். அவன் அறிவுகூர்மை பற்றி அவர்கள் அறிந்திருந்தார்களோ என்னவோ, சொன்னதை அவன் வாயால் திரும்பச் சொல்ல வைத்துக் கேட்டார்கள். அந்த லிங்கத்தில் ஏதாவது புதையல் இருக்குமோ? தங்கம் வைரம் போன்றவை உள்ளே வைத்து மூடப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்கு இப்போது வந்தது. அப்படி இருந்தால் கேட்ட இரண்டு லட்சம் குறைவு தான்.
கிழவர் அந்த பூஜையறையில் அமர்ந்திருப்பது இப்போது அவனுக்கு அனுகூலமாக இல்லை. முன்னால் சிவலிங்கம் சிலையாக இருக்க, முதியவரும் இன்னொரு சிலை போல அசைவில்லாமல் உட்கார்ந்திருந்தார். மனதுக்குள்ளே கிழவரிடம் சொன்னான். “யோவ் சாமி கும்பிட்டது போதும்யா. வெளியே வாய்யா”
அவன் வாய் விட்டுச் சொல்லி அதைக் கேட்டது போல் முதியவர் கண்களைத் திறந்து அவனிருந்த ஜன்னல் பக்கம் பார்த்தார். அவனுக்கு திக்கென்றது. அவனை அறியாமல் மயிர்க்கூச்செரிந்தது. ஒருசில வினாடிகள் ஹால் ஜன்னலைப் பார்த்தார் அவர். கண்டிப்பாக இருட்டில் நின்றிருந்த அவனை அவர் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. என்றாலும் அவர் பார்வை அவனைப் பார்ப்பதாக அவன் உணர்ந்தான். ஆனாலும் அவனுக்கு பயம் வந்து விடவில்லை. அவனைப்பார்த்து மற்றவர்கள் தான் பயப்பட வேண்டுமே ஒழிய அவன் யாரையும் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.
கிழவர் முகத்தில் லேசானதொரு புன்னகை அரும்பி மறைந்ததாக அவனுக்குத் தோன்றியது. அவர் அமைதியாக எழுந்து நின்று சாஷ்டாங்கமாக விழுந்து சிவலிங்கத்தை வணங்கினார். வணங்கி எழுந்து அவர் திரும்பிய போது அவர் முகத்தில் அசாதாரணமானதொரு சாந்தம் தெரிந்தது. அவர் பூஜையறையை விட்டு வெளியே வந்தார். வெளியே வந்தவர் பத்மாசனத்தில் அந்த சிவலிங்கத்தைப் பார்த்தபடியே ஹாலில் அமர்ந்தார்.
அவன் உள்ளுணர்வு சொன்னது, அவன் அங்கே இருப்பது அவருக்குத் தெரியும் என்று. அவனுக்கு சந்தேகம் வந்தது. வீட்டுக்குள் வேறு யாராவது ஒளிந்து கொண்டிருக்கிறார்களோ? அதனால் தான் அவர் அவ்வளவு தைரியமாக அப்படி உட்கார்கிறாரோ? மெல்ல வீட்டை சத்தமில்லாமல் ஒரு சுற்று சுற்றி வந்தான். எல்லா ஜன்னல்களும் திறந்து தான் இருந்தன. அதன் வழியாக உள்ளே நோட்டமிட்டான். இருட்டில் பார்த்துப் பழகிய அவன் கண்களுக்கு உள்ளே வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. மறுபடி அவன் பழைய இடத்திற்கே வந்து ஹால் ஜன்னல் வழியாக அவரைப் பார்த்தான். அவர் அதே இடத்தில் பத்மாசனத்திலேயே இன்னமும் அமர்ந்திருந்தார். பூஜையறையில் அகல்விளக்குகள் அணைந்து போயிருந்தன.
இனி தாமதிப்பது வீண் என்று எண்ணியவனாக அவன் வீட்டின் கதவருகே வந்தான். கதவு லேசாகத் திறந்திருந்ததை அவன் அப்போது தான் கவனித்தான். அவனுக்கு இது எல்லாம் இயல்பாகத் தெரியவில்லை. அவனுக்குப் புரியாத ஏதோ ஒரு விஷயம் மிகவும் பிரதானமாக அங்கே இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஆனாலும் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு அவன் மெல்ல கதவைத் திறந்து ஒரு நிமிடம் தாமதித்தான். பின் திடீரென்று உள்ளே பாய்ந்தான். அவனை ஆக்கிரமிக்க அங்கே யாரும் இல்லை.
அவன் பாய்ந்து வந்த சத்தம் அவரைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அவர் தியானம் கலையவும் இல்லை. அவனுக்கு அவர் நடவடிக்கை திகைப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. ”என்ன இழவுடா இது. இந்த ஆள் மனுசன் தானா?” என்று தனக்குள்ளே அவன் கேட்டுக் கொண்டான். உடனடியாக வேலையை முடித்து விட்டு இந்த இடத்தை விட்டுப் போய் விடுவது தான் நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.
அதற்குப் பின் அவன் தயங்கவில்லை. மின்னல் வேகத்தில் செயல்பட்டு தியானத்தில் அமர்ந்திருந்த அவர் கழுத்தை அசுர பலத்துடன் நெரித்தான். அவர் உடல் துடித்தாலும் அவரது பத்மாசனம் கலையவில்லை. அவர் அவனைத் தடுக்கவோ, போராடவோ இல்லை. அவர் உயிர் பிரியும் வரை அவன் தன் பிடியைத் தளர்த்தவில்லை. அவர் உயிர் பிரிந்த அந்த கணத்தில் பூஜையறையில் ஒரு ஒளி தோன்றி மறைந்தது. அவன் திகைத்துப் போனான். ஒளி தோன்றியது பூஜை அறையின் எந்த விளக்காலும் அல்ல, அந்த சிவலிங்கத்தில் தான் என்று ஏதோ ஒரு உணர்வு வந்து போனது. யாரோ சிவலிங்கத்தில் வெள்ளை ஒளியை பாய்ச்சியது போல, ஒரு மின்னல் ஒளி அந்த சிவலிங்கத்தில் வந்து போனது போல, அந்தக் கிழவரின் உயிரே ஒளியாகி அந்த சிவலிங்கத்தில் சேர்ந்து மறைந்தது போல... அதே நேரத்தில் அவனை வந்து ஏதோ ஒரு சக்தி தீண்டியதைப் போலவும் உணர்ந்தான். அது என்ன என்று அவனுக்கு விளக்கத் தெரியவில்லை என்றாலும் அவன் ஒரு அசௌகரியத்தை உணர்ந்தான்.
முதல் முறையாக இனம் புரியாத ஒரு பயம் அவனுள் எட்டிப்பார்த்தது. யோசித்துப் பார்க்கையில் அந்த முதியவர் சாகத் தயாராக இருந்தது போலவும் அதற்காகக் காத்துக் கொண்டு இருந்தது போலவும் அவனுக்குத் தோன்றியது. கடவுளை நம்பாத அவனுக்கு, அமானுஷ்யங்களையும் நம்பாத அவனுக்கு, சிவலிங்கத்தில் வந்து போன ஒளி கண்டிப்பாக வெளியே இருந்து யாரோ டார்ச் மூலம் பாய்ச்சியதாகவோ, அல்லது ஃப்ளாஷ் காமிராவில் படம் எடுத்ததாகவோ தான் இருக்க வேண்டும் என்று சந்தேகம் எழும்ப வேகமாக வெளியே ஓடி வந்து வீட்டை சுற்றிப் பார்த்தான். யாரும் இல்லை. தோட்டத்தில் யாராவது ஒளிந்து இருக்கலாமோ? அவனுக்கு இந்த வேலை தந்தவர்களில் யாராவது ஒருவரோ, அவர்கள் அனுப்பிய ஆள் யாராவதோ இருக்கலாமோ என்றெல்லாம் சந்தேகம் வந்தது. ஆனால் அதே நேரத்தில் அவனை வந்து தீண்டியதாக அவன் உணர்ந்த சக்தி என்ன? அது பிரமையோ?
அவனுக்கு குழப்பமாக இருந்தது. தலை லேசாக வலித்தது. அவர்கள் ஒரு மொபைல் போனைத் தந்து அதில் ஒரு எண்ணிற்கு வேலை முடிந்தவுடன் அழைக்கச் சொல்லி இருந்தார்கள். அவன் வெளியே வந்து அவர்கள் சொன்னபடியே அந்த மொபைல் போனை எடுத்து அந்த எண்ணிற்கு அழைத்துச் சொன்னான்.
“கிழவனைக் கொன்னாச்சு”
“பூஜையறைக்கு வெளிய தானே?”
“ஆமா”
“நீ பூஜையறைக்குள்ளே போகலை அல்லவா?”
“போகலை”
“அந்த சிவலிங்கத்தை தொடலை அல்லவா?”
அவனுக்குக் கோபம் வந்தது. “உள்ளே போகாம எப்படி அதைத் தொட முடியும்? என் கை என்ன பத்தடி நீளமா”
அந்தக் கோபம் தான் அவன் உண்மையைச் சொல்கிறான் என்பதை அந்த மனிதருக்கு உணர்த்தியது போல இருந்தது. அமைதியாகச் சொன்னார். “அங்கேயே இரு. கால் மணி நேரத்தில் என் ஆட்கள் அங்கே வந்து விடுவார்கள்”
அவன் காத்திருந்தான். காத்திருந்த நேரத்தில் ஒவ்வொரு நொடியும் மிக மிக மந்தமாக நகர்ந்தது போல இருந்தது. வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்தான். முதியவரின் உடல் சரிந்து கிடந்தாலும் கால் பத்மாசனத்திலேயே இருந்தது இயல்பில்லாத ஒரு விஷயமாகப் பட்டது. அப்போது தான் அந்தக் கிழவரின் முகம் பார்த்தான். மூக்கிலும் வாயிலும் இரத்தம் வழிந்திருந்தாலும் அந்த முகத்தில் வலியின் சுவடு கொஞ்சம் கூட இல்லை. மாறாக பேரமைதியுடன் அந்த முகம் தெரிந்தது. உள்ளே நுழைந்து ஹாலில் இருந்தபடியே அந்த சிவலிங்கத்தைக் கவனித்தான். சிவலிங்கம் சாதாரணமாகத் தான் தெரிந்தது.
அதைத் தொடக்கூடாது, பூஜையறைக்குள் நுழையக் கூடாது என்று திரும்பத் திரும்ப அவர்கள் சொல்லி இருந்ததும், இப்போதும் கூட அதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டதும் ஏதோ ஒரு ரகசியம் இந்த சிவலிங்கத்தைச் சூழ்ந்து இருப்பதை அவனுக்கு உணர்த்தியது. சிறு வயதிலிருந்தே செய்யாதே என்பதை செய்து பழகியவன் அவன்.... அவன் கடிகாரத்தைப் பார்த்தான். அவர் சொன்ன கணக்குப்படி அவர்கள் வர இன்னும் பன்னிரண்டு நிமிடங்கள் இருக்கின்றன. அதற்குள் அந்த சிவலிங்கத்தில் அப்படி என்ன தான் ரகசியம் புதைந்து இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் வலிமையாக அவனுக்குள்ளே எழ அவன் அந்தப் பூஜையறைக்குள் நுழைந்தான்.
அந்தக் கொலைகாரனிடம் போனில் தெரிவித்தபடி ஆட்கள் மூன்று பேர் இரண்டு கார்களில் சொன்ன நேரத்திற்குள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்த போது அவன் தோட்டத்தின் முன் இரும்புக் கதவு பாதி திறந்து கிடந்தது. மறுபாதிக் கதவின் கீழ்க்கம்பிகளில் ஒன்றைப் பிடித்தபடி அவன் கீழே உட்கார்ந்திருந்தான். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தால் கூட இப்படியா தெருவிளக்கின் ஒளியில் அலட்சியமாக உட்கார்ந்திருப்பது என்று நினைத்தவனாய் முதல் காரில் இருந்து இறங்கியவன் அவனை நெருங்கினான்.
கார்கள் வந்து நின்ற சத்தம் கூட அந்தக் கொலைகாரன் கவனத்தைத் திருப்பவில்லை. அதனால் ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்த முதல் கார் ஆசாமி குனிந்து அந்தக் கொலைகாரனை உற்றுப்பார்த்தான். பின் மூக்கருகே கையை வைத்துப் பார்த்தான். மூச்சில்லை. அப்போது தான் அந்தக் கொலைகாரன் இறந்து போயிருந்தது உறைத்தது. திகைப்புடன் அவனை முதல் கார் ஆசாமி கூர்ந்து பார்த்தான். உடலில் எந்தக் காயமும் இல்லை. முகத்தில் மட்டும் எதையோ பார்த்து பயந்த பீதி பிரதானமாகத் தெரிந்தது. ஏதோ அதிர்ச்சியில் இறந்து போயிருக்க வேண்டும்....
இரண்டாவது காரில் இருந்து ஒருவன் தான் இறங்கி வந்தான். “என்னாச்சு”
“செத்துட்டான்”
“எப்படி?”
“தெரியல. முகத்தப் பார்த்தா ஏதோ பயந்து போன மாதிரி தெரியுது”
“பயமா, இவனுக்கா....” என்று சொன்ன இரண்டாவது கார் ஆசாமி அருகில் வந்து இறந்தவனை உற்றுப்பார்த்தான். அவன் சொன்னது உண்மை என்று தெரிந்தது. தேர்ந்தெடுக்கும் போதே பயமோ, இரக்கமோ, தயக்கமோ இல்லாத ஆளாகப்பார்த்துத் தான் அவர்கள் அவனைத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அப்படிப்பட்ட அவனையே இந்தக் கோலத்தில் பார்த்த போது ஏற்பட்ட அதிர்ச்சியில் ஒருகணம் இரண்டாவது கார் ஆசாமி பேச்சிழந்து போனான்.
“என்ன செய்யலாம்?” முதல் கார் ஆசாமி கேட்டான்.
ஆயிரம் கேள்விகள் மனதில் எழுந்தாலும், இந்த சூழ்நிலையை சிறிதும் எதிர்பாராமலிருந்தாலும் கூட இரண்டாவது கார் ஆசாமி தன்னை உடனடியாக சுதாரித்துக் கொண்டான். ஒரு முறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளி விட்டவன் அமைதியாகச் சொன்னான். “முதலில் இவனுக்கு நாம் கொடுத்த செல்லை எடு”
முதல் கார் ஆசாமி இறந்தவன் சட்டைப்பையில் வைத்திருந்த இரண்டு செல் போன்களை வெளியே எடுத்தான். ஒன்று கொலைகாரனுடையது. இன்னொன்று அவர்கள் அவனுக்குக் கொடுத்தது.
“நம் செல்போனில் வேறு யாரிடமாவது எங்காவது பேசியிருக்கிறானான்னு பார்”
முதல் கார் ஆசாமி தாங்கள் கொடுத்திருந்த செல்போனில் ஆராய்ந்து விட்டுச் சொன்னான். “நம்மிடம் மட்டும் தான் பேசியிருக்கான். வேற எந்தக் காலும் இதுக்கும் வரல. இவனை என்ன பண்ணறது?”
”இவனை சுவரின் மறைவுக்கு இழுத்து விடு. வெளியே இருந்து பார்த்தால் தெரியாதபடி இருந்தால் போதும்”
கவனமாக பிணத்தை சுவர்ப்பக்கம் அவன் இழுத்துப் போட்ட பிறகு இரண்டாம் கார் ஆசாமி சொன்னான். “போய் உள்ளே என்ன நிலவரம்னு பார்க்கலாம் வா”
அவர்கள் இருவரும் வேகமாக வீட்டை நோக்கி நடந்தார்கள். நடக்கும் போது முதல் கார் ஆசாமி கேட்டான். “அவன் பயத்துலயே செத்திருப்பானோ? என்ன ஆகியிருந்திருக்கும்?”
”தெரியல. எனக்கு சந்தேகம், நாம சொன்னதையும் மீறி அந்த பூஜையறைக்குள்ளே நுழைஞ்சிருக்கலாம். ஏதாவது செய்திருக்கலாம்.....”
“அது அவ்வளவு அபாயமானதா?”
இரண்டாம் கார் ஆசாமி பதில் சொல்லவில்லை. அதற்குள் அவர்கள் வீட்டை எட்டி விட்டிருந்தார்கள். சர்வ ஜாக்கிரதையுடன் வாசலிலேயே நின்று கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தார்கள். பத்மாசனத்தோடே கவிழ்ந்திருந்த முதியவர் பிணம் அவர்களை வெறித்துப் பார்த்தது. முகத்தில் இரத்த வரிகள் இருந்தாலும் அவர் முகத்தில் இருந்த அமைதியையும் அவரைக் கொன்றவன் முகத்தில் இருந்த பீதியையும் ஒப்பிடாமல் அவர்களால் இருக்க முடியவில்லை....
“இதென்ன இந்த ஆள் பத்மாசனத்துலயே இருக்கார். இது இயல்பா தெரியலயே...” முதல் கார் ஆசாமிக்குத் தன் திகைப்பை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
“உன்னால கொஞ்ச நேரம் பேசாமல் இருக்க முடியுமா?” என்று குரலை உயர்த்தாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்ன இரண்டாம் கார் ஆசாமி ஹாலை ஆராய்ந்தான். கிழவரின் பிணத்தைத் தவிர வேறு எதுவும் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றவில்லை.
உள்ளே அவன் நுழைந்தான். படபடக்கும் இதயத்துடன் பூஜையறையைப் பார்த்தான். சிவலிங்கம் இன்னும் அங்கேயே இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான் அவன். அவனைத் தொடர்ந்து முதல் கார் ஆசாமியும் உள்ளே நுழைந்தான்.
இரண்டாம் கார் ஆசாமி எச்சரித்தான். “எதையும் தொட்டுடாதே. கவனமா இரு”
முதல் கார் ஆசாமி தலையசைத்தான். இருவரும் மெல்ல பூஜையறைக்கு இரண்டடி தள்ளியே நின்று பூஜையறையை நோட்டமிட்டார்கள். பூஜையறையில் திருநீறு டப்பா கவிழ்ந்து திருநீறு தரையில் கொட்டிக் கிடந்தது. ஹாலின் விளக்கொளியில் அதற்கு மேல் பூஜையறையில் வேறு அசாதாரணமானதாக எதுவும் தெரியவில்லை.
இரண்டாம் கார் ஆசாமி தன் கைக்குட்டையை எடுத்து அதைப்பிடித்தபடி ஹாலில் இருந்த பூஜையறை ஸ்விட்ச்சைப் போட்டான். ஓரடி தூரத்தில் இருந்தே பூஜையறையை மேலும் ஆராய்ந்தான். அப்போது தான் பூஜையறையின் ஒரு ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேவார, திருவாசகப் புத்தகங்கள் சரிந்து கிடந்தது தெரிந்தது.
“முட்டாள்... முட்டாள்.... அவன் உள்ளே போயிருக்கிறான்” இரண்டாம் கார் ஆசாமி ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தான். சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்ட அவன் அடுத்தவனிடம் சொன்னான். “அவனை வரச் சொல்...”
முதல் கார் ஆசாமி அவசரமாகப் போனான். வெளியே இருந்த முதல் காரின் பின் கதவைத் திறந்து அங்கு அமர்ந்திருந்தவனிடம் “வாங்க” என்றான்.
இடுப்பில் ஈரத்துண்டை கச்சை கட்டிக் கொண்டிருந்த ஒரு ஆஜானுபாகுவான இளைஞன் காரில் இருந்து இறங்கினான். அவன் செருப்பு இல்லாமல் வெறும் காலுடன் இருந்தான். அவன் நெற்றியிலும், கைகளிலும், புஜங்களிலும், நெஞ்சிலும் திருநீறு பூசி இருந்தான். அவன் வாய் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
இருவரும் உள்ளே போனார்கள். அந்த இளைஞன் அக்கம் பக்கம் பார்க்காமல் நேர் பார்வையுடன் சீரான வேகத்தில் சென்றான். வீட்டினுள்ளே நுழையும் போது முதியவரின் பிணத்தைப் பார்க்க நேர்ந்த போது மட்டும் அவன் ஒரு கணம் அப்படியே நின்றான். அவனையும் அந்த விலகாத பத்மாசனம் திகைப்பை அளித்திருக்க வேண்டும்.
தாமதமாவதை சகிக்க முடியாத இரண்டாம் கார் ஆசாமி அவனுக்கு பூஜையறையைக் கை நீட்டி காண்பித்தான். அந்த இளைஞன் திகைப்பில் இருந்து மீண்டு பூஜையறைக்குள் நுழைந்தான். உள்ளே நுழைந்தவுடன் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தான். மந்திரங்களை உச்சரித்தபடியே அந்த சிலையை அவன் பயபக்தியுடன் தொட்டு வணங்கினான். ஏதோ ஒரு லேசான மின் அதிர்ச்சியை உணர்ந்தது போல அவனுக்கு உடல் சிலிர்த்தது.
அதைக் கவனித்த முதல் கார் ஆசாமி “என்ன?” என்று சற்றே பயத்துடன் கேட்டான்.
அந்த இளைஞன் பதில் சொல்லவில்லை. அவன் பக்கம் திரும்பிப் பார்க்கவும் இல்லை. இரண்டாம் கார் ஆசாமி தன் சகாவிடம் அவசரமாய் தாழ்ந்த குரலில் எச்சரித்தான். “அவன் கவனம் இப்போது எதிலும் திரும்பக்கூடாது. நீ எதுவும் கேட்காதே....பேசாமலிரு”
முதல் கார் ஆசாமி அதற்குப் பிறகு வாயைத் திறக்கவில்லை.
அந்த இளைஞன் கை கூப்பி ஒரு முறை வணங்கி விட்டு அந்த சிவலிங்கத்தைத் தூக்கினான். அந்த சிவலிங்கம் மிக அதிக கனம் இல்லை. சுமார் பத்து அல்லது பன்னிரண்டு கிலோ தான் இருக்கும். அதைத் தூக்கிக் கொண்டு அந்த இளைஞன் வெளியே வந்தான். அவன் உதடுகள் ஏதோ மந்திரத்தை உச்சரித்தபடி இருந்தன.
வேகமாக சிவலிங்கத்துடன் வெளியே செல்ல மற்ற இருவரும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். அந்த இளைஞன் தன் கையில் இருக்கும் சிவலிங்கம் கனத்துக் கொண்டே போவது போல் உணர்ந்தான். அவன் ஆரம்பத்திலேயே எச்சரிக்கப்பட்டிருந்தான். ” அந்த சிவலிங்கம் இங்கு வந்து சேர்வதற்குள் நீ எதிர்பாராத எத்தனையோ நடக்கலாம். சிவலிங்கம் உன் கையில் இருக்கும் போது பிரளயமே ஆனாலும் சரி, இந்த மந்திரத்தை சொல்வதை மட்டும் நீ நிறுத்தி விடக்கூடாது. இது தான் உன் பாதுகாப்பு கவசம். அதே போல் அந்த சிவலிங்கத்தை எந்தக் காரணம் கொண்டும் கீழேயும் போட்டு விடக்கூடாது...”
அந்த நள்ளிரவுக் குளிரிலும் அந்த இளைஞனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. சிவலிங்கம் அநியாயத்திற்கு எடை கூடிக்கொண்டு போனது. ஏதோ ஒரு அசௌகரியத்தை உடலெல்லாம் அவன் உணர்ந்தான். முன்பே அறிவுறுத்தப்பட்டபடி அவன் அந்த மந்திரத்தை மட்டும் விடாமல் சொல்லிக் கொண்டிருக்க, காரை வந்தடைந்தான்.
முதல் காரின் பின் சீட்டில் முன்பே புதிய பட்டுத்துணி ஒன்று விரிக்கப்பட்டு இருந்தது. அதில் மிகக் கவனமாய் அந்த சிவலிங்கத்தை வைத்து விட்டு அதன் அருகில் அந்த இளைஞன் தானும் அமர்ந்தான். இறக்கி வைத்த பின் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. கார் வேகமாகக் கிளம்பியது.
முதல் காரைத் தொடர்ந்தே இரண்டாவது காரும் வேகமாகத் தொடர்ந்தது. இரண்டாவது கார் ஆசாமி நிம்மதிப் பெருமூச்சு விட்டான். வந்த வேலை நன்றாகவே முடிந்து விட்டது. அந்தக் கொலைகாரன் தான் தேவை இல்லாமல் உயிரை விட்டு விட்டான்.... அவன் எப்படி இறந்தான்? பயமே அறிந்திராத அவன் எதைப்பார்த்து பயந்தான்? கிழவரைக் கொன்று விட்டு தெரிவித்த போது கூட அவன் சாதாரணமாகத் தானே இருந்தான்! பிறகு ஏதோ ஒரு உந்துதலில் அவன் பூஜையறைக்குள் நுழைந்திருக்க வேண்டும். பின் என்ன ஆகியிருந்திருக்கும்?... மனதின் நீண்ட கேள்விகள் செல் போன் சத்தத்தில் அறுபட்டன. செல் போனை எடுத்துப் பேசினான். “ஹலோ”
முதல் கார் ஆசாமி தான் பேசினான். “ஏ.சி போட்டுக்கூட இவனுக்கு அதிகமா வியர்க்குது. ஏதோ ஜுரத்தில் இருக்கிற மாதிரி தோணுது. இவ்வளவு நேரமா மந்திரத்தை மெல்ல உச்சரிச்சிட்டு இருந்தவன் சத்தமாய் சொல்ல ஆரம்பிச்சிருக்கான். ஏதோ பைத்தியம் பிடிச்சிட்ட மாதிரி தோணுது. என்ன செய்யறது?” அவன் குரலில் பயம் தொனித்தது.
இரண்டாம் கார் ஆசாமி காதில் அந்த இளைஞன் சத்தமாகச் சொல்லும் மந்திரம் நன்றாகவே கேட்டது. இரண்டாம் கார் ஆசாமி அமைதியாகச் சொன்னான். “இதுல நாம் செய்யறதுக்கு எதுவுமில்லை. சீக்கிரமா அந்த சிலையை அங்கே சேர்த்திட்டா போதும். மீதியை அவர் பார்த்துக்குவார். நீ கண்டுக்காதே”
ஆனால் முதல் கார் ஆசாமிக்கு அப்படி இருக்க முடியவில்லை. நடக்கிற எதுவுமே இயல்பானதாக இல்லை.... ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்று தோன்ற ஆரம்பித்தது.
... ... ...
படிக்கக் கையில் எடுத்தால் பின் முடிக்காமல் கீழே வைப்பது கஷ்டமான மிக அருமையான நாவல் இது.
ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
(அல்லது)
இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.
தோல்வி என்பது இடைவேளை!
தோல்வி என்பது இடைவேளை
என்.கணேசனின் இந்த நூல் அவர் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு. இதில் 33 தன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்றக் கட்டுரைகள் இருக்கின்றன. வெற்றிக்கும் சாதனைக்கும் வேண்டிய அனைத்து விஷயங்களையும் அடக்கிய இந்த நூல் தற்போது அமேசான் கிண்டிலில் இந்த நூல் இருக்கிறது.
புத்தகத்தை அமேசானில் வாங்க லிங்க்
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
தோல்வி என்பது இடைவேளையில் உள்ள கட்டுரைத் தலைப்புகள்
1. முடியாதது முயலாதது மட்டுமே!
2. அவசரம் தேவையா?
3. நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்!
4. உங்கள் கோப்பை நிறைந்திருக்கிறதா?
5. வெற்றி=1%அறிவு+99% உழைப்பு
6. எதிர்பாருங்கள் - உங்களிடம் மட்டும்
7. விஷவலையில் விழாதீர்கள்
8. நீங்கள் ஒரு காந்தம்!
9. கனவு காணத் தயங்காதீர்கள்!
10. கழுதையிடமும் கற்கலாம்!
11. தோல்வி நிறைய கற்றுத் தரும்!
12. வெற்றிக்கு ஏழு குறள்கள்
13. யார் மாற வேண்டும்?
14. மறக்கும் கலை
15. சிகரங்களும், சமவெளிகளும்!
16. நாம் வாழ மறக்கிறோமா?
17. எதையும் யாரையும் ஒப்பிடாதீர்கள்!
18. ஒரு நிமிடம் நிதானியுங்கள்!
19. கோபத்தைக் களைவது எப்படி?
20. உங்களுக்குப் பிரச்னையா? இதை அவசியம் படியுங்கள்!
21. ஆகாது-முடியாது-நடக்காது
22. தன்னம்பிக்கையும், கர்வமும்!
23. நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா?
24. தினமும் ஒரு டெபாசிட்!
25. திறமை இருந்தும் தோல்வி ஏன்?
26. தோல்வி என்பது இடைவேளை!
27. உள்ளே ஒரு எதிரி!
28. உங்களைத் தொலைத்து விடாதீர்கள்!
29. உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்?
30. வாழ்க்கையில் ஒரு சவால்!
31. விமர்சனங்களால் வீழ்ந்து விடாதீர்கள்!
32. என்றேனும் ஒரு நாள்
33. செக்குமாடாய் உழைக்காதீர்கள்!
தோல்வியால் துவண்டிருப்பவர்களும், தன்னம்பிக்கை இல்லாமல் தவிப்பவர்களும், பழைய தவறுகளின் விளைவுகளால் விரக்தி அடைந்திருப்பவர்களும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது. அவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும், வெற்றி அடையத் துடிப்பவர்களும் இந்த நூலைப் படிக்காமல் இருந்து விடாதீர்கள். இது உங்கள் தவறான மனநிலைகளை மாற்றி வெற்றியடைய வைக்கும் என்பது உறுதி!
வியாழன், 30 டிசம்பர், 2021
பிரசாதம்
பிரசாதம் (ஆத்ம தேடலும் தெளிவும்)
திரு என்.கணேசனின் இந்த நூல் தற்போது அமேசான் கிண்டிலில் மின்னூலாக இருக்கிறது.
லிங்க் https://www.amazon.in/dp/B08429C2L1
புத்தகத்தை அமேசானில் வாங்க லிங்க்
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
முன்னுரை
ஆன்மீகம் மனிதனை இறைநிலையை உணரவும்
பிரதிபலிக்கவும் தூண்டுகிறது என்பதே அதன் நோக்கமும் அவசியமுமாக இருக்கிறது.
ஆன்மீகத்தின் மூலமாக இறைவனின் உள்ளம் குளிர வைக்கவும், அதன் மூலமாக அருள் பெறவும்
மனிதன் முயல்வது அவனது ஞானத்தின் குறைபாடாகவே கருத வேண்டும். ஏனென்றால் உலகத்தைப்
படைத்துக் காக்கும் இறைவன் தன் படைப்புகள் தன்னைத் தொழ வேண்டும் என்றும், கௌரவிக்க
வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார் என்று நினைப்பதே இறைவனைத் தன் தரத்துக்கு
மனிதன் இழுக்கும் முயற்சியாகவே எண்ண வேண்டும்.
நம் முன்னோரின் கதைகளிலும், புனித நூல்களிலும் பேரறிவையும், ஞானத்தையும் கொண்ட
ஆழ்ந்த கருத்துகளும் இருக்கின்றன. அதே போல் அறிவுக்கு உகந்ததாய் இல்லாத
கற்பனைகளும், அஞ்ஞான இடைச்செருகல்களும் கூடவே இருக்கத் தான் செய்கின்றன. ஒரு
மனிதன் சொல்லும் சாதாரண வாக்கியமே கூட ஒருவர் இன்னொருவருக்குச் சொல்ல ஆரம்பித்தால்
ஐம்பதாவது ஆள் சொல்லும் வாக்கியம் ஆரம்ப வாக்கியத்துக்குச் சற்றும்
சம்பந்தமில்லாததாகவே இருக்கும் வேடிக்கையை நம்மால் பார்க்க முடியும். அப்படி
இருக்கையில் இறை தூதர்களாலும், ஞானிகளாலும் சொல்லப்பட்ட கருத்துகள் எந்த அளவு அதே
புனிதத்துடன் சரியாக நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன என்பது கேள்விக்குறியே.
இறை வார்த்தைகளாகவும், ஞானிகள் வார்த்தைகளாகவும் இன்று ஆன்மீக மார்க்கத்தில்
சொல்லப்படுபவை எந்த அளவு சரியாக இருக்கும் என்பதை மனிதன் தன் அறிவாலும்,
பக்குவத்தாலுமே அறிய முடியும். கண்மூடித்தனமான நம்பிக்கைகளும், அறிவைப்
பயன்படுத்தாத பின்பற்றல்களும் ஆன்மீகத்தை மூட நம்பிக்கைகளாகவும், நாத்திகத்தை விட
மோசமானதாக ஆக்கி விட முடியும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
தற்காலிக மனிதனுக்கு ஆன்மீகத் தேடல் இருக்கிறது. ஆனால் எது சரி எது சரியல்ல
என்பதில் தெளிவில்லாமல் குழப்பமே அவனிடம் மிஞ்சியிருக்கிறது. அந்தக் குழப்பத்தைப்
பயன்படுத்திக் கொண்டு எத்தனையோ போலி ஆன்மீகவாதிகள் தங்களை வேகமாக வளர்த்துக்
கொள்கிறார்கள். ஆன்மீகத்தில் தெளிவிருந்தால் மட்டுமே இது போன்ற போலிகளிடம் ஏமாறும்
அவசியமோ அவலமோ இல்லாமல் போகும்.
ஆகவே உண்மையின் உரைகல் நம் அறிவாகவும், ஞானமாகவும், பக்குவமாகவுமே இருக்க
வேண்டும். அப்படி உண்மையாக இருப்பதையே ஒருவன் ஆன்மீகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த ஆன்மீகமே ஒருவனை இறைநிலைக்கும், மானுட நன்மைக்குமாய் உயர்த்தும். அந்த
ஆன்மீகமே நாம் நாட வேண்டியதும். பின்பற்ற வேண்டியதுமான மார்க்கம்.
அந்த வகை ஆன்மீகத்தையும், ஞானத்தையும், வாழ்க்கை நெறியையும் அலசும் சில சிந்தனைகளைத்
தொகுத்து “பிரசாதம்” என்ற இந்த நூலில் நான் தந்திருக்கிறேன். இந்த ஆத்ம சிந்தனைகள்
உங்களுக்குள் ஒரு தேடலையும், தெளிவையும், மாற்றத்தையும் கண்டிப்பாக ஏற்படுத்தும்
என்பதற்கு உறுதி அளிக்கிறேன்.
அன்புடன்
என்.கணேசன்
இந்த நூலில் முப்பது ஆன்மீகக் கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஆழமான கருத்துகளைக் கொண்டதாகவும், ஆத்ம தேடலுக்குத் தெளிவைத் தருவனவாகவும் இருக்கின்றன. ஆன்மீகத் தேடல் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும்.
என்.கணேசன் நூல்கள் வலைப்பூ!
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
எழுத்தாளர் என்.கணேசன் எழுதிய நூல்கள், நூல்களிலிருந்து மேற்கோள்கள், வெளியாகவிருக்கும் நூல்கள் குறித்த விவரங்கள் ஆகியவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்தப் பிரத்தியேக வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
எழுத்தாளர் என்.கணேசனின் எழுத்துக்கள், காணொலிகள் அவரது வலைப்பூவில் இருந்த போதிலும் நூல்கள் குறித்த விவரங்களை அவரது நூற்றுக் கணக்கான பதிவுகளிலிருந்து தேடிக் கண்டுபிடிப்பதில் வாசகர்கள் சிரமத்தை உணரும் வாய்ப்பு அதிகம். மேலும் அவரது நூல்கள் ப்ளாக்ஹோல் மீடியா, தந்தி பதிப்பகம், அமேசான், அமேசான் கிண்டில் என பலவித பதிப்புகளில் அச்சு நூல்களாகவும், மின்னூல்களாகவும் வெளியாகியுள்ளன. அவரது எதிர்கால நூல்கள் N.Ganeshan Books என்ற புதிய பதிப்பத்தால் வெளியிடப்பட உள்ளன. எனவே அவரது நூல்களுக்கு என்று ஒரு பிரத்தியேக வலைப்பூ இருப்பது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தோன்றியதன் விளைவு இந்த வலைப்பூ.
இது வரை அவர் எழுதிய நூல்கள் குறித்த முழுவிவரங்கள் தனித்தனியாக இனி தருகிறோம்.
நன்றி.
ஆன்லைனில் அமேசானில் என்.கணேசனின் நூல்களை வாங்க. லிங்க்-
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
(அல்லது)
அவர் நூல்களை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு இலவசம். அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
